பிள்ளையார் - சிறுகதை

pillaiyar-short-story
பிள்ளையார் - சிறுகதை

ஆறுமுகம் வழக்கமா பிள்ளையார் சுத்தி(சதூர்த்தி) வாரதுக்கு மூணுமாசம் முன்னாடியே பிள்ளையார் செய்ய ஆரம்பிச்சிடுவாரு. அதுக்கான களிமண் வண்டல்மண் மணல் எல்லாம் கொண்டாந்து சேத்துவைச்சிடுவாரு. ஏன்னா பண்டிகை நெருங்கும்போது டிமாண்டாயிடும். இப்பவேற கம்மாயெல்லாம் காணாமப்போயிடுச்சா. மண்ணு கெடைக்கிறதே அபூர்வமாயிடுச்சு. அதுனால எல்லாம் காசுகுடுத்து மானாமதுரை பக்கம் இருந்து வாங்க வேண்டியதாயிடுச்சு, முன்னாடி பக்கத்துல சும்மா போய் அள்ளிட்டு வாரமாதிரி கெடைச்சது.

வருசாவருசம் பெரியசைஸ் பிள்ளையாருக்கு ஊருகள்ல இருந்து அடவான்ஸ் குடுத்துட்டு ஆடர் பண்ணுவாக அப்புறம் பிள்ளையார் சுத்திக்கி முன்னாடி வந்து லாரில வேன்ல ஏத்திட்டுப் போவாக. அதுமாதிரி இந்தவருசமும் பங்குணில அடவான்ஸ் குடுத்துடுபோயிருந்தாக.அதை நம்பி காசு கடன் வாங்கி மண்ணடிச்சி பெயிண்ட் எல்லாம் வாங்கி பிள்ளையாரச்செஞ்சு வைச்சாச்சு. எல்லாம் அழகா கம்பீரமா விதம் விதமா நிக்கிது. இந்தவாட்டி கொரோனா ஒழிப்புப்பிள்ளையார்தான் புதுசு கொரானாகிருமியை பிள்ளையார் கால்ல போட்டு மிதிக்கிறமாதிரி வடிவம்

பாத்துட்டு எல்லாம் பாராட்டுனாக, அஞ்சடி ஆறடி ஏழடின்னு செலைக நிக்கிது. அட்வான்ஸ் குடுத்த பார்ட்டிகளுக்குப்போன் அடிச்சா அம்புட்டும் ஒழட்டுது. கவருமெண்ட்டுல பெரிய பிள்ளையாருக்குப்பெர்மிசன் குடுக்கலையாம் வந்துரும்ன்னு எதிர்பாக்குறோம் அதுவரை பொறுங்கன்னு சொன்னதை கேட்டதும் ஆறுமுகத்துக்கு கிலியாகிப்போச்சு. ஒரு வேளை பெர்மிசன் வரலைன்னா அவங்க பிள்ளையார்களை வாங்க வரலைன்னா பொழப்பு நாறிப்போகும் . வாங்குன கடனுக்கு வட்டிகட்ட முடியாது என்னப்பா பிள்ளையாரப்பா இப்புடிச்சோதிக்கிறன்னு செஞ்சு வைச்ச பிள்ளையார் செலைகள் கிட்ட பொலம்புனாரு உன்னைய நம்பி தொழில்ல எறங்குனேன் இப்புடிச்சோதிக்கிறயே சாமின்னு வருத்தத்தோட இருந்தாரு.

ஆனா பெர்மிசன் ஒண்ணும் கெடைக்க வழியக்காணோம். ஒவ்வொரு பார்ட்டிக்கா போன் பண்ணுனாரு. ஒருத்தனும் போன எடுக்கமாட்டீன்றான். நாள் நெருங்க நெருங்க பயம் அதிகமாயிடுச்சு. பிள்ளையார் செலைகள் போகுமா போகாதா ந்னு தெரியல

இதுக்கு நடுவில அவரு சம்சாரம் யோசனை சொல்லிச்சி. பெரியபிள்ளையார்தான் பிரச்சனைல இருக்கு சின்னப்பிள்ளையார் செய்வோம் சில்லறை வியாபாரம் பிள்ளையார் சுத்தி அன்னிக்கி பாப்போம் ஒரு அடி அரையடி முக்காலடிபிள்ளையார் செய்வோம். அதுல கொஞ்சம் சமாளிக்கலாமுன்னு சொல்லிச்சி அதுவும் நல்ல யோசனையாப்பட்டது. மிச்ச மிருந்த மண்ணுல சின்னப்பிள்ளையார் அச்சுல போட்டு எடுக்குறதுக்கு ஆறுமுகம் தயார் பண்ணுனாரு. அதுல ஒரு நூறு பிள்ளையார் தயாராச்சு.

இதாவது பொழப்பாகுமா சனங்க வாங்கிட்டுப்போவாகலான்னுதெரியல. திரும்பபிள்ளையாரப்பா நீதான் ஏதாவது வழிபண்ணனுமுன்னு வேண்டிக்கிட்டாரு. குலதெய்வம் அய்யனார்கிட்டயும் மொறையிட்டாரு. எல்லாச்சாமியும் சேந்து ஏதாவது வழிபண்ணுங்க இல்ல என் பொழப்பு அம்புட்டுத்தேன். எந்திரிக்கமுடியாதுன்னு மனசுசுக்குள்ள அழுதாரு

போனவருசம் வெள்ளச்சாமி எக்கச்சக்கமா கடனை வாங்கி மண்பாண்டம் சட்டி பானையெல்லாம் செஞ்சி சுல்லைவைக்கும் போது மழையான மழை வந்து ஊத்து ஊத்துன்னு ஊத்தி அம்புட்டும் வீணாப்போய் அவரு தரையில அடிச்சிட்டு அழுதது ஞாவகம் வந்துச்சு. அப்புறம் கடன் தொல்லைதாங்காம ராத்திரியோட ராத்திரியா ஊரை விட்டு திருப்பூர்க்கு கூலிவேலைக்கி குடும்பத்தோட போனது நெனவுக்கு வந்துச்சு

அந்தமாதிரி ஊரவிட்டு ஓடுற நெலம தனக்கு வந்துருமோன்னு பயந்து போயிட்டாரு. சம்சாரத்தை கூப்புட்டு பேசினாரு. அவரு குரல் நடுங்குச்சு. வேற வழியில்லைன்னா நாமலும் திருப்பூருக்குபோகவேண்டியதுதான் . கடன் காரங்க வந்து கேக்குறப்ப பதில் சொல்ல முடியாது நாண்டுக்கிற மாதிரி கேப்பாக அத மானமுள்ள மனுசன் கேக்கமுடியாது

அதுக்குப்பயந்துக்கிட்டுத்தான் ஊரை விட்டு ஓடுற சம்பவம் நடக்குது. நாம அதுக்கும் தயாராத்தான் இருக்கனும்ன்னு சொன்னப்ப அவனோட சம்சாரம் வெள்ளைச்சாமி போன் நம்பர் என்கிட்ட இருக்கு கேட்டுப்பாப்போம்ன்னு போன் பண்ணா. அங்க வெள்ளச்சாமி சொன்ன பதில் 

கொலைநடுங்கிப்போச்சு. அங்கயே நெலமை மோசமாம். கம்பெனியெல்லாம் பூட்டிக்கெடக்குதாம் . எங்கபாத்தாலும் தொற்று பயம். யாரும் வேலைக்கி நிம்மதியாப் போகமுடியல. தொழில் நசிச்சிப்போய்கெடக்கு ந்னு சொன்னதைக்கேட்டதும் என்ன இது மனுசசாதிக்கு வந்த சோதனை ந்னு கண்ணீர்விட்டாரு.

என்னா பண்ணுறதுன்னு தெரியல. கண்ட கண்ட நெனப்பெல்லாம் வந்துச்சு அவருக்கு. எல்லாரும் ஒரு முடிவுக்கு வந்துறலாமான்னு சம்சாரத்துக்கிட்ட கேட்டப்ப அவ வாயப்பொத்துனா. அப்புடியெல்லாம் பேசாதீங்க. பிள்ளையார் நம்மல கைவிடமாட்டார்ன்னு சொன்னாலே ஒழிய அவளுக்கும் கிலியாத்தான் இருந்துச்சு.

பிள்ளையார் சுத்திக்கி மொதநாள் டவுனுக்குள்ள போய் கடை போட்டு சின்னபிள்ளையார் விக்கிறதுன்னு ஏற்பாடு பண்ணுனாரு. பெரியபிள்ளையார் அட்வான்ஸ் குடுத்தபார்ட்டிகளுக்கு திரும்பபோன போட்டா போன் போகலை. சரின்னு பெரியபிள்ளையார்களை சாக்கபோட்டு மூடிவைச்சிட்டு குட்டியானை வண்டி ஒன்ன ஏற்பாடு செஞ்சி அச்சு மண்ணு எல்லாத்தையும் ஏத்திக்கிட்டு தயார் ஆகிட்டு இருந்தாக. ஏற்கனவே செஞ்ச சின்னபிள்ளையார்களை ஏத்திக்கிட்டு இருந்தப்ப ஒரு கார் வந்துச்சு அது அவுக வீட்டுக்குமுன்னாடி நின்னுச்சு. அதுல இருந்து மூணுபேரு முகக்கவசம் போட்டு எறங்குனாக. பேசுனப்பத்தான் தெரிஞ்சது அடவான்ஸ் குடுத்த பார்ட்டிக. அவங்க மொகத்துல தெளிச்சி யில்ல. ஆறுமுகத்துக்கு கொஞ்சம் பயாமாயிடுச்சு. குடுத்தகாசை கேக்க வந்துட்டாகளோன்னு. அப்ப வந்தவங்கள்ல ஒருத்தர் சொன்னாரு இந்தாபாரு ஆறுமுகம் அரசாங்கம் அனுமதி குடுக்கல. முன்னமாதிரி கொண்டாட. அதுனால விழாக்கொண்டாட முடியலை. ஆடர் குடுத்த பிள்ளையார்களை எடுத்துட்டுப்போகமுடியாது அதுனாலன்னு சொல்லும்போது ஆறுமுகம் கண்ணு கலங்கிடுச்சு. என்ன சொல்லபோறாரோன்னு

அவர் தொடர்ந்தார். அதுனால நாங்க ஒரு முடிவுக்கு வந்துருக்கோம் னார். சொல்லுங்க அய்யான்னு சொல்லும்போதே அடிவயிறு கலங்குச்சு ஆறுமுகத்துக்கு

அவர் சொன்னார் பிள்ளையார் சுத்திக்கின்னு பண்டு இருக்கு. அத அந்த அந்த வருசம் செலவு பண்ணியாகனும். நாங்களும் அட்வான்ஸ் குடுத்துட்டோம் நீங்களும் நம்பி செல செஞ்சிட்டீங்க,.ஆனா அத எடுத்திட்டுப் போகமுடியாது. அதுனால..அது இங்கயே இருக்கட்டும் . ஆனா பேசுன காசை நீங்க மறுக்காம வாங்கிக்கனும். ஏன்னா பிள்ளையார வாங்காம காசும் குடுக்காம ப்போனா அது நம்பிக்கை துரோகம். வியாபாரத்துல நம்பிக்கை துரோகம் குலத்தையே அழிச்சிடும் நாங்க வியாபாரிங்க. அதை முழுசா நம்புறவங்க. எங்களுக்கு வாக்கு முக்கியம். நாக்குதவறினாலும் வாக்குத்தவறமாட்டோம் அதுதான் எங்களை வாழவைக்கும். இந்தாங்க நாங்க பேசுனபணம் இதுல இருக்கு மறுக்காம வாங்கிக்கங்கன்னு மஞ்சப்பைய குடுத்தாரு ஆறுமுகத்துக்கு கண்ணு கலங்கிடுச்சு. 

பையக்குடுத்த அவரு பிள்ளையாரே நேரவந்து குடுத்தமாதிரி தெரிஞ்சது. கையெடுத்துக்கும்புட்டாரு அவரையும் பிள்ளையாரையும். அப்ப ஆறுமுகம் சொன்னாரு நீங்க சொல்றது சரியா இருந்தாக்கூட எதுவுமே குடுக்காம காசவாங்குறது எங்களுக்குப்பழக்கம் இல்லையே. அது சாமிகுத்தம் ஆயிடும் அதுனால நீங்க இந்தப்பணத்தை திரும்ப வாங்கிக்கணும்ன்னு சொன்னாரு அப்ப வந்தவருசொன்னாரு ஏன் அப்புடி நெனைக்கிறீங்க இதை அட்வான்ஸா வைச்சிக்கங்க அடுத்தவருசம் எல்லாத்தையும் சேத்துவைச்சி சிறப்பா கொண்டாடுவோம் எல்லாருக்கும் நல்லகாலம் இந்த பிள்ளயார் சுத்தில இருந்து பொறக்கட்டும். வழக்கமா பண்டிகைகள் எல்லாம் இந்த பிள்ளையார் சுத்தில இருந்துதான் தொடங்கும் ஆவணில பிள்ளையார்சுத்தி ஐப்பசில தீவாளி கார்த்திகைல தீபம் மார்கழில வைகுண்ட ஏகாதேசி தைல பொங்கல்ன்னு எல்லாப்பண்டிகையும் வரிசையா வரும். எல்லாருக்கும் நல்லகாலம் பொறக்குமுன்னு சொன்னப்ப ஆறுமுகம் மனசு நெறஞ்சிச்சி.. அப்ப அவர் சொன்னாரு நீங்க வாங்குன பணத்துக்கு சின்ன புள்ளையார் குடுங்க அதப்பெருசா நெனைச்சி எடுத்துட்டுப்போறோம் பிள்ளையார்ல சிறுசென்ன பெருசென்ன. எல்லாம் சக்தியுள்ள பிள்ளையார்தானேன்னு சொல்லிச்சிரிச்சார்

ஓ தாராளமான்னு சின்னப்பிள்ளையார் செலைகளை ஆறுமுகம் குடுத்தப்ப பிள்ளையார் அவரைப்பாத்து சிரிச்சமாதிரி இருந்துச்சு. ஆறுமுகம் கண் கலங்கினார். பிள்ளையாரப்பா காப்பாத்தீட்டன்னு.

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்