துர்கா பூஜையின் கடைசி நாள் விஜயதசமி!
துர்கா பூஜையின் கடைசி நாள் கொண்டாட்டம் தான் இந்த விஜய தசமி. துர்கா பூஜையில் கொண்டாடப்படும் இந்த விஜய தசமி விழா இந்தியா முழுவதும் வெவ்வேறு முறைகளிலும் வெவ்வேறு பெயர்களிலும் மக்கள் தங்களது வழிபாட்டை செய்து மகிழ்கின்றனர். கல்கத்தாவில் இந்த பூஜை ரெம்ப சிறப்பாக கொண்டாடப்படும். ஒட்டு மொத்த மக்களின் கூட்டமும் இந்த பூஜையில் கலந்து கொண்டு வழிபடுவர்.
இந்த துர்கா பூஜை கிழக்கிந்திய மக்களுக்கு மிகவும் முக்கியமான திருவிழா ஆகும். மேற்கு பெங்காலில் இந்த பூஜையை ஆடம்பர அலங்காரத்துடன் தங்களின் மனம் மற்றும் முகம் நிறைய சந்தோஷத்துடன் எல்லாரும் சேர்ந்து கொண்டாடி மகிழ்வர். எப்படி விநாயகர் பூஜைக்கு மும்பை புகழ் பெற்று விளங்குகிறதோ அதே மாதிரி துர்கா பூஜை கல்கத்தாவில் மிகவும் புகழ் பெற்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
விஜய தசமி துர்கா பூஜையின் இறுதி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த விழா தசமி திதி அன்றோ அல்லது அஸ்வின் மாதத்தின் பத்தாம் நாளோ கொண்டாடப்படும்.
இந்த விஜய தசமி பூஜையானது உங்கள் பக்தி வெளிப்பாட்டிற்கு சரியான கொண்டாட்டம். எல்லா தரப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து அன்புடனும் மகிழ்ச்சியுடனும் ஒருவருக்கொருவர் பக்தியுடன் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த ஒன்பது நாள் விரதமிருந்து கொண்டாடும் தன் பக்தர்களுக்கு ஸ்ரீ துர்கா தேவி, விஜய தசமி அன்று அருள் பொழிகிறாள்.
இந்தியாவில் நிறைய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டாலும் இந்த விஜய தசமி தோன்றியதற்கு பின்னாடி நிறைய வரலாறு கதைகள் இருக்கின்றன. வருகின்ற விஜய தசமி நன்னாளுக்காக இந்த வரலாறு சிறப்பை நாமும் அறிந்து கொள்வோம்.
மஹிஷாசுரனை வதம் செய்ததால் மஹிஷாசுரமர்தனியாக அன்னை துர்கா தேவி காட்சி தருகிறார்.
நவராத்திரி: மகிஷாசுர மர்தினி என பெயர் வரக்காரணம் என்ன...?
முன்னொரு காலத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் யுத்தம் உண்டானது. தேவர்களின் பதவிகள் அனைத்தையும் அசுரர்கள் பெற்றுக்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தினர். இதனால் தேவர்கள் அனைவரும் பிரம்மனிடம் சென்று முறையிட்டனர்.
பிரம்மனின் ஆலோசனைபடி, சிவன் தேவர்களின் துன்பத்தைப் போக்க எண்ணி, மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என்பதை வரமளித்த பிரம்மனிடம் கேட்டு அறிந்தனர். அவ்வரத்திற்கேற்ப ஒரு பெண் சக்தியின் அவசியத்தை அறிந்து, சிவன் தமது சக்தியை வெளிக் கொணர்ந்து ஒரு ஒளியை உருவாக்கினார்.
இதனைப் போன்றே பிரம்மன், விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் போன்ற எண்ணற்ற தேவர்கள் தங்களது உடலில் இருந்து சக்தியினை வெளிக் கொணர்ந்து ஒரே வடிவில், ஒளிவடிவில் பல்லாயிரக் கணக்கான நட்சத்திரங்கள் சேர்ந்து பிரகாசிப்பது போல ஒரு பெண் வடிவை உருவாக்கினர். அந்தச் சக்தியைத் தேவர்களும், கடவுளர்களும் கைகூப்பி வணங்கி நின்றனர். அப்பெண் சக்திக்கு ஒவ்வொரு கடவுளர்களும் தமது ஆயுதங்களை அளித்தனர்.
மகிஷாசுர மர்தினி: மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள். இவள் நான்கு திசைகளைத் திரும்பி பார்க்கும் போது வெள்ளம் கரைபுரண்டது. பிரபஞ்சம் நடுங்கியது. வானுக்கும் பூமிக்கு இடையே உயர்ந்த வடிவுடையவளாக வீற்றிருந்தாள். பிரளயம் உருவானது போல காட்சியளித்தது.
பூமித்தாய் அந்தப் பெண் சக்தியின் பாரத்தைத் தாங்க முடியாமல் சலித்துக் கொண்டாள். மர்த்தினியின் சிம்மாசனமான சிங்கம் கர்சனை செய்தது. மகிசனின் அசுரப் படைகளை தேவி லாவகமாக முறியடித்து அசுரர்களைக் கொய்து, அழித்தாள். அசுரன் மாய வேலைகளினால் உடலினை மாற்றி பல்வேறு வடிவில் தேவியை எதிர்த்தான். இறுதியில் எருமைக் கடாவின் உருவத்தில் இருந்த போது தேவி தமது திரிசூலத்தால் அவனது தலையினைத் துண்டித்தாள். மகிஷன் தேவியால் அழிக்கப்பட்டான். தேவர்கள் மற்றும் கடவுளர்கள் அதனைக் கண்டு ஆனந்தமடைந்து தேவியை வணங்கினர்.
அரக்கர்களின் அரசனான ராவணனை வீழ்த்திய கொண்டாட்டமும் ஒரு சில பகுதிகளில் விஜய தசமி அன்று கொண்டாடப்படுகிறது. தனது மனைவி சீதையை கொடிய அரக்கனான ராவணனிடம் இருந்து காப்பாற்றி அவனை ராமர் வீழ்த்திய கதையும் இந்த திருவிழா நேரங்களில் தசரதா விழாவாக ஒரு சில இடங்களில் கொண்டாடப்படுகிறது.
பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம்
பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டும் என்றும் ஒரு வருடம் அயோத்திய நகரில் கழிக்க வேண்டும் என்றும் அந்த புராணக் காலத்தில் கெளரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடைபெற்ற பகடை சூதாட்ட முடிவில் கூறப்பட்டது. அதன் படி பார்த்தால் இந்த விஜய தசமி நன்னாளில் தான் பாண்டவர்கள் தங்கள் சொந்த அயோத்திய நாட்டிற்கு திரும்பினர் என்ற சிறப்பும் சொல்லப்படுகிறது.
அன்னை துர்கா தேவி கடவுள் சிவபெருமானுடன் இணைந்த நாள்
துர்கா பூஜையின் கடைசி நாளான விஜய தசமி அன்று தனது அவதாரங்களை முடித்து விட்டு அரக்கன் மஹிஷாசுரனையையும் வதம் செய்து விட்டு அன்னை பார்வதி தேவியாக மறுஉருவம் பெற்று கடவுள் எம்பெருமானுடன் இணைந்து காட்சியளித்த நாள் என்ற சிறப்பும் இந்த விஜய தசமி விழாவுக்கு உண்டு. எனவே தான் இந்த ஓன்பது நாளும் பெண்கள் அன்னை துர்கா தேவியை வழிபட்டு பத்தாம் நாள் புதுமணத் தம்பதிகளாக புகுந்த வீட்டில் அடியெடுத்து வைப்பர்.
மைசூர் தசரா திருவிழா
தேவி பராசக்தி சாமுண்டீஸ்வரியாக வடிவம் கொண்டு மகிஷனை சம்ஹாரம் செய்த இடமே மகிஷாபுரம், மஹிஷா மண்டலம், மஹிஷுர் என்ற பல பெயர்களில் அழைக்கப்பட்டு பின்னர் மைசூர் என்று மருவியது. மகிஷ வதம் நடைபெற்ற இந்த இடத்திலேயே நவராத்திரி விழா நடைபெறுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. 412-வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெறும் தசரா விழாவைக்காண உலகெங்கும் இருந்து மக்கள் கூடுவர்.
அன்னையின் அருட்கோலத்தை மார்க்கண்டேய மகரிஷி 8 கரங்களுடன் வடிவமைத்து சாமுண்டீஸ்வரி மலைப்பகுதியில் அமைத்தார். அமர்ந்த கோலத்தில் இன்றும் இந்த அன்னை அருளாசி வழங்கி வருகிறாள்.
* கர்நாடக அரசு மைசூர் தசரா விழாவினை வெகு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. அரசு விழாவாக மன்னர்கள் குடும்பத்தின் முன்னிலையில் இது நடைபெறுகிறது. அரசுப்படைகளின் அணிவகுப்பு, அரசின் பெருமைகளைச் சொல்லும் அலங்கார வண்டிகளின் அணிவகுப்பு என உலகமே வியக்கும் வகையில் இது நடைபெற்று வருகிறது.
ஒரு லட்சம் அலங்கார விளக்குகளால் மைசூர் அரண்மனை அலங்கரிக்கப்பட்டு தசரா நாளில் ஒளிவெள்ளத்தில் மூழ்கி இருக்கும். மைசூர் நகரம் மட்டுமின்றி, சாமுண்டீஸ்வரி மலைகள், பெங்களூரு நகரம் யாவும் விழாக்கோலம் பூண்டு இருக்கும். மைசூர் தசராவின் இன்னொரு சிறப்பு அம்சமான தசரா சிறப்பு பொருட்காட்சி மைசூர் அரண்மனையின் எதிர்ப்புறம் உள்ள தொட்டக்கெரே மைதானத்தில் நடைபெறுகிறது.
* தசரா பண்டிகையை கண்டுகளிக்க இங்கு எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை. எனினும் வசதி கொண்ட மக்களின் விசேஷ தரிசனத்துக்காக தங்க அட்டை என்ற கட்டண வசதி அளிக்கப்படுகிறது. இந்த அட்டையை கொண்டு இரண்டு பெரியவர்கள், ஒரு குழந்தை உள்ளிட்டவர்கள் தசரா விழா நடைபெறும் 11 முக்கிய பகுதிகளுக்கு வசதியாக சென்று வரலாம். சிறப்பு தரிசனம், முன்வரிசை போன்றவைகளை இந்த கட்டணம் பெற்று தரும்.
* தசரா விழாவின் இறுதி நாளான விஜயதசமி அன்று சாமுண்டீஸ்வரியின் பிரம்மாண்ட ஊர்வலம் பண்ணிமண்டபத்தில் நிறைவு பெறுகிறது. அங்கு பஞ்சின கவாயத்து என்ற தீப ஒளி அணிவகுப்பு நடைபெறுகிறது. புராணப் புகழ்பெற்ற ஒரு வன்னி மரத்துக்கு விசேஷ பூஜைகள் செய்யப்படுகிறது. அந்த இடத்தில் இருந்த இதே போன்ற ஒரு வன்னி மரத்தில்தான் பஞ்ச பாண்டவர்கள், தங்களது அஞ்ஞாத வாசத்தின்போது தங்கள் ஆயுதங்களை மறைத்து வைத்து இருந்தார்களாம். அவர்களுக்கு சாமுண்டீஸ்வரி தேவிதான் காட்சி தந்து அருள் செய்தாள் என்று சொல்லப்படுகிறது.
தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா குலசை, என்று அழைக்கப்படும் குலசேகரன்பட்டினம் தென்கோடி தூத்துக்குடி மாவட்டத்தில், அமைந்து தனிச்சிறப்பு பெற்றது. இங்கு அருள்மிகு ஸ்ரீஞானமூர்த்தீஸ்வரர் சமேத அருள்தரும் ஸ்ரீமுத்தாரம்மன் திருக்கோயில் பழம்பெருமை வாய்ந்தது. மைசூர் தசராவிற்கு அடுத்தபடியாக உலக புகழ் பெற்றது குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழா.
மகிஷனை வதம் செய்யும் முத்தாரம்மன்
குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சுமார் 800க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் வருகின்றன. சென்னை, மும்பையிலும் கூட குலசை தசரா குழுக்கள் உள்ளன. வேடமணிந்து பணம் வசூலித்து வந்து முத்தாரம்மனுக்கு காணிக்கையாக செலுத்துவார்கள். முத்தாரம்மன் சிவபெருமானிடம் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக புராண கதை உள்ளது. எனவேதான் சூரசம்ஹரம் நாளில் முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள். விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள். மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம்மன் தேரில் பவனி வருவது சிறப்பு. தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது.