காணிப்பாக்கம் கணபதி!

kanippakkam-ganapathy
காணிப்பாக்கம் கணபதி!

ஒவ்வொரு கோயிலுக்கும் பொதுவாக ஒரு அதிசயம் இருக்கும். அவை கடவுளின் சக்தியால் நடக்கிறது என்பது நமது நம்பிக்கை. 500 ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த இந்த ஸ்ரீவரசித்தி விநாயகர் கோயில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் காணிப்பாக்கத்தில் எழில்மிகு அழகோடு உள்ளது. இங்கு, அதிசய ஸ்ரீவரசித்தி விநாயகர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். வரசித்தி விநாயகர் சுயம்புவாக தோன்றிய கிணறு இப்போதும் இங்குள்ளது. இக்கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர்தான் இன்றைக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அந்த ஒரு உத்தரணி தண்ணீரைப் பெற்றுக்கொள்ளத்தான் அங்கே கூட்டம் அலை மோதுகிறது. அதனைப் பருகினால் ஊனம் தீரும் என்றும் நோய்கள் எல்லாம் நீங்கும் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் தோன்றியதே அந்தக் கிணற்றில்தான்! இன்றும் அந்த கிணற்றின் மேல்தான் அவர் காட்சி தருகிறார். அது மட்டுமல்ல, விநாயகரைச் சுற்றி கிணற்று நீர் எப்போதும் ஊறிக்கொண்டேயிருக்கிறது. நம் ஊர் பிள்ளையார்கள் போல் இவருக்குப் பெரிய அலங்காரம் எதுவும் கிடையாது. நீளத் தும்பிக்கை, பெரிய காது, சிறிய கண்கள் என்றெல்லாமும் கிடையாது. கிணற்றில் எப்படித்தானாக,சுயம்புவாகத்தோன்றினாரோ, அதேபோல, எந்த மாறுதலும் இல்லாமல் அப்படியே காட்சியளிக்கிறார். பக்தர்கள் இவரை பயபக்தியுடன் வணங்குகிறார்கள்.