நாகமங்கலம் சிவன் கோயில், அரியலூர்

nagamangalam-sivan-temple
நாகமங்கலம் சிவன் கோயில், அரியலூர்

அரியலூர் தெற்கில் உள்ள வி.கைகாட்டி யின் தெற்கில் செல்லும் விக்கிரமங்கலம் சாலையில் 5 கிமி சென்றால், பிரதான சாலையிலேயே உள்ளது நாகமங்கலம்; அம்மேரி, தவளேரி,சிங்கனேரி களரன் குட்டை மற்றும் நாகமங்கலம் ஏரி எனும் பல நீர் நிலைகள் ஊரை சுற்றி அமைந்துள்ளன. ஊரில் இரு சிவாலயங்கள் உள்ளன. ஊரின் மையத்தில் உள்ளது நாகநாதர் திருக்கோயில், ஊரின் தெற்கில் அம்மேரி ஏரியின் கரையில் உள்ளது கைலாசநாதர் திருக்கோயில்.

நாகதோஷத்தைப் போக்கி மங்கலத்தை அருள்வதால், நாகமங்கலம் என்று பெயர். மேலும், அஷ்டநாகங்கள் வழிபட்ட ஊர்கள் நாகமங்கலம் எனும் பெயரை பெற்றுள்ளன. இந்தத் திருத்தலமும் அவ்வாறாகலாம்.

சில ஆயிரம் வருடங்களின் முன்னம் நாகர் எனும் இன மக்கள் தமிழக இலங்கை பகுதிகளில் வாழ்ந்துள்ளனர். அதன் தொடர்ச்சியா இந்த பெயர் எனவும் ஒரு கேள்வி எழுகிறது.
ஏரிக்கரையில் உள்ள குடியிருப்பு பகுதி வழி ஏரியின் தெற்கு கரையில் சென்றால் கைலாசநாதர் கோயில் உள்ளது?

நூறு வருடங்களுக்கு முன் ஏற்ப்பட்ட பெருமழை வெள்ளத்தில் ஏரிக்கரை உடைந்து சிவாலயம் மண்ணுக்குள் புதையுண்டபின் கோயில் வழிபாடு இன்றி போனதாக கூறுகின்றனர்.
கைலாசநாதர் என்றாலே சோழர் கால சிவனாக இருக்கலாம். பின்னர் பாளையக்காரர்கள் சுண்ணாம்பு கற்கள் கொண்டு இக்கோயிலை திருப்பணிகள் செய்திருக்கலாம். திருக்கோயில் தற்போது ஏரியின் கரையில் பெரிய கருவை காட்டிற்குள் சிக்குண்டு கிடக்கிறது.

சிவன் அம்பிகை சன்னதிகள் முற்றிலும் இடிந்து போய் அதிலிருந்த லிங்க மூர்த்தி மற்றும் நந்தி சண்டேசர் சிலைகள் மட்டும் தோண்டி எடுக்கப்பட்டு தனியாக தகர கொட்டகை ஒன்று போடப்பட்டு அதில் வைத்து நித்ய வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சிவனுக்கு பின்புறம் இருந்த விநாயகர் சிற்றாலயம் மரங்கள் வேரோடி சுவர்கள் பிளந்து விட அதிலிருந்த சிலைகள் ஏதும் கிடைக்கவில்லை. விநாயகர் சன்னதி சுவரில் விநாயகரின் பெயர் செல்வ கணபதி என உள்ளது அத்துடன் ஒரு பாமாலை ஒன்றும் எழுதப்பட்டுள்ளது.

“பிறவா வரம் தரும் மாலையன் தேடும் மாலுகு எட்டா இறவா முக்தியே எளிதாக நல்கும் இரு நிதியம் அறிவு ஆனந்தம் அளிக்கும் அம்பிகாபதியின் கரை கீழ் பிறவா நெறி காட்டின பிள்ளையார் பாதம் பணிந்தேனே !”

மறுபிறப்பு இலாத வரம் தர வல்லவனும், மால் அயன் இருவரும் தேடியும்; திருமாலால் கண்டுபிடிக்க முடியாதவனும் இறவாத முக்தியை நல்லபக்தி உடையோருக்கு எளிதாக தருபவனும் அறிவு ஆனந்தம் எனும் இரு நிதியங்களை தரும் அம்பிகை உடனுறை பதியின் கீழமர்ந்து பிறவா நெறியளிக்கும் பிள்ளையாரின் பாதம் பணிந்தேன். என்பது விளக்கம். இப்பாடல் எளிமையான தமிழில் உள்ளதால் இக்கோயில் சில நூறாண்டுகளின் முன்னம் இப்பகுதியை ஆண்ட அரியலூர் பாளையக்காரர்களால் திருப்பணி செய்து குடமுழுக்கு செய்யப்பட்டிருக்க கூடும்.

இந்த விநாயகர் சன்னதியை ஒட்டி இருக்கும் முருகன் சிற்றாலயமும் மரங்களால் உருக்குலைந்து கிடக்கிறது, விமான பாகம் முற்றிலும் இடிந்து போய்விட்டது. சிலை இருந்த இடத்தில் ஒரு குழி மட்டும் உள்ளது. அதனால் இங்கு இருந்தது பாலமுருகன்,அல்லது பால தண்டாயுதபாணியாக இருக்க கூடும். முருகன் சன்னதிக்குள் விதான கற்பலகையில் மீன் சின்னங்கள், நிலாவை பாம்பு விழுங்கும் செதுக்கல்கள் உள்ளன.

மீன் மற்றும் நாகம் (பாம்பு) ஆகிய இரண்டும் தொன்மையான ஆன்மீகக் குறியீடுகள் ஆகும். மீன் என்பது வளம், மற்றும் நீர் நிலையைக் குறிக்கிறது. நாகம் என்பது சக்தி, குண்டலினி எழுச்சி மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது. பல பண்பாட்டுதகவல்களாக இச்சின்னங்கள் இணைந்து புனிதமாக கருதப்படுகின்றன.

இத்திருக்கோயில் மீட்டெடுக்க இயலாத வகையில் சிதைவுண்டு உள்ளது. அதனால் ஊர் மக்கள் பத்து வருடங்களின் முன்னம் சிலைகளை மட்டும் மீட்டு ஒரு கல்நார் ஒட்டு கொட்டகை ஒன்றை அமைத்து அதில் இறைவனையும் நந்தியையும் வைத்து வழிபாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.இவர்களது பக்தியை மெச்சிய இறைவனே ஆளுயர அம்பிகை சிலை, மற்றும் பெரிய பாலதண்டாயுதபாணி சிலை, மற்றும் பெரிய பைரவர் சிலை ஒன்றையும் அவர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளார் என்றே கூறவேண்டும். இதுமட்டுமல்லாமல் சிறிய விநாயகர் தென்முகன் சிலையும் வந்து சேர்ந்துள்ளது.

தமிழக அரசு புதிய கோயில் ஒன்றை கட்டி தர இசைந்துள்ளதாக திரு சக்திவேல் அவர்கள் (99624 24115) கூறுகிறார். இவர்தான் இந்த இறைவனை கண்ணும் கருத்துமாக கடந்த பத்து வருடங்களாக பூஜை செய்து வருகிறார். பிரதோஷம் சதூர்த்தி, சிவராத்திரி பூஜைகள் என எளிமையாக ஆத்மார்த்த வழிபாடுசெய்கின்றார்.

கண்ணில் கலந்தான் என் கருத்திற் கலந்தான்
என் எண்ணிற் கலந்தே இருக்கின்றான
பண்ணிற் கலந்தான் என் பாட்டில் கலந்தான்
உயிரில் கலந்தான் கருணை கலந்து.... வள்ளலார்