நீட் எதிர்ப்பு போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டியின் மைக் பறிக்கப்பட்டதா?
நீட் எதிர்ப்பு போராட்டத்தில் நடிகை சனம் ஷெட்டி பேசும் போது மைக் பறிக்கப்பட்டதா என்பது குறித்து போராட்ட ஒருங்கிணைப்பாளர் விளக்கம் அளித்துள்ளார். சனம் ஷெட்டி சொன்னது உண்மையா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் உங்களுக்கு அரசியல் குறித்து தெளிவுப்படுத்தினர். என்ன சொன்னார்கள், இங்கு யார் வேண்டுமானாலும் வரட்டும், என்ன வேண்டுமானாலும் பேசட்டும். அவர்களுக்கு எல்லா உரிமையும் கருத்து சுதந்திரமும் இருக்கிறது.
அதில் நல்லவைகளை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் உங்களுக்கு எல்லாம் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் சனம் ஷெட்டியோ நாம் மைக்கை பறித்துவிட்டோம் என சொல்லி வருகிறார். நாம் அவரிடம் இருந்து மைக்கை பிடுங்கவில்லை.
"அவர் பேசும் போது மாணவர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததை அடுத்து மைக்கை கொடுங்கள். நாங்கள் மாணவர்களுக்கு சொல்கிறோம்" என்றுதான் கேட்டோம். அவர் விஜய் ரசிகராக இருக்கட்டும், தவெகவினர் கூட இங்கு வந்து போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள் என்றுதான் சொல்கிறோம்.
கூட்டத்தில் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி இருப்பார்கள். ஆனால் சனம் என்ன சொல்கிறார், இது ஜனநாயக ரீதியில் நடக்கும் போராட்டம் இல்லை என்கிறார். நாம் அவரை பேச விடாமல் தடுத்ததாக சொல்கிறார். நமக்கு அது போல் எந்த எண்ணமும் இல்லை. அப்படி ஒரு சம்பவமும் நடக்கவில்லை. எதிர் கருத்து இருந்தாலும் தெரிவியுங்கள் என்றுதான் கம்யூனிஸ்ட் சித்தாந்தமும் சொல்கிறது.
கரப்பான்பூச்சி கட்சியின் தலைவர் போராட்டத்தின் போது கையில் வைத்திருந்தது அம்பேத்கரின் புகைப்படத்தைத்தானே தவிர வேறு தலைவர்களின் புகைப்படத்தை அல்ல! அம்பேத்கர் சொன்னது என்ன, அறிவார்ந்து செயல்பட்டு அதிகாரத்திற்கு போ என்பதுதான்!
எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். எல்லாருடைய கருத்துகளையும் நாம் ஏற்க வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கை. எல்லாரும் ஆரோக்கியமான விஷயங்களை பேசுங்கள். சினிமா பாட்டாக இருந்தாலும் அது அறிவுசார்ந்த சினிமா பாட்டாக பாடுங்கள். ஆபாச வார்த்தைகள் கொண்ட பாடல்களை தவிர்த்துவிடுங்கள் என்றார்.
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில் சென்னை பாலன் இல்லத்தில் நீட் தேர்வுக்கு எதிராக கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகை சனம் ஷெட்டி போராட்டக் களத்திற்கு சென்றார். அங்கு அவரை பேசவிடாமல் மைக் பிடுங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
மாணவர்கள் மத்தியில் சனம் ஷெட்டி பேசுகையில், "இங்கு எத்தனை பேர் கரப்பான்பூச்சி கட்சியினர்? எத்தனை பேர் மாணவர்கள்? எத்தனை பேர் பொதுமக்கள், இங்கே நடுநிலையோடு இருக்கும் மக்களாகதான் நான் இங்கே நிற்கிறேன். இங்கே பேசுகிறீர்களா இல்லையா என கேட்டார்கள்.
நான் கோபித்துக் கொண்டு வெளியே போய்விட்டேன். ஏனென்றால் இங்கே பேசியவர்களுடைய பேச்சு, கட்டுக்கதைகள், அவர்களது எண்ணங்களில் எனக்கு உடன்பாடு இல்லை. இது மாணவர்களின் போராட்டம். இந்த போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இங்கே நான் வந்திருக்கிறேன். இந்த மேடையை அரசியலுக்காக பயன்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்தான் ஜோக்கர். நாங்கள் கிடையாது.
நான் விஜய்யின் தீவிர ரசிகை, நேற்று கூட ஜனநாயகன் FDFS பார்த்துவிட்டு வந்திருக்கிறேன்" என சனம் பேசிக் கொண்டிருந்த போதே போராட்டக்காரர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
இதையடுத்து சனம் ஷெட்டி, "நான் பேசவா இல்லை போகவா" என கேட்டார். ஆனால் அவரை பேசவிடவில்லை என சொல்லப்படுகிறது. போராட்டக்காரர்களும் கூச்சலிட்டனர். இதனால் கோபமடைந்த சனம், "இது ஜனநாயகன் இல்லை, ஒவ்வொரு குடிமகனுக்கு பேச உரிமை இருக்கிறது. நீங்கள் மாணவர்களுக்காக போராட்டம் செய்யும் போது நான் அவர்களுக்காக மட்டும் தான் பேசுவேன். எவனும் சொல்லி நான் இங்கு வரல. நானா வந்திருக்கேன்" என அவர் சொல்லிக் கொண்டிருந்த போதே மைக்கை அவரிடம் இருந்து பறித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சனம் ஷெட்டி அங்கிருந்து கோபமாக வெளியேறினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் சனம் ஷெட்டி பேசுகையில், "ஒரு படம் பார்த்ததற்கே என்னை ஜோக்கர் என்கிறார்கள். வெற்றி மாறன் எத்தனை படங்களை இயக்கியுள்ளார். அவரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் இருக்கிறாரே, அவரையும் இது போல் சொல்ல முடியுமா? இந்த கூட்டத்தில் ஜனநாயகமே இல்லை. போலியாக கூடியுள்ளார்கள்" என பேசியிருந்தார்.