தீபாவளி லஷ்மி குபேரன் பூஜை பலன்கள்!
தீபாவளி காலத்தின் முக்கியவழிபாடு லஷ்மி வழிபாடு, குபேரனுக்கான பூஜையும் அதுதான், சிலர் இதனை தாந்த்ரோஸ் இரவில் செய்வார்கள், சிலர் தீபாவளி மாலையில் கொண்டாடுவார்கள், ஆனால் தீபாவளி மாலையில் இதனை கொண்டாடுவதுதான் இந்து மரபு என்கின்றது சாஸ்திரம்
லட்சுமிக்களில் பல வகை உண்டு, இந்த லஷ்மி அதாவது பாற்கடலில் இருந்து வெளிபட்ட லஷ்மி குபேர சம்பத்தினை தரும் திருமகள்
இந்துமதம் தீபாவளி காலத்தை மிக அழகாக அதன் பொருள் உணர்ந்து கொண்டாட சொன்னது, பசுவினை வணங்கி புண்ணியம் தேடியபின் உடல் ஆரோக்கியத்துக்காக தேக நலனுக்காக தன்வந்திரியினை வழிபட சொன்னது
பசுவைபோல் அமைதியான மனமும், நல்ல ஆரோக்கியமான உடலும் நல்ல அறிவான தெளிவான உழைப்பை கொடுக்கும், அந்த உழைப்பு செல்வத்தை கொடுக்கும்
செல்வம் என்பது வானில் இருந்து கொட்ட கூடியது அல்ல, விதிபலனாய் அப்படி சிலருக்கு கிடைத்தாலும் அதன் அடிப்படை தன்மை அறிவோடு கூடிய கவனமான உழைப்பில், மிக மிக கூர்ந்த ஞானத்துடன் உழைக்கும் உழைப்பில் செல்வம் தானாக கொட்டும் என்பது
இந்த அறிவை பெற தெளிவினை பெற, சரியான வாய்ப்பில் கொக்குபோல் பாய்ந்து அள்ளும் அறிவினை பெற லஷ்மியினை வணங்க சொன்னார்கள் இந்துக்கள்
ஒருவன் எவ்வளவு அறிவுள்ளவன் என்றாலும், எவ்வளவு ஆற்றல் உள்ளவன் திறமையானவன் என்றாலும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் வாய்த்தல் வேண்டும், அந்த வரத்தை தருபவள் லட்சுமி தேவி
இதனால் தன திரையோதசி என திரையோதசியில் தொடங்கும் தீபாவளி வழிபாடு அமாவாசை அன்று அவள் வழிபாட்டிலே நிறைவடைகின்றது
அன்று உப்பு, மஞ்சள், அரிசி, தங்கம் என இந்த மங்கள பொருட்களை வைத்து, வீட்டினை முழுக்க சுத்தம் செய்து துடைத்து வீடெல்லாம் நறுமண புகையிட்டு வைத்தல் நன்று
பெண்கள் மகாலெட்சுமியின் வடிவம் என்பதால் அன்று வீட்டிலுள்ள பெண்கள் பட்டாடை அனிந்து நகைகள் பூட்டி பூச்சூடி மங்களகரமாக வலம் வருதல் நன்று, கைகளில் வளையல்கள் அவசியம்
பெண்கள் மகிழ்ச்சியாக இருக்குமிடத்தில் அவர்கள் கைவளையல்கள் ஒலிக்குமிடத்தில் நான் இருப்பேன் அங்கே குபேரனின் அருள் இருக்கும் என்பது லஷ்மிதேவி அருளிய திருவாக்கு
அதனாலே கோலாட்டம், கும்மி என பெண்களை ஆடவைத்து கொண்டாடியது இந்து சமூகம்
(இன்றும் வடநாட்டில் தாண்டியா போன்ற நடனங்கள் அப்படி நட்ப்பதும், குஜராத்திகள் மார்வாடிகளிடம் செல்வம் கொட்டி கிடப்பதும் அதற்கான சாட்சிகள்)
அந்த லட்சுமி தேவியின் வாக்குபடி பெண்கள் நல்ல அலங்காரம் செய்து வளைகரத்துடன் பூஜைக்கு தயாராகுதல் நன்று
அன்று மாலை ஆறுமணிக்கு அந்த பூஜையினை செய்வார்கள், மகாலஷ்மி வரும் நேரம் அந்த ச்ந்திபொழுது என்பதால் அதுதான் சரியான தருணம்
வாசலில் மகாலஷ்மி கோலமும் பூஜை அறையில் குபேர கோலமும் இட்டு அன்னையினை வரவேற்க வேண்டும்
பூஜை அறையில் எப்படி வழிபட வேண்டும் என்பதையும் இந்துமதம் சொல்கின்றது
மஞ்சளில் பிள்ளையார் செய்து அதற்கு குங்குமிட்டு பின் விநாயக ஸோஸ்திரம், விநாயக அஷ்டோத்திரம் சொல்லி வழிபாட்டினை தொடங்க வேண்டும், ஒளவையாரின் விநாயக பாடல்களையும் பாடி தொடங்கலாம்
பின் குபேர ய்ந்திரம் அல்லது குபேர மகாலட்சுமி படத்தை கிழக்கு நோக்கி வைத்து அதன்முன் வாழை இலைவிரித்து அதில் நவதானியங்களை பரப்பி நடுவில் சொம்பில் நீர்வைத்து மாவிலை சொருகி மேலே கும்பமாக தேங்காய் வைத்து அதற்கு மஞ்சள் குங்குமிட்டு வழிபாட்டை தொடங்க வேண்டும்
கும்பத்திற்கு முன்னால் வெற்றிலை பாக்கு பழமெல்லாம் வைத்து பாடல்கள் பாடி தொழவேண்டும்
குபேர துதி, மகாலஷ்மி அஷ்டகம் , கனகதாரா ஸ்ஸோஸ்திரம் என எல்லா மகாலஷ்மி பாடல்களையும் பாடி துதித்தல் நன்று
நாணயங்களின் ஓசை இந்த பூஜையில் நன்று, நாணயங்களால் அபிஷேகம் செய்து அந்த ஓசை எழ எழ 109 முறை குபேர துதி சொல்லி அவனை அழைத்தல் வேண்டும்
இந்த இனிய ஓசையில் மகாலஷ்மியின் அருளில் குபேரன் பெரும் செல்வத்தை தருவான்
இந்த பூஜை முடிந்ததும் பால் பாயாச நைவேத்தியம் செய்து படைத்துவிட்டு பரிமாறுதல் நல்லது,லட்சுமி அதில் அகமகிழ்வாள்
அன்று இனிப்புதானம் அவசியம், குறைந்தபட்சம் இனிப்பை எறும்புக்கு இட்டாலும் பெரும் பலன் உண்டு
இவ்வுலகில் வாழ செல்வம் அவசியம், அந்த செல்வத்தின் தேடலில் சிக்கி கொள்ளாமல் ஆத்மாவினை காத்து கொள்ளலும் அவசியம்
பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை என வள்ளுவன் சும்மா சொல்லிவிடவில்லை, இந்த உலகில் அறம் வாழவும், தான தர்மம் செய்யவும், அடியார்களை உபசரிக்கவும், ஒரு துறவியினை நிம்மதியாக வாழவைக்கவும் பொருள் அவசியம்
பொருளின் தேடல்தான் ஒவ்வொருவர் கர்மாவினையும் செய்யவைக்கின்றது, லவுகீக க்டமைகளுக்கு அதுதான் அவசியம் அதே நேரம் அதில் சிக்கி கொள்ளாமல் இருத்தலும் அதிலே திளைத்து வீழ்ந்துவிடாமல் இருப்பதும் அவசியம்
நெருப்பை எப்படி பக்குவமாக கையாள வேண்டுமோ அப்படித்தான் செல்வத்தையும் பக்குவமாக கையாள வேண்டும், அதை போதிக்கும் நாள்தான் அந்த வரத்தை பெற்றுகொள்ளும் நாள்தான் குபேரபூஜை எனும் இந்நாள்
பாற்கடலில் லஷ்மி தேவியின் அவதாரம் பற்றி தெளிவாக சொல்லபடுகின்றது, பாற்கடலில் லட்சுமி தோன்றியவுடன் ஆளாளுக்கு அவள் கையில் இருக்கும் மாலை தனக்கு இடும்படி எல்லோரும் கழுத்தை நீட்டினார்கள்
அதாவது தங்கள் கர்மம் எதுவோ கடமை எதுவோ அதை மறந்து லஷ்மியின் அருள் அடைய வந்து நின்றார்கள், ஆனால் விஷ்ணு மட்டும் அவளை ஏறேடுத்தும் பார்க்காமல் தன் கடமையில் சரியாக இருந்தார்
அவரின் அந்த கர்மசிரத்தையினை, கடமையினை கண்டுதான் அவளை லஷ்மி அடைந்தாள் என்பது புராணத்தின் போதனை
ஆம், யார் தன் கர்மத்தை கடமையினை சரியாக செய்வார்களோ அவர்களுக்கு லட்சுமி கடாட்சம் எக்காலமும் உண்டு
இன்று அந்த லஷ்மியிடம் வேண்டிகொண்டால் யாருக்கு என்ன அவசியமோ யாருடைய கர்மாவுக்கு எது தேவையோ அதனை சரியாக தருவாள்
அது செல்வம் மட்டுமல்ல, கல்வி அறிவு ஆற்றல் வீரம் தைரியம் தவம் என ஒவ்வொருவர் கர்மாவுக்கு எது அவசியமோ அதை செவ்வனே தருவாள்
குபேரன் செல்வத்துக்கு மட்டுமல்ல, அதை காக்கும் அறிவு தைரியம் காவல் என எல்லாவற்றுக்கும் அவனே அதிபதி, யட்ச உலக தலைவனான அவனே எல்லா நிதிகளையும் தருவான்
ஆனால் அவன் மகாலட்சுமிக்கு கட்டுபட்டவன், அவள் அருளாலேதா அவன் தன் பொக்கிஷத்தை தரமுடியும்
அதனால் அவளை தொழுது அவளிடமிருந்து குபேர சம்பத்தை பெற்று வாழவேண்டியது ஒவ்வொருவரின் கடமை, அந்த நாள் இது
உரிய பூஜைகளை விதிபடி செய்து விநாயகரை வணங்கி, அன்னை மலாலஷ்மிக்கான் ஸ்ஸோத்திரம் சொல்லி, மகாலஷ்மி அஷ்டகம், கனகதாரா ஸோஸ்திரம் சொல்லி வழிபடுதல் நன்று
குறைந்தது மகாலஷ்மி துதியாவது சொல்லலாம்
"ஓம் பூம் சக்யே ச வித்மஹே
விஷ்ணு பத்னீ ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் அம்ருத வாசினி வித்மஹே
பத்ம லோசனி தீமஹி
தந்தோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் மகாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பந்தாய சதீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்
ஓம் தன தான்யை வித்மஹே
ஸ்ரீ ம்ராதிப்ரியாயை தீமஹி
ஹ்ரீம் ஸ்வாஹா சக்திப்ரசோதயாத்
ஓம் அம்ருத வாசினி வித்மஹே
பத்ம லோசனி தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்"
எனும் துதியினை சொல்லி பாடலாம், பின் மகா லட்சுமியினை இப்படி அழைக்கலாம்
"திருமால் மார்பில் வாழும் லக்ஷ்மி
ஸ்ரீ வைகுண்டம் ஆளும் லக்ஷ்மி
தேவர்கள் போற்றும் மகாலட்சுமி
திருவருள் புரிய வீட்டிற்கு வா"
அவள் வந்தபின் குபேரனை இந்த துதியால் துதிக்கலாம், இதனைத்தான் நாணய ஓசையில் நாணயங்கள் பெண்களின் வளையல் ஒலியுடன் ஒலிக்க ஒலிக்க சொல்லி சொல்லி துதிக்க வேண்டும்
அப்படி அந்த ஓசையில் இந்த ஸ்ரீ குபேரர் துதி சொல்லபடும் போது பெரிய பலன் உண்டு , இந்துக்களின் வழமை அது
"வளம் யாவும் தந்திடுவாய் வைஸ்ரவணா போற்றி
தனம் தந்து காத்திடுவாய் தனபதியே போற்றி
குறைவிலா வாழ்வளிப்பாய் குபேரனே போற்றி
உறைந்திடுவாய் நீ இங்கே உத்தமனே போற்றி
சங்கநிதி பதுமநிதி சார்ந்து நிற்பாய் போற்றி
மங்களங்கள் தந்து எமை மகிழ்விப்பாய் போற்றி
பொங்கிடும் நலம் யாவும் உன்னருளே போற்றி
தங்கிடச் செய்வாய் செல்வம் போற்றினோம் போற்றி"
அளகாபுரி அரசே போற்றி
ஆனந்தம் தரும் அருளே போற்றி
இன்பவளம் அளிப்பாய் போற்றி
ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
ஊக்கம் அளிப்பவனே போற்றி
எளியோனுக்கு அருள்பவனே போற்றி
ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
ஓங்கார பக்தனே போற்றி
கருத்தில் நிறைந்தவனே போற்றி
கனகராஜனே போற்றி
கனகரத்தினமே போற்றி
காசு மாலை அணிந்தவனே போற்றி
கிந்நரர்கள் தலைவனே போற்றி
கீர்த்தி அளிப்பவனே போற்றி
கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
குருவாரப் பிரியனே போற்றி
குணம் தரும் குபேரா போற்றி
குறை தீர்க்கும் குபேரா போற்றி
கும்பத்தில் உறைபவனே போற்றி
குண்டலம் அணிந்தவனே போற்றி
குபேர லோக நாயகனே போற்றி
குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
கேடதனை நீக்கிடுவாய் போற்றி
கேட்டவரம் அளிப்பவனே போற்றி
கோடி நிதி அளிப்பவனே போற்றி
சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
சங்கரர் தோழனே போற்றி
சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
சமயத்தில் அருள்பவனே போற்றி
சத்திய சொரூபனே போற்றி
சாந்த சொரூபனே போற்றி
சித்ரலேகா பிரியனே போற்றி
சித்ரலேகா மணாளனே போற்றி
சிந்தையில் உறைபவனே போற்றி
சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
சிவபூஜை பிரியனே போற்றி
சிவ பக்த நாயகனே போற்றி
சிவ மகா பக்தனே போற்றி
சுந்தரர் பிரியனே போற்றி
சுந்தர நாயகனே போற்றி
சூர்பனகா சகோதரனே போற்றி
செந்தாமரைப் பிரியனே போற்றி
செல்வ வளம் அளிப்பவனே போற்றி
செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
சொக்கநாதர் பிரியனே போற்றி
சௌந்தர்ய ராஜனே போற்றி
ஞான குபேரனே போற்றி
தனம் அளிக்கும் தயாபரா போற்றி
தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
திருவிழி அழகனே போற்றி
திருவுரு அழகனே போற்றி
திருவிளக்கில் உறைவாய் போற்றி
திருநீறு அணிபவனே போற்றி
தீயவை அகற்றுவாய் போற்றி
துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
தூயமனம் படைத்தவனே போற்றி
தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
தேவராஜனே போற்றி
பதுமநிதி பெற்றவனே போற்றி
பரவச நாயகனே போற்றி
பச்சை நிறப் பிரியனே போற்றி
பவுர்ணமி நாயகனே போற்றி
புண்ணிய ஆத்மனே போற்றி
புண்ணியம் அளிப்பவனே போற்றி
புண்ணிய புத்திரனே போற்றி
பொன்னிற முடையோனே போற்றி
பொன் நகை அணிபவனே போற்றி
புன்னகை அரசே போற்றி
பொறுமை கொடுப்பவனே போற்றி
போகம்பல அளிப்பவனே போற்றி
மங்கல முடையோனே போற்றி
மங்களம் அளிப்பவனே போற்றி
மங்களத்தில் உறைவாய் போற்றி
மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
முத்து மாலை அணிபவனே போற்றி
மோகன நாயகனே போற்றி
வறுமை தீர்ப்பவனே போற்றி
வரம் பல அருள்பவனே போற்றி
விஜயம் தரும் விவேகனே போற்றி
வேதம் போற்றும் வித்தகா போற்றி
வைர மாலை அணிபவனே போற்றி
வைகுண்டவாசப் பிரியனே போற்றி
நடராஜர் பிரியனே போற்றி
நவதான்யம் அளிப்பவனே போற்றி
நவரத்தினப் பிரியனே போற்றி
நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
ராவணன் சோதரனே போற்றி
வடதிசை அதிபதியே போற்றி
ரிஷி புத்திரனே போற்றி
ருத்திரப் பிரியனே போற்றி
இருள் நீக்கும் இன்பனே போற்றி
வெண்குதிரை வாகனனே போற்றி
கைலாயப் பிரியனே போற்றி
மனம் விரும்பும் மன்னவனே போற்றி
மணிமகுடம் தரித்தவனே போற்றி
மாட்சிப் பொருளோனே போற்றி
யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
யௌவன நாயகனே போற்றி
வல்லமை பெற்றவனே போற்றி
குபேரா போற்றி போற்றி"
இதனை சொல்லி பூஜையினை முடித்து பாயாசம் உள்ளிட்ட இனிப்புகளை பரிமாறி நிறைவு செய்தல் வேண்டும், அந்த இரவு முழுக்க லட்சுமி குபேரன் அருள் புரியும் இரவு என்பதால் இப்பூஜையினை முடிந்தவ்ரை சிலமணி நேரம் செய்தல் நன்று
இதுதான் தீபாவளி அன்று மாலை செய்யவேண்டிய வழிபாடு , இதனை செய்து வழிபட்டால் பெரும் பலன் நிச்சயம்
( அந்த இரவு சக்திமிக்கது, எதனை லட்சுமிக்கு படைத்து குபேரனிடம் வேண்டுகின்றீர்களோ அது பன்மடங்கு பலநூறுமடங்கு பெருகிவரும், நிச்சயம் வரும், அதை முயற்சித்துபாருங்கள் அடுத்த வருடத்துக்குள் பெரும் மாற்றம் நிகழ்ந்திருக்கும் )
பிரம்ம ரிஷியார்