த.மா.கா. சார்பில் சொத்து வரி, வீட்டு வரி உயர்வை கண்டித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிலையம் அருகே அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் பேசியதாவது:
தமிழக மக்களின் சுப, துக்க நிகழ்வுகளில் பங்கேற்கும் கட்சியாகவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கும் கட்சியாகவும் த.மா.கா. செயல்பட்டு கொண்டிருக்கிறது. கொங்கு மண்டலத்தில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற உள்ளது.
தி.மு.க அரசு பொறுப்பேற்ற பின் நடைபெறும் 5வது பெரிய போராட்டம் இது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. தி.மு.க.வின் வாக்குறுதிகளை நம்பி் மக்கள் ஏமாந்துள்ளனர். கிடப்பில் போடப்பட்ட வாக்குறுதிகள் செயல்படுத்துவார்கள் என மக்கள் காத்து கொண்டிருந்தபோது மக்கள் தலையில் பேரிடியாக சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசை முதல் மாளிகை வரை 20 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை வரி உயர்வு உயர்த்தப்பட்டுள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற முனைப்பு காட்டவில்லை. மாறாக வரியை உயர்த்தி சுமையை உயர்த்திய அரசாக உள்ளது.
திராவிட மாடல் அடிப்படையில் சொத்து வரியை குறைத்திருக்கலாமே. கூட்டணி கட்சிகள் சொத்து வரி உயர்வை பற்றி வாய் திறக்கவில்லை. கூட்டணி கட்சிகளை கட்டுப்படுத்தலாம், ஆனால் தமிழக மக்களை கட்டுப்படுத்த முடியாது.
ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் தேர்தல் வாக்குறுதியை மீறுவது சரியா என கேட்கிறோம். வாக்களித்த மக்களுக்கு தி.மு.க துரோகம் செய்திருக்கிறது. மக்கள், வரும் பாராளுமன்ற தேர்தலில் தங்கள் முடிவை மாற்றி வாக்களிப்பார்கள்.
மின்வெட்டு தி.மு.க. ஆட்சியில் அதிகரித்துள்ளது. படிப்படியாக தமிழகத்தில் மதுக்கடைகளை மூடுங்கள். வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அந்த ஆர்ப்பாட்டத்திற்கிடையே செய்தியாளர்களிடையே அவர் பேசினார்.