கருக்கலைப்பு - சிறுகதை

karukkalaippu-short-story
கருக்கலைப்பு - சிறுகதை

மீனாச்சி பேரனை மடில போட்டுக்கொஞ்சிட்டு இருந்தா..ரொம்ப செரமப்பட்டு சீப்பட்டு சின்னாபின்ன மாயி நொந்து பொறவு போகாதகோயிலுக்கெல்லாம் போய் வேண்டி கயிறு கட்டி தொட்டில்போட்டு சாமி கும்புட்டுப்பொறந்தவன் இவன்..அதான் சந்தோசம்.. பெரும.... அத லெட்சுமி கிண்டல் பண்ணா பீத்தி பெருங்கடா எங்கவீட்டு எருமக்ககெடான்னு

ஏன் பேசமாட்டாஅவளுக்குமூணுபொம்பளைப் பிள்ளைக கட்டிக்குத்தவன்ன வயித்ததூக்கிட்டு வந்துருவாளுக இவ கெடந்து அவளுகளுக்கு பிரசவம்பாத்து கொழந்தைய வளத்து அனுப்பு றதுக்குள்ள தாலி அந்து போயிறும் , ஒருத்தி மாத்தி ஒருத்தி வந்துட்டே இருப்பாளுக புள்ள பெக்க எப்பப்பாத்தாலும் அவ வீட்டுமுன்னாடி பீத்துணி காஞ்சிகிட்டுத்தான் கெடக்கும் அந்தச்சலிப்புல மீனாச்சி கொஞ்சுறதப் பாத்துட்டு மோவாயத் தோள்ல இடிச்சிக்கிட்டா

மீனாச்சி மகளச் சொந்தத்துலதான் கட்டிக்குடுத்துருந்துச்சு. அவ புருசனோட தங்கச்சிமகனுக்குத்தான் அவ வாக்கப்பட்டு இருந்தா.. சின்னவயசு அவனுக்கு 24 மகளுக்கு 18 கலியாணம் பண்ணவன்ன வெளியூர்ல
தனிக்குடித்தனம் வேற ..

போன ரெண்டாவதுமாசமே லெட்டர் போட்டா மீனாச்சிக்கி மக, தீட்டுத்தள்ளிப் போகுதுன்னு.. மீனாச்சிக்கி சந்தோசம் மகமாசமா ஆயிட்டான்னு...ஆனா அந்தச் சந்தோசம் நெலைக்கல...

திரும்ப மக லெட்டர் போட்டா அவரு கொழந்த இப்ப வேணாங்குறாரு இப்பத்தான கலியாணம் ஆச்சு கொஞ்சநாள் ஃப்ரீயா இருக்கலாம் வயசு இருக்குள்ள நிதானமாப் பெத்துக்கலாம்ன்னு சொல்றாருன்னு எழுதியிருந்தா...

மீனாச்சிக்கிப்  பகீர்ன்னு ஆகிப்போச்சு என்ன சொல்லு சொல்லிப்புட்டா... சிறுக்கிமக மொதமொத நின்னுருக்கு அத வேணாம்னு சொல்றாளே... இது நல்லதுக்கா பாவம் இல்லையா புள்ளையப்போய் கொல்றீன்னு சொல்றாளேன்னு கெளம்பி மக வீட்டுக்கே போயிட்டா...

அங்கபோய் மகளத்திட்டுனா... வேணாமுன்னு இருந்தா அதுக்கேத்த வழிகளைப் பண்ணி ருக்க வேண்டியதுதான .. அப்ப விட்டுப்புட்டு இப்ப கலைக்கிறேன்னு சொல்றீயே இது நல்லதுக்கா... புள்ள சாமியாப் பாத்துக் குடுக்குறது வேணாம்றப்ப நிறுத்திக்கிறதும் வேணும்றப்பக். கெடைக்கிறதும் நம்ம கையில இல்ல ஒழுங்காபெத்துக்கிற வழியப்பாருன்னு திட்டுனா....

ஆனாலும் அவ மக பிடிவாதமா இருந்தா.. அம்மா அவரு காஸ்மீர் டூர் புக் பண்ணி ருக்காரு அடுத்தமாசம் போறோம்... அப்ப புள்ளத்தாச்சியாப்போன டூர் எஞ்சாய் பண்ணமுடியாது... நான் முடிவு பண்ணிட்டேன்னு சொன்னா.... மீனாச்சி மக கையப்புடிச்சிக் கெஞ்சினா... வேணாம்டி நல்லா யோசனை பண்ணுன்னு ஆனாலும் அவ கேக்காம கழிச்சிட்டா....

ரெண்டுமூணுநாள் இருந்து மகளுக்கு ஒத்தாசையா இருந்துப்பாத்துப் புட்டு மகளுக்கு நல்லது பொல்லது வைச்சிக்குடுத்து ஒடம்பத் தேத்திவிட்டுட்டு ஊர்திரும்பினா மீனாச்சி.

மக டூர் போய்ட்டு வந்தா ... வந்து இதேமாதிரி லெட்டர் போட்டா. அம்மா தள்ளிப்போகுதுன்னு மீனாச்சிக்கு கொஞ்சம் மூச்சு வந்துச்சு... நல்ல வேளை நின்னுசுச்சுன்னு...

ஆனா மூணாவது மாசம் மக வீட்டுக்கார் போன் பண்ணாரு... அத்த அவளை ஆஸ்பத்திரில சேத்துருக்கேன் வலி அதிகமா இருக்குன்னு கொஞ்சம் வாங்க எனக்குப்பயமா இருக்குன்னு...

மீனாச்சி அடிப்புடிச்சி ஓடிவந்தா.. அதுக்குள்ள மகளுக்கு தீட்டு பட ஆரம்பிச்சிருச்சு. அந்த டாக்டர் சீதாலட்சுமி சொன்னாங்க கரு நின்ன பின்னாடி தீட்டுப்படுறது நல்லதில்ல கலைச்சிடலாம் இல்லாட்டினா பின்னாடி பிரசவத்துல பிரச்சனை வரலாம் கொழந்தைக்கி ஏதாவது ஆயிடலாம்.. கலைக்கிறது நல்லதுன்னு ஆலோசனை சொன்னாங்க....

அப்ப மீனாச்சி சொன்னா மககிட்ட அப்பவே சொன்னேன் கேக்கல பாரு நீதான் செரமப்படுறன்னு கண்ணு கலங்கி சொன்னா.. மகளும் அம்மா மடில விழுந்து அழுதா ஆமாம்மா நீ சொன்னதைக்கேக்கல இப்ப அவஸ்தப்படுறேன்....

கலைச்சிடுறதுன்னு முடிவாயிடுச்சு... கலைச்சி மூணுநாள் ஆஸ்பத்திரில இருந்துட்டு வீட்டுக்கு வந்தா... மக . அவ ஒடம்பு ரொம்பவீக்காயிடுச்சு வலி வேற... அதுனால 10 நாளு தங்கி மகளைக் கவனிச்சி ஒடம்பத்தேத்திவிட்டா..

திரும்ப ஊருக்குக்கெளம்புறப்ப மருகனக் கூப்புட்டுச்சொன்னா இனிமே நீங்கதான் பாத்துக்கனும் ரொம்ப வீக்கா இருக்கா பாத்து நடந்துக்குங்கன்னு பட்டும் படாம சொல்லிட்டுக்கெளம்புனா...

ஆனா ரெண்டு வருசம் எதுவும் நிக்கல... மககிட்ட சாடையா கேட்டுப்பாத்தா ஊருல எல்லாம் விசாரிக்கிறாக என்ன விசேசம் உண்டான்னு நீங்களா தள்ளிகிள்ளிப் போட்டுருக்கீகளான்னு...

அதுக்கு மக சொன்னா இல்லம்மா வயத்துல தங்கமாட்டீங்குதுன்னு அழுதா... இதுக்கு நடுவில அவ மாமியா சாடமாடயா பேச ஆரம்பிச்சிட்டா... வேண்ணா கொழந்தையத் தத்து எடுத்துக்கலாமுன்னு.ஏன்னா மக புருசனோட தம்பி அவருக்குப்பின்னாடி கல்யாணம் பண்ணி ரெண்டு பொண்ணுகளை பெத்து வைச்சிருந்தா... மூணாவது மாசமா வேற இருந்தா...

வருசம் மூணாகப்போகுது டாக்டரைப் பாத்தீங்களான்னு மகளைக்கேட்டா... அதுக்கு டாக்டர் செக் பண்ணிப்பாத்துட்டு ஒண்ணும்கொறையில்ல செல மாத்திர குடுத்துருக்காங்க அவங்க சொல்றமாதிரி மாத்திர பயன் படுத்தினா கர்ப்பப்பை நல்ல வலுப்பெறுமாம்... அப்புறம் சரியாகு மாம்ன் னுசொன்னா.

மூணாவது வருசம் தீட்டுநின்னுச்சு... மீனாச்சி மாரியம்மன் கோயில்ல தொட்டி கட்டிப்போட்டா அதுல மதுளம்பிள்ளை வைச்சி வேண்டிக்கிட்டா... அது போக முந்தாணிப்பிச்சை எடுக்கனும் நல்ல பலன் தருமுன்னு ஒரு அம்மா சொன்னது கேட்டு முந்தாணிப்பிச்சை எடுத்து அதச்சோறாக்கி மண் சோறு சாப்புட்டா எல்லாம் மகளுக்காக குலதெய்வம் கோயில்ல கெடா வெட்டிபூசை போட நேத்திக்கடன் செஞ்சா....

அழகர் கோயில்ல பசுதானம்செய்யிறதா வேண்டிக்கிட்டா,,நாளு மாசம் ஆச்சு மகநல்லபடியா இருந்தா ...ஊரு நாட்டு வழக்கப்படி மகளை அஞ்சாவது மாசம் மருந்து குடிக்கக்கூட்டியாரனும்.... ஆனா டாகடர் சொல்லிட்டாரு பிரயாணம் பண்ணக் கூடாது...ரெஸ்டுல இருக்கனும்ன்னு...

அப்ப வீட்டுக்குப்பின்னாடி இருக்குற நாகம்மாகிட்ட கேட்டா என்னா பண்ணலாம் ன்னு அவசொன்னா நான் பவுடர் மாதிரி ஒண்ணக்குடுக்குறேன் அத அழகர்கோயில் தீத்தத்துல துளசி போட்டு இதையும் கலந்து சாமியக்கும்புட்டுக்குடு எல்லாம் நல்லபடியா நடக்கும்ன்னா...அதுமாதிரியே மகளுக்குச்செஞ்சா...

அடுத்து அவங்க வீட்டுல வளைகாப்பு நடத்தி வீட்டுக்குக்கூட்டியாந்தாச்சு. இனி பிரசவம் இங்கதான் பாக்கனும் எட்டு ஒம்போது மாசங்கள்ல கிராஸ்ரோட்டுல ஆஸ்பத்திரி வைச்சிருக்குற விமலா டாக்டர் கிட்ட கொண்டுபோய் 15நாளைக்கி ஒருதடவ செக்கப் பண்ணிட்டு வருவா.... அப்ப அவங்க பிரசவ டேட் குறிச்சிக்குடுத்தாங்க....
அப்ப சொன்னாங்க நீங்க பிரசவத்துக்கு பிரைவேட்டுக்குப் போகவேணாம்...நம்ம பெரியாஸ்பத்திரில சேத்துவிடுங்க நான் பாத்துக்கிறேன்....கவலைவேண்டாம்னு

அதேமாதிரி சொன்னதேதில பெரியாஸ் பத்திரில சேத்துக்கூடவே இருந்தா மீனாச்சி அங்க ஏகப்பட்ட பொம்பளைங்க அட்மிட் ஆயிருந்தாங்க..ஒரு நாளைக்கி 50 , 60 பிள்ளைங்க பொறந்துட்டு இருந்துச்சு...

ஓட்டல்ல இட்லி அவிக்கிறமாதிரி புள்ளகளை பிரசவம் பாத்து தூக்கிட்டுப்போய்ட்டு இருந்தாக இவமகளுக்கா வலி வரவே இல்ல நாள் தாண்டிருச்சு... சும்மாவே ஒக்காந்து இருந்தா....மீனாச்சி திரும்பத்திரும்பகேட்டுட்டு இருந்தா வலி வந்துருச்சான்னு ஆனா வரல

இப்ப மீனாச்சி சொந்தக்காரம்மாவ மக பக்கத்துல வைச்சிட்டு கழுத்துல காதுல கெடந்த நகையெல்லாம் அடகுவைச்சி காசெடுத் துக்கிட்டு நேர டாக்டர் விமலாவப் பாக்கப்போனா. அங்க அவங்கசொன்னாக ஏம்மா கவலைப்படுற எல்லாம் பாத்துக்கலாம் இது கவர்மெண்டு ஆஸ்பத்திரிமா ஒரு நாளைக்கி ஏகப்பட்ட பிரசவம் பாக்குறோம் எதையும்சமாளிக்க வசதியும் நர்ஸ் டாக்டர்க இருக்காங்க... தேவையில்லாம ஆப்பரேசன் பண்ண மாட்டோம்...தேவைப்பட்ட செய்ய தயங்கமாட்டோம்.... காச கொண்டுபோய் பத்திரமா வைச்சிட்டு பேரப்புள்ளை களுக்கும்மகளுக்கும் செய்யின்னு சொன்னாங்க.....

கருப்புகோயிலுக்குப் போய்ட்டு வேண்டிக் கிட்டு திரும்ப ஆஸ்பத்திரி வந்தா மகள வலி வந்து உள்ளாற கூப்புட்டுபோயிருக்கிறதா சொன்னாங்க.... கொஞ்சம் நிம்மதி வந்தாலும்சுகப்பிரசவம் ஆகனுமேன்னு கவலையா இருந்துச்சு....

லேபர் வார்டுல பிரசவ வலில பொம்பளைக கத்திட்டு இருந்தாக. அதுல இவளோட மக கத்துறது தனியா கேட்டுச்சு.... அம்மா அம்மான்னு அலறுனா மீனாச்சிக்கி அழுகையா வந்துச்சு மக கத்துறதுகேட்டு

முந்தாணில கொண்டாந்த கருப்புகோயிலு துண்ணூர நர்சம்மாகிட்ட குடுத்து மக நெத்தில பூசச்சொன்னா.... அந்த நரசம்மா வாங்கிட்டுப்போய் பூசிவிட்டா...

அதுக்குநடுவில ஆயாம்மா வந்து கேட்டுச்சு மீனாச்சி யாரும்மான்னு ஏன்னு கேட்டப்ப ஆயா சொல்லிச்சி கொழந்த செத்துப் பொறந்தருக்காம் னு இவ நெஞ்சு வெடிச்சமாதிரி இருந்துச்சு...... அதுக்குள்ள ஆயா பேசண்ட் பேரு மீனாச்சி ஆரு கூடவந்துருக்குறதுன்னு சொன்னப்ப போன உசிறு திரும்பி வந்துச்சு......

அதுக்குள்ள விமலாம்மாவே வந்தாக... மீனாச்சியக் கூப்புட்டு உன் மகளுக்கு ஆம்பிளப்புள்ள பொறந்துருக்கு சுகப்பிரசவம் கொழந்த 4 கிலோ இன்னும் கொஞ்சநேரத்துல கொண்டாந்து காமிப்பாகன்னுசொன்னப்ப அவங்க கையப்புடிச்சி கண்ணீர்விட்டா மீனாச்சி......

இப்ப மகளை வார்டுல கொண்டாந்து போட்டாக... கொஞ்சநேரத்துல புள்ளையகொண்டாந்து மீனாச்சி கையில குடுத்துச்சு... நர்சம்மா..

பேரன் நல்லா வெயிட்டா இருந்தான்.... அதுக்குள்ள மருமகன் வந்து பாத்துட்டு கண்கலங்கினான். இப்ப யாரு சேனை வைக்கிறதுன்னு நர்ஸ் கேட்டா.

அப்ப மருமகன் சொன்னாரு...அத்த நீங்க வையிங்க உங்க வேண்டுதலும் மனஒளைச்சளும் தியாகமும் தான் புள்ளையாப்பொறந்துருக்கு.... சேனை வைச்சி பேர் வையிங்கன்னாரு...

சீனித்தண்ணிய கொழந்த வாயில கரண்டிலவைக்க கொழந்த சப்பிச் சாப்புட்டுட்டு சிரிச்சது.... அந்த அழக மலை யானோட பேரான கார்மேகம்னு பேர்வைச்சா.... மீனாச்சி ஏன்னா அது அவ அண்ணனோட பேரு.... மதுர மீனாச்சிக்கும் அண்ணன் அந்தகார்மேகம் தான.... கருப்புக்கும் அதான அர்த்தம்... கார்ன்னா கருப்புதான.......

அதைப்பாத்து மீனாச்சி மக கண்ணுல தண்ணீர்வந்துச்சு.... அம்மா எம்புட்டுக்கஸ்டம் உனக்கு.....ன்னு சொன்னா.... அப்ப மீனாச்சி அவ கைபிடிச்சி புள்ளைங்க தான் என் உசிறு அதுக்கு என்ன வேண்ணாலும் கஸ்ட்டப்படலாம்ன்னு சொன்னா கண் கலங்க...

அ.முத்துவிஜயன்