நவராத்திரி கொலு படிகள் சொல்லும் தத்துவம்?

navaratri-kolu-padigal
நவராத்திரி கொலு படிகள் சொல்லும் தத்துவம்?

எதிரிகளை அழிப்பதற்காக சுரதா என்ற மன்னன்,தன் குருவின் ஆலோசனையைக் கேட்டான். தூய்மையான களிமண்ணைக் கொண்டு காளியின் சொரூபத்தைச் செய்து, உண்ணாவிரதம் இருந்து வழிபாடு செய்தால் உன்னுடைய எண்ணம் நிறைவேறும் என்று குரு வெற்றியின் ரகசியத்தை கூறியருளினார்.

குரு கூறியபடி தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு,காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து,காளி தேவியை வேண்டினான் சுரதா மன்னன்.அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து,பின் ஒரு புது யுகத்தையே உண்டு பண்ணினான்.

‘ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை பூஜித்தால், நான் பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங் களையும் அளிப்பேன்’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார்.அதன்படி,சுரதா மகாராஜா செயல்பட்டதால், அவன் பகைவர்களை எளிதில் வீழ்த்தி, அவர்களின் இன்னல்களில் இருந்து விடுதலை பெற்றான்.

எனவே,அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து நவராத்திரி யில் வழிபாடு செய்வது,குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது.
மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து,இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப் படுகின்றன.ஒன்பது படிகள் அமைப்பது மரபு.

ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும். பொம்மைகளை வைக்கும் மரபையும்,அந்த பொம்மைகள் கூறும் தத்துவத்தையும் இங்கு காணலாம்.

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதே ஆகும்.கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பது என்பது பொருளாகும்.

ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூஜிப்பவர்களுக்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றார்.

மரப்பாச்சி பொம்மை
மரப்பாச்சி பொம்மை
மருத்துவ குணம் கொண்ட மரங்களால் செய்யப் படுகிறது. இந்த பொம்மை ஆண் பெண் ஜோடியாகச் செய்யப்படும்.

திருமணமாகி புகுந்த வீட்டிற்குச் செல்லும் பெண்ணிற்குத் தாய் வீட்டு சீதனத்தில் மரப்பாச்சி பொம்மைகள் கொடுப்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்தது. கொலுவில் மரப்பாச்சி பொம்மைகளை வைப்பது வழக்கம்.

முதல் படி
முதல் படியில் செடி,கொடி,காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


இரண்டாம் படி
இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம்.நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.


மூன்றாம் படி
மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.

நான்காம் படி
நான்காம் படியில் நண்டு,வண்டு,தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும்.ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.

ஐந்தாம் படி
ஐந்தாம் படியில் மிருகங்கள்,பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு,பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.

ஆறாம் படி
ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.

ஏழாம் படி
ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.

எட்டாம் படி
எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர்,சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள், பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.

ஒன்பதாம் படி
ஒன்பதாம் படியில் பிரம்மா,விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி,லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும்.

தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.c