ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது - சோனம் வாங்சுக்கின் மனைவி குற்றச்சாட்டு

cockroach-janta-party-protest
ராகுல் காந்தியின் போராட்டம் நேர்மையற்றது - சோனம் வாங்சுக்கின் மனைவி குற்றச்சாட்டு

மத்திய கல்வி அமைச்சருக்கு எதிராக மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியின் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இது நேர்மையற்ற போராட்டம் என்று சோனம் வாங்சுக்கின் மனைவி விமர்சித்திருக்கிறார்.

மாணவர்களுக்கு ஆதரவாக சோனம் வாங்சுக் 25வது நாளாக தொடர்ந்து உண்ணாவிரத்தில் ஈடுபட்டிருக்கிறார். இப்படி இருக்கையில் அவரது மனைவி கீதாஞ்சலி ஆங்மோ, ராகுல் காந்தியின் போராட்டத்தை விமர்சித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

இந்தியா டுடே ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "பிரதமர் மோடியின் இல்லம் அருகே ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர் நடத்திய திடீர் போராட்டம் என்பது வெறும் அடையாளப்பூர்வமானது. அதில் உண்மைத்தன்மை இல்லை. அரசியல் தலைவர்கள் தங்கள் செல்வாக்கை காட்ட பிரதமர் இல்லத்திற்கு போவதை விட்டுவிட்டு.. ஜந்தர் மந்தரில் வெயிலிலும், மழையிலும் போராடி வரும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

அரசியல்வாதிகள் சோனம் வாங்சுக்கின் நற்பெயரை தங்களது சுய லாபத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள். இன்றைய இந்தியா விழிப்புணர்வுடன் இருக்கிறது. மக்களை ஏமாற்ற முடியாது" என்று கூறியிருக்கிறார்.

மாணவர்களின் போராட்டம் ஏன்?

நீட் வினாத்தாள் கசிவு, சிபிஎஸ்இ தேர்வு முறைகேடுகள் உள்ளிட்ட விஷயங்களுக்கு பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் மாணவர்களின் கோரிக்கை. கடந்த 25 நாட்களுக்கும் மேலாக டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில், கரப்பான் ஜனதா கட்சியின் சார்பில் மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படி இருக்கையில் கடந்த 20ம் தேதி மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது தடியடி நடத்தப்பட்டது. கண்ணீர் புகை குண்டுகள், பெல்லட் குண்டுகள் மற்றும் மின் அதிர்வு தடிகளும் மாணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.