நான்கு யுகங்களாக அருள்பாலிக்கும் முக்தி ஸ்தலம் திருப்புனவாசல்!

mukthi-thalam-thirupunavasal-sivan-temple
நான்கு யுகங்களாக அருள்பாலிக்கும் முக்தி ஸ்தலம் திருப்புனவாசல்!

இக்கோவிலில் நான்கு யுகத்தை குறிக்கும் வகையில், நான்கு தல விருட்சங்கள் உள்ளன.

கிருதயுகத்தில் சதுர கள்ளியும், திரேதாயுகத்தில் பிரம்மபுரம் என்ற பெயருடன் குருந்த மரத்தையும், துவாபரயுகத்தில் விருத்தகாசி என்ற பெயருடன் மகிழ மரத்தையும், கலியுகத்தில் பழம்பதி என்ற பெயருடன் புன்னை மரத்தையும் தல விருட்சமாக கொண்டுள்ளது.

இங்கு ஐந்து பிள்ளையார் சிலைகள் ஒரே வரிசையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு யுகத்திலும் ஒரு பிள்ளையார் எனவும், நடுவில் மூலவ பெரிய பிள்ளையார் எனவும் கூறப்படுகிறது. 'ஆகண்டல விநாயகர்' என்ற பெயரில் தனிச் சன்னிதியிலும் விநாயகர் வீற்றிருக்கிறார்.

கோவில் கருவறையில் லிங்கம் 9 அடி உயரத்திலும், ஆவுடையார் 82.5 அடி சுற்றளவு கொண்டதாகவும் அமைந்துள்ளது. இவர் 'விருத்தபுரீஸ்வரர்' என அழைக்கப்படுகிறார். 'விருத்தம்' என்றால் 'பழமை' என்று பொருளாகும். இதனால் 'பழம்பதிநாதர்' என்ற பெயரும் வழங்கப்படுகிறது. லிங்கத்திற்கு 3 முழத்திலும், ஆவுடையாருக்கு 30 முழத்திலும் வேட்டி கட்டப்படுகிறது.

இந்த ஆலய இறைவனை வழிபடும் பக்தர்களுக்கு, மறுபிறவி இல்லை என்பது ஐதீகம். அடுத்த பிறவி இன்றி, முக்தி அளிக்கக்கூடிய தலமாக இது விளங்குகிறது.

கஜமுகாசுரனை வெல்ல அருள் வேண்டி விநாயகப் பெருமான் இங்கு வந்து, சிவகங்கையில் நீராடிப் பழம்பதிநாதரின் அருள் பெற்றார்.

நாரதர் வாயிலாக இத்தலப் பெருமையை அறிந்த அங்காரகன் இங்கு வழிபட்டு அருள் பெற்றதால் செவ்வாய்க் கிழமைகளில் வழிபடுவோரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேறும்படி வரம் பெற்றான்.
பிரம்மன் மீண்டும் படைப்புத்தொழிலைப் பெற்றது , சந்திரன் தக்ஷனது சாபத்திலிருந்து விமோசனம் பெற்றது , சுசீலன் என்பவனையும் அவனது மனைவியையும் எமதூதர்கள் கொண்டு செல்ல எத்தனிக்கையில் சிவ கணங்கள் அவர்களை விடுவித்து முக்தி பெற்றது அகத்தியர் திருமணக் கோலம் கண்டது ,

வியாக்கிராசுரன் என்பவனை அம்பிகை ,பத்திர காளி உருவில் அழித்தது மகாலக்ஷ்மி பைரவ மூர்த்தியிடம் மகாவிஷ்ணுவைக் காத்துத் தனது மாங்கல்யத்தையும் காக்க வேண்டி வரம் பெற்றது கௌதம ரிஷியின் சாபம் தீர தேவேந்திரன் தீர்த்தம் ஏற்படுத்தி வழிபாடு செய்தது, ராமன் பூஜித்து அருள் பெற்றது ஆகிய வரலாறுகளை தல புராணம் விரிவாக எடுத்துரைக்கிறது.

இருப்பிடம்: புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் வழியாகவும், காரைக்குடியிலிருந்து தேவகோட்டை, ஓரியூர் வழியாகவும்,

மதுரையிலிருந்து சிவகங்கை,திருவாடானை வழியாகவும், ராமநாதபுரத்திலிருந்து தொண்டி , சுந்தரபாண்டிய(S.P) பட்டணம் வழியாகவும் திருப்புனவாசலை அடையலாம்.