காமத்திற்குக் கண் இல்லை?
பொதுவாக இன்றைய ஊடகங்களில் பாலியல் சார்ந்த, முறை தவறிய- சமூக மரபுகளுக்கு மாறான உறவுகள் குறித்துச் செய்திகள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன.
இதற்கான அடிப்படையாகக் குறிப்பிடப்படுவது காமம்.
சங்ககாலத்தில் காமம் என்னும் சொல், காதல், விருப்பம், வேண்டுதல், நோய், உடலுறவு என்னும் பொருள்களைக் குறிக்கும் பொதுச் சொல்லாக வழங்கப்பட்டு வந்தாலும், இன்றைய தமிழில் நாம் இதனை தீய பாலுணர்ச்சியைக் குறிக்கவே பயன்படுத்துகிறோம்.
இது போல, பல பொருளைக் குறிக்கப் பயன்பட்ட ஒரு சொல், நாளடைவில் மற்ற பொருள்களை இழந்து, தனக்கான ஒரு பொருளை மட்டுமே நிலை நிறுத்திக் கொண்டால் அது போன்ற சொற்களை மொழியியலாளர்கள் சிறப்புப் பொருட்பேறு என்கிறார்கள்.
மொழியாராய்ச்சியை இத்துடன் நிறுத்தி நம் தலைப்பிற்கு வருவோம்.
காமம் என்ற சொல் தன்னளவிலான பல பொருளை இழந்து, இன்று நாம் வழங்குவது போல, தகாத பாலுணர்ச்சியைக் குறிக்கும் நிலை, சங்கம் மருவிய காலத்திலேயே வந்துவிட்டது. இந்தச் சொல்லின் தற்போதைய பொருளுக்கு ஏற்ப அமைந்த ‘காமத்திற்குக் கண்ணில்லை’ என்ற பழமொழியும் இச்சொல்லைப் போன்றே மிகப் பழமை உடையது.
காமத்திற்குக் கண்ணில்லை என்பதில் கண் என்பது இங்குப் பார்வைக்குக் காரணமான புலனை மட்டுமே குறிக்கவில்லை. அது இவ்வுலகில் இருந்து நாம் பெறும் அறிவிற்கான குறியீடாகவே காட்டப்படுகிறது.
கண் எப்படி ஒரு குழியை ‘இது குழி’ எனக்காட்டி அதைத் தவிர்த்து நம்மைச் செலுத்துகிறதோ, அதே போல நன்மை தீமைகளைக் காட்டி, தீமையைத் தவிர்த்தும் நன்மையைக் கொண்டும் செல்லும் அறிவின் குறியீடாகவே இங்குக் கண் என்பதைப் பொருள் கொள்ள வேண்டும்.
“கண்ணுடையார் என்பவர் கற்றோர் ” என்று வள்ளுவர் சொல்வதும்,
“குருடர்க்குக் கோல்காட்டும் குருடர் ” என்று திருமூலர் சொல்வதும் இந்த நல்லறிவு, நல்லறிவின்மை என்ற பொருளில்தாம்.
காமத்திற்கு ஏன் கண்ணில்லை என்றால், காமம், சற்றும் ஆராயாது ஒரு செயலைச் செய்யத் துணிந்துவிடும்.
நல்வழி தீய வழி எனப் பாராது எவ்வழியானாலும் தன்செயல் முடிக்க விரைந்து செல்லும்.
விரும்பிய இன்பத்தை அடைய முடியாமல் அதற்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் உடலுக்கு உள்ளே இருந்து மனதையும் உடலையும் கெடுக்கும். அனுபவம் வாய்ந்த அறிஞர்களின் உரையை ஒருபோதும் கேட்காது.
தன்னிடம் ஒரு சிறிதும் அன்பில்லாதவரைக் கூட பெரிதும் விரும்பி, அவர் வெறுக்கும் போதும் விடாது பற்றும்.
அடக்க அடக்கப் பெருகுவதாகி, அதைக் கொண்டவரைத் தீய செயல்களில் வீழ்த்தியே தணியும்.
எனவேதான் காமத்திற்குக் கண்ணில்லை.
ஐம்பெரும்காப்பியங்களில் பெரிதும் அழிந்து, சில பாடல்கள் மட்டுமே எஞ்சிய வளையாபதியின் ஒரு பாடல் ” காமத்திற்குக் கண்ணில்லாததன்” காரணத்தை இப்படிச் சொல்கிறது.
“எண்ணின்றியே துணியும் எவ்வழியானும் ஓடும்
உண்ணின்று உருக்கும் உரவோருரை கோடலின்றாம்
நண்ணின்றி யேயும் நயவாரை நயந்து நிற்கும்
கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும்!“
( வளையாபதி 26 )
நாம் மேலே பார்த்தது இந்தப் பாடலின் பொருளைத்தான்.
இன்றைய பத்திரிக்கைச் செய்திகள் காட்டும், பாலியல் வன்முறைகளைச் செய்து காலமெல்லாம் வருந்துவோரின் அழிவிற்குக் காரணமாகும் செயலுக்கான உணர்வின் கூறுகளை எவ்வளவு துல்லியமாக வரையறைப்படுத்தி இருக்கிறார்கள்?
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் இன்னொரு அழகிய உதாரணம் மூலம் இதனை விளக்குவார்,
“ இடங்கழி நெஞ்சத்து இளமை யானை
கல்விப் பாகன் கையகப் படாஅது
ஒல்கா வுள்ளத்து ஓடும்”
( சிலப்பதிகாரம். கட்டுரைகாதை 37 – 39 )
அளவுகடந்த காமம் என்பது, கல்வியறிவு என்னும் பாகனுக்கும் அடங்காத திமிர்த்த இளைய யானையைப் போன்று, எது குறித்தும் கவலை இல்லாமல் தளராத நெஞ்சொடு ஓடக்கூடியது.
மதம் பிடித்த யானையால், அதற்கும் அழிவு. மற்றவர்க்கும் கேடு என்பது எவ்வளவு பொருத்தமான உவமையாக இருக்கிறது.
சாதாரணமாக நாம் வழங்கும், காமத்திற்கு ஏன் கண்ணில்லை என்பதற்கான காரணங்களையும், அதனால் நேரும் அழிவினையும் பற்றி நம் இலக்கியங்கள் சொல்லும் செய்திகள் இன்றும் பொருந்துவதாய்த்தான் இருக்கின்றன.
காலந்தோறும் தன்னிடமுள்ள அறிவின் மரபுகளை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த நம் மொழி இப்பொழுதும் அதே உயிர்ப்புடன் இருக்கிறது.
பெரும்பாலான நேரங்களில் நாம் அதை அறியாதவர்களாகவும் அறிய விரும்பாதவர்களாகவும் இருந்துவிடுகிறோம்.