அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், தேவதானம்

ranganathar-temple-devathanam
அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில், தேவதானம்

   இறைவன்: ரங்கநாதர் 
   இறைவி    : ரங்கநாயகி
   விருட்சம்   : பாரிஜாதம் 
   ஆகமம்      : வைகானசம்

 "தேவதானம்" என்பது திருக்கோயில்களைப் பராமரிக்க வரி நீக்கப்பட்டு அளித்த நிலங்களாகும். மன்னர்கள் காலத்தில் இவ்வாறு அளிக்கப்பட்ட நிலங்கள் "தேவதானம்" என்று வழங்கப்பட்டன. "சதுர்வேதி மங்கலம்" "பிரம்மதேயம்" ஆகியவை வேதம் ஓதும் அந்தணர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்களாகும். தேவதானமாக வழங்கப்பட்ட நிலங்கள் "இறையிலி நிலம்" என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திலிருந்து வரும் வருவாய், கோயிலின் பணியாளர் சம்பளம் மற்றும் பராமரிப்புகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.

"தேவதானம்" என்பது "கடவுளின் பரிசு" என்றும் "கடவுளுக்காக வழங்கப்பட்ட பரிசு" என்றும் பொருள்படும். மன்னர்கள் காலத்தில் கடவுளுக்காக தானமாக வழங்கப்பட்ட ஊரே "தேவதானம்" என்று வழங்கப்படுகின்றது. இவ்வாறு "தேவதானம்"என்று வழங்கப்படும் ஒரு ஊர் திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் அமைந்துள்ளது.

இந்த ஊரில் அருள்மிகு ரங்கநாயகித் தாயார் சமேத ரங்கநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. வைணவர்களின் முக்கியக் கோயிலான திருவரங்கம் இக்கோயிலுக்குத் தென்பகுதியில் அமைந்துள்ள தால் பக்தர்கள் "தேவதானம்" திருக்கோயிலை "வடதிருவரங்கம்" என்று அழைக்கின்றனர்.

சென்னைக்கு அருகிலேயே உள்ள இத்திருத்தலம் சுமார் 1000 வருடங்கள் புராதனமான திருத்தலமாகும். தேவர்களின் தலைவனான இந்திரன், தேவர்களுக்குப் பரிசளித்த இடம் இத்தலம் என்பதால் இந்த ஊருக்கு "தேவதானம்" என்று பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

 சாளுக்கிய மன்னனின் பக்தி 

சாளுக்கிய மன்னன் தமிழகத்தின் மீது போர் தொடுத்த போது, காவிரிக் கரையில் சயனித்திருக்கும் ரங்கநாதரைக் கண்டு மனம் நெகிழ்ந்துள்ளான். பெருமானின் தரிசனம் அவனது கண்களை விட்டு அகலவில்லை. திருவரங்கம் ரங்கநாதரைப் போன்று ஒரு திருமேனியை  அமைத்து திருக்கோயில் நிர்மாணிக்க வேண்டும் என்ற மன உந்துதல் மன்னனுக்கு ஏற்பட்டது.

பொன்னேரி அருகில் உள்ள இந்த ஊருக்கு சாளுக்கிய மன்னன் வருகை தந்த போது இவ்வூரின் பசுமைச் செழிப்பைக் கண்டு அரங்கமாநகரைப் போன்று இதுவும் ஒரு புண்ணிய பூமியாகக் கருதினான். அப்போது அங்கு களத்தில் கதிர் அடிக்கும் ஒரு விவசாயியைக் கண்டு அவன் அருகில் சென்றான். ஆனால் விவசாயி காணாமல் மறைந்ததைக் கண்டு அவனைத் தேடினான் மன்னன். களைப்பின் காரணமாக நெல் அளக்கும் மரக்காலைத் தன் தலைக்கு வைத்தபடி அந்த விவசாயி ஓரிடத்தில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.

விவசாயியின் அருகில் சென்றான் மன்னன். அருகில் சென்ற மன்னன் திகைத்து ஆச்சரியமடைந்தான். அந்த இடத்தில் அரங்கநாதனே பள்ளிகொண்டு சில வினாடிகள் காட்சி தந்து தனக்கு ஒரு ஆலயம் எழுப்ப அசரீரியாகக் கூறி மறைந்தார். பெருமானின் திரு உள்ளப்படி அந்த இடத்தில் மிகப் பெரிய ஆலயம் அமைக்க முடிவு செய்தான் மன்னன்.

புண்ணியம் வாய்ந்த "கண்டகி" நதியிலிருந்து சாளக்கிராமக் கற்களை எடுத்து வந்து சுதைத் திருமேனியாக ரங்கநாதர் திருவுருவச் சிலையை அமைத்தான் மன்னன்.

அருள்மிகு ரங்கநாதர் 

"வட திருவரங்கம்" என்று வணங்கப்படும் இத்திருக்கோயி லின் கருவறையில் அருள்பாலிக் கும் பிரதான மூர்த்தியான ரங்கநாதர் சுமார் 18 அடி நீளமும் 5 அடி உயரம் கொண்டு பிரம்மாண்ட திருமேனியாகக் காட்சி தருகின்றார். அரங்கமா நகரில் அருளும் ரங்கநாதரின் தரிசனம் கண்ட திருப்பாணாழ்வார் "அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே," என்று மெய்சிலிர்த்த அனுபவம் தேவதானம் பெருமானைக் கண்டு தரிசித்ததும் நமக்கும் ஏற்படுகின்றது. ரங்கநாதப் பெருமானின் இந்த மூல விக்ரகம் முழுவதும் சாளக்கிராமத் திருமேனியைக் கொண்டு சுதை சிற்பமாக வடிக்கப்பட்டதாகும்.

ஆதிசேடன் குடைபிடிக்க அவரது திருமஞ்சத்தில் மரக்கால் மீது தன் சிரசினை வைத்து ரங்கநாதர் அறி துயில் கொண்ட நிலையில் திருக்காட்சி தருகின்றார். ரங்கநாதரின் திருவடிக்கு அருகில் ஸ்ரீதேவியும் பூமிதேவியும் அருள் பாலிக்கின்றனர். பெருமானின் நாபிக் கமலத்திலிருந்து நான்முகன் திருக்காட்சி தருகின்றார். பெருமானின் திருப்பாதங்களுக்கு அருகில் தும்புரு முனிவர் மற்றும் பக்தஅனுமன் திருமேனிகளையும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

கருவறையில் உற்சவர் மூர்த்தங்களான ரங்கநாதர் தேவியர் இருவருடன் அருள் பாலிக்கின்றார். உற்சவ மூர்த்திக்கு அருகில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்தில் அருள்மிகு சீனிவாசப் பெருமானின் சிலை உள்ளது.

கருவறைக்கு அருகிலுள்ள மகா மண்டபத்தில் மணவாள மாமுனிகள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், குலசேகராழ்வார், திருமழிசை யாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், மதுரகவியாழ்வார் மற்றும் ராமானுஜர் ஆகியோரின் சிலைகள் உள்ளன. நிகமாந்த மகா தேசிகன் மற்றும் வேணுகோபாலன் சிலைகள் மேற்கு நோக்கி அருள் பாலிக்கின்றன. அருகிலுள்ள ஏரியிலிருந்து நீண்ட காலத்திற்கு முன்பாகக் கண்டெடுக்கப்பட்ட லட்சுமி நாராயணரின் சிலையும் திருக்கோயிலில் வைக்கப்பட் டுள்ளது.

ரங்கநாயகித் தாயார் 

கோயிலின் வெளிப்புறத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் அருள்மிகு ரங்கநாயகித் தாயாரின் திருச்சந்நிதி உள்ளது. சக்கரத்தாழ்வார், பின்புறம் யோக நரசிம்மர், ஆண்டாள், அனுமன் ஆகிய சந்நிதிகளும் இத்திருக்கோயிலில் உள்ளது.

தேவதானத்தில் அருள் பாலிக்கும் ரங்கநாதப் பெருமானை அமாவாசை நாட்களிலும் சனிக்கிழமை களிலும் பொதுவாக சுக்ர ஓரையிலும் வழிபட நினைத்த காரியங்கள் நிறைவேறும் என தெரிவிக்கின்றனர் பக்தர்கள்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் இருப்புப் பாதை வழித்தடத்தில் பொன்னேரி ரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தேவதானம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோயில்.

மீஞ்சூர் ரயில் நிலையத்தி லிருந்து தேவதானம் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. மீஞ்சூர் ரயில் நிலையத்தி லிருந்து தேவதானம் திருத்தலம் செல்ல ஆட்டோ வசதிகள் உள்ளன.

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் 7.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

சனிக்கிழமைகளில் காலை 6:00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் திருக்கோயில் நடை திறந்திருக்கும்.

மேலும் விவரங்களுக்கு இத்திருக்கோயிலின் அறங்காவலர் திரு கோபிநாத் ராஜு அவர்களை 09087475282 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.