Breaking News :

Monday, April 29
.

ஆடி மாதம் பிறப்பு - 27 அம்மன் கோவில்களில் கூடுதல் வசதி- அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்


ஆடி மாதம் பிறக்க உள்ள நிலையில், சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இந்தக் கூட்டத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் கோவில்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:- தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களான சென்னை மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில், மாங்காடு, காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரி யம்மன் கோவில், மதுரை, தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், பெரியபாளையம் பவானியம்மன் கோவில், திருச்சி மாவட்டம், உறையூர், வெக்காளியம்மன் கோவில், புன்னைநல்லூர் மகா மாரியம்மன் கோவில், இருக்கன்குடி மாரியம்மன் கோவில், சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட 27 பெரிய அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் வசதிகள் செய்யப்படும். 

கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, கழிப்பிட வசதி, பக்தர்கள் வரிசையில் செல்ல கியூ லைன், வாகன நிறுத்துமிடம், ஆகியவை அமைத்து தரப்படும். கூழ் வார்க்கும் இடத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும், பக்தர்கள் நேர்த்தி கடன் முடித்து சென்ற பின்பு கோவில் வளாகத்தை சுத்தமாக வைக்கவும், பொங்கல் வைக்கும் இடத்தில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தொடர்புடைய அம்மன் கோவில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து பெரியபாளையம் பவானியம்மன் திருக்கோவிலுக்கு ஆண்டு தோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிகின்றனர். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்தொற்று காரணமாக ஆடி மாத திருவிழா நடை பெறவில்லை. 

இந்த வருடம் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. சிறப்பு திருவிழாக்களான ஆடிபெருக்கு, ஆடிவெள்ளி, ஆடி கிருத்திகை மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதல் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அந்தந்த கோவில் சார்பாக கண்காணிக்கப்படுவார்கள். தற்காலிகமாக முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். 

கோவில்களில் திருவிழா நேரத்தில் பொதுமக்களுடைய பாதுகாப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி, சமூக இடைவெளி கடைபிடித்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் அந்த கூட்டத்தில்
 பேசினார்.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.