முதல்வர் விஜய் ஆக்ரோஷம் - பச்ச புள்ளைங்களை சீரழிச்சவனை தூக்கி உள்ள வச்சாச்சு!
தமிழகத்தில் பச்ச குழந்தைகளை பல ஆண்டுகளாக சீரழித்த ஒருவனை கைது செய்து உள்ளே வைத்துள்ளோம் என ஜெம் வீரமணி விவகாரம் குறித்து முதல்வர் விஜய் ஆக்ரோஷமாக பேசினார்.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து விஜய் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில் இன்னும் ஒரு கொடுமையான விஷயம் தற்போது நடந்துள்ளது. அதை பற்றி பேச வேண்டாம் என நினைத்தேன். நம் தமிழகத்து குழந்தைகளை ஒருத்தன் பல ஆண்டுகளாக சீரழித்து வந்திருக்கான்.
திமுக ஆட்சியில் புகார் கொடுத்தும், அந்த சாப்டரை, ஹிஸ்டரை மூடி மறைச்சிட்டாங்க. அப்படி அவங்களுக்குள் என்ன டீலிங்கோ தெரியவில்லை. மக்கள் வாயை திறங்கன்னு கேட்கிறாங்களே, ஸ்டாலின் சார் வாயை திறங்கள்.
இந்த சீரழித்தவன் விவகாரத்தை திமுகவும் பேசவில்லை, அதிமுகவும் பேசவில்லை. இதுல கூடவா கூட்டு? பெண்கள் பாதுகாப்பக்கென்றே பிறந்தமாதிரி பேசுவாங்க, இப்ப பேச வேண்டியதுதானே! பச்சை புள்ளைங்கள சீரழிச்சவனை தூக்கி வச்சாச்சு. இத்தனை நாளாக மூடி வச்ச கேஸை விஜய் தோண்டி எடுத்து உள்ளே வச்சுட்டாங்களே அதிர்ச்சியா என்னன்னு தெரியவில்லை. இரு கட்சிகளும் வாய்த் திறக்கவே இல்லை.
பச்சை புள்ளைங்களோட வலியை பற்றி கூட பேச முடியவில்லை என்றால் என்ன அரசியல் செய்றீங்க என ஜெம் வீரமணி விவகாரத்தை மிகவும் ஆக்ரோஷமாக விஜய் பேசினார். ஜெம் வீரமணி சிறுமிகளை படிக்க வைப்பதாக ஆசை வார்த்தை கூறி, அவர்களை தனி வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் ஆதாரம் ஏதும் கிடைக்கவில்லை என கூறி வழக்கை முடித்து வைத்ததாக போக்சோ நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை தாக்கல் செய்த போது அதை நீதிபதி பத்மா நிராகரித்தார். இந்த வழக்கை மறு விசாரணை செய்ய ஆகஸ்ட் 19 ஆம் தேதி உத்தரவிட்டார்.
இதையடுத்து ஆகஸ்ட் 29ஆம் தேதி ஜெம் வீரமணி, அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளர் சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு குறித்து தினமும் பகீர் தகவல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன. இந்த வழக்கை சரியாக விசாரிக்காததால் அப்போது சென்னை காவல் துறை ஆணையராக இருந்த அருண் ஐபிஎஸ், துணை ஆணையராக இருந்த கண்ணன், ஏசி யாஸ்மின் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரத்தில் திமுக நடவடிக்கை எடுக்காதது குறித்த விமர்சனத்திற்கு திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி, வீடியோ ஆதாரம் தெளிவாக இல்லாததால் ஆதாரம் கிடைத்தவுடன் நடவடிக்கை எடுக்க இருந்தோம் என்றார்.
அது போல் "இந்த கேஸை ஏதோ தவெகதான் கண்டுபிடித்தது போல் தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள், ஆனால் போக்சோ நீதிபதியால்தான் இந்த கேஸ் தற்போது மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது" என சிபிஎம் சண்முகம் தெரிவிக்கிறார்கள்.
இந்த சூழலில் விஜய்யோ, திமுக ஆட்சியில் மூடி மறைக்கப்பட்ட ஜெம் வீரமணி வழக்கை நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கண்டறிந்து உள்ளே தூக்கி வைத்துவிட்டோம் என மதுராந்தகத்தில் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். ஜெம் வீரமணி வழக்கில் சென்னை போலீஸார், ஏற்கெனவே அந்த சம்பவம் நடந்த போது சென்னையில் பணியில் இருந்த உயரதிகாரிகளை விசாரிக்க திட்டமிட்டு இன்ஸ்பெக்டர்கள் மகேஷ் குமார், ராஜலட்சுமி, யாஸ்மின் ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.