இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
டாஸ்மாக் ஆன்லைனில் முன்பதிவை ரத்து செய்யக்கோரி ஐகோர்ட்டில் வழக்கு!
டாஸ்மாக்கில் ஆன்லைன் மூலம் மதுபானம் முன்பதிவு செய்யும் தமிழக அரசின் முடிவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் விரும்பிய மதுபானத்தை ஆன்லைனில் முன்பதிவு செய்து வாங்க புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. இருக்கும் இடத்தில் இருந்தே மதுபான ரகத்தை தேர்வு செய்து அதற்குரிய பணம் கட்டினால் க்யூ ஆர் கோடு வந்துவிடும். க்யூ ஆர் கோடை காண்பித்து டாஸ்மாக் கடையில் மதுபானத்தை வாங்கிக் கொள்ளலாம் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்தது. இதற்கு அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
ஆன்லைனில் முன்பதிவு செய்து டாஸ்மாக் கடைக்குச் சென்றுதான் மதுபானத்தை வாங்க முடியும் என்றும் 21 வயது நிரம்பாதவர்களுக்கு மதுபானம் கிடையாது என்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார். இந்நிலையில் ஆன்லைன் மூலமாக மதுபானம் முன்பதிவு செய்வதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் உறுப்பினரும், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவையின் தலைவருமான கே.பாலு தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், "தமிழ்நாட்டில் 1971ஆம் ஆண்டு வரை இருந்த பூரண மதுவிலக்கு நீக்கப்பட்டு, தற்போது டாஸ்மாக் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், ஊட்டச்சத்துக்களை மக்களிடையே ஊக்குவித்தல், உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள், மதுபானங்களை தடை செய்தல் ஆகியவற்றை வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 47க்கு முரணாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
பள்ளிக்கூடம், கோயில் உள்ளிட்டவைகளுக்கு அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட கடந்த மே 12-ம் தேதி முதல்வர் உத்தரவிட்ட நிலையிலும், அவற்றில் பல கடைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கும் வசதியை தொடங்கிவைத்து டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகஸ்ட் 7 ஆம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.
ஆன்லைன் மூலம் மதுவாங்கும்போது, 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மது வகைகளை வாங்கமுடியாது என்று டாஸ்மாக் நிறுவனம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டலும், பெரியவர்கள் மது வாங்கிய ஆன்லைன் முகவரியைச் கொண்டு சிறுவர்களும் மது வாங்க வாய்ப்பு உள்ளது.
முதியவர்கள், பெண்கள் என்று கால் வலிக்க ரேஷன் கடை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நிற்பவர்களுக்கு இதுபோல ஆன்லைன் பதிவுகள் செய்ய எந்த வசதியும் இல்லை. ஆனால் மது குடிப்பவர்களுக்கு தமிழக அரசு இந்த வசதியை செய்து கொடுத்துள்ளதால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய தீங்கு ஏற்படும்.
எனவே, ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையையும், அதற்கு அனுமதி வழங்கி நிதித்துறை செயலாளர் ஜூலை 24 ஆம் தேதி பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும். வழக்கில் துர்வுகாணப்படும் வரை அவற்றுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.