வாலிகண்டபுரம் வாலீஸ்வரன் கோயில்!

vaalikandapuram-vaaleeswaran-temple
வாலிகண்டபுரம் வாலீஸ்வரன் கோயில்!

நாற்கரச் சாலையிலிருந்து ஐந்து நிமிட நடைப் பயண தூரத்தில் மிகவும் கம்பீரமாக அமைந்துள்ளது அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில். இறைவி  வாலாம்பிகை. 

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக் கோயில். வாலி பூஜை செய்த இறைவனுக்கு வாலீஸ் வரர் என்றும், ஊருக்கு வாலி கொண்டபுரம் என்றும் பெயர். அதுவே மருவி தற்போது வாலிகண்டபுரம். 

ராஜகோபுரத்தின் முன்பாக இடதுபுறம் நடராஜர் மண்டபம். ஆடல்வல்லான் நடராஜப் பெருமானின் திருவுருவம். மண்டபத் தூண்களில்  மயக்கும் சிற்பங்கள். கி.பி. 1514இல் கிருஷ்ண தேவராயர் காலத்தில் கட்டப்பட்ட மண்டபம்.  ராஜகோபுரத்துக்கு நேரெதி ராகவும், நடராஜர் மண்டபத்துக்கு தென் எதிராகவும் சிறிய கல் மண்டபத்தில் பாலகணபதி.  

கோபுரத்தின் உட்புறம் வலது பக்கமாக ஈசான்ய மூலையில்  சரவண தீர்த்தம் எனப்படும் திருக்குளம்.  
திருக்குளத் தூணில் வாலி சிவபூஜை செய்வது போன்ற சிற்பம். இங்கு மட்டுமே என்று எண்ணிட வேண்டாம். திருக் கோயிலில் ஆங்காங்கே மண்டபத் தூண்களில் வாலி சார்ந்த சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. ஒரு கட்டத்தில் பற்பல தூண்களில் வாலி மயமாகவே  காட்சியளிக்கின்றன வெவ்வேறு வகை சிற்பங்கள்.

இத்திருக்கோயிலில் மூன்று இடங்களில் முறையே மூலஸ்தானத்தின் எதிரே அடுத்தடுத்து பின்தொடரும் வரிசையாக பால நந்தி, வாலிப நந்தி, யவ்வன நந்தி என அமையப்பெற்றுள்ளனர். 

மகா மண்டபத்தின் உள்ளே மேற்கு நோக்கி பைரவர்.  இடுப்பிலே நாகப்பாம்பை அரைஞாண் கயிறாகவும், மண்டையோடுகளை பூணூலாகவும் அணிந்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறார். அஷ்டமி பூஜை இங்கு வெகு சிறப்பு.

அர்த்தமண்டப வாசலையொட்டி வலதுபுறம்  கல்யாண விநாயகர். வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள். உள்ளே சென்றால் மூலவர் சன்னிதி. எதிரே பால நந்தி. அதன் தென்புறத்தில் 1008 பாணம் உள்ளடக்கிய ஒரே லிங்கம். கருவறையில் வாலீஸ்வரர் சுயம்பு மூர்த்தியானதால், சற்றே ஒரு பக்கமாக சாய்ந்து காட்சியருளிக் கொண்டிருக்கிறார். 

இங்கு வந்திருந்து பூஜை செய்வித்துதான், எதிராளியின் பலத்திலிருந்து சரி பாதியினைத் தன் பலத்துடன் சேர்த்து பெற்றுக் கொண்டு எவரையும் வீழ்த்தும் சக்தியினை வாலி பெற்றதாகப் புராண வரலாறு.

மகா மண்டபத்தின் உள்ளே தெற்கு நோக்கி துர்க்கை அம்சத்துடன் அன்னை வாலாம்பிகை. நான்கு திருக்கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளாள். 

கருவறைக்குப் பின்புறமாக மகா மண்டபச் சுற்றில் கை பின்னமான தண்டாயுதபாணியும், பின்னமான தட்சிணாமூர்த்தியும் பதிக்கப்பட்டுள்ளனர். காது மடல் நீண்டு தொங்கும் ஆதி தண்டாயுதபாணி. அடுத்து வடமேற்கு மூலையில் ஆதிகாலத்தில் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய கொற்றவை.
மகா மண்டப பிராகாரச் சுற்றில் தென் திசையில் மிகப் பிரம்மாண்டமாக சுமார் ஏழரை அடி உயரத்தில் கையில் வேலுடன் கருணையே வடிவமாகக் காட்சி அளிக்கிறார் தண்டாயுதபாணி. அருணகிரிநாதருக்கு முக்தி இங்குதான் அருளப்பட்டது. 

தண்டாயுதபாணியின் திருமுகம் மேற்குப்புறமாக சற்றே சாய்ந்து நளினமும் சாந்தமும் அருளும் நிறைந்து இங்கு காணப்படுவது மிக மிகச் சிறப்பு. வடக்கு திசைநோக்கிய இந்த தண்டாயுதபாணி, எம பயம் நீக்கி நீண்ட ஆயுளைத் தர வல்லவர்.