தவெக எம்எல்ஏ அரசு மருத்துவமனையில் மருத்துவரை எழுப்பி நள்ளிரவில் ஆய்வு!

srivaikundam-tvk-mla-inspection-in-govt-hospital
தவெக எம்எல்ஏ அரசு மருத்துவமனையில் மருத்துவரை எழுப்பி நள்ளிரவில் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அன்னை சரவணன், அறை ஒன்றில் உறங்கி கொண்டிருந்த மருத்துவரை எழுப்பி நோயாளிகளை கவனிக்க சொல்லி அறிவுறுத்தி சென்றுள்ளார்.

முன்னதாக அறையை உள்பக்கமாக தாழிட்டுக் கொண்டு மருத்துவர் உறங்கியதாகவும், அவரை செவிலியர் கதவை தட்டி எழுப்ப முயன்றுள்ளாராம். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் டாக்டர் எழுந்துவரவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவரது செல்போனுக்கு அழைத்த பின்னரே டாக்டர் வெளியே வந்துள்ளாராம். அப்போது அவருக்கு அறிவுரை கூறிய எம்எல்ஏ சரவணவன், அரசு மருத்துவமனைக்கு ஏழைகள் அதிகம் வருவார்கள். கொஞ்சம் பாருங்கள் சார், என்று கூறிவிட்டு சென்றார். இது தொடர்பாக வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.

ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ அன்னை சரவணனின் செயலை எதிர்க்கட்சியினர் கண்டித்துள்ளனர். திமுக முன்னாள் எம்பி டாக்டர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள பதிவில், "கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. இரவுப் பணியில் உள்ள மருத்துவரின் பணி மற்றும் பொறுப்புகளில் டி.வி.கே (TVK) எம்.எல்.ஏ தலையிட்டது முற்றிலும் தேவையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும். அரசியல் தலையீட்டிற்கு எதிராக இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் பிற மருத்துவர் சங்கங்கள் வலுவான அறிக்கையை வெளியிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அதேபோல் அரசியல் நிபுணர் ஒருவர் வெளியிட்ட பதிவில், பணியில் இருக்கும் மருத்துவர் மருத்துவமனையின் இரவுக்காவலர் அல்ல. நோயாளிகள் யாரும் காத்திருக்கவில்லை என்றால், அவர் தனது அறையில் உறங்கிக்கொண்டிருப்பார். நோயாளி ஒருவர் வரும்போது, செவிலியரோ அல்லது பிற பணியாளர்களோ கதவைத் தட்டியோ அல்லது அழைத்தோ அவரை எழுப்புவார்கள். இதுதான் வழக்கமான நடைமுறை. தயவுசெய்து இந்த சட்டமன்ற உறுப்பினரிடம் (MLA) இதைத் தெரிவியுங்கள் என்று கண்டித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தவெக ஆதரவாளர்கள், எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

தவெக ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட பதிவில், "அர்த்தமற்ற பேச்சு... வேலை நேரத்தில் ஒருவர் எப்படித் தூங்க முடியும்? அப்படித் தூங்கினால் அவருக்கு எப்படிச் சம்பளம் கிடைக்கும்? அவர் இரவுப் பணி செய்யும் மருத்துவர், எனவே வேலை நேரத்தில் அவர் தூங்கக்கூடாது. ஒருவேளை கவனிக்க வேண்டிய நோயாளிகள் யாரும் இல்லையென்றால், மருத்துவமனைக்கோ அல்லது நோயாளிகளுக்கோ பயனுள்ள வகையில் ஏதேனும் ஆக்கபூர்வமான பணிகளை அவர் செய்திருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இன்னொரு தவெக ஆதரவாளர் வெளியிட்ட பதிவில், "இது ஏற்றுக்கொள்ள முடியாதது; மருத்துவர்கள் தங்கள் பணி நேரத்தில் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும். திடீரென ஏதேனும் அவசர மருத்துவச் சூழல் ஏற்பட்டால் அவர்களால் அதை எப்படிக் கையாள முடியும்? உங்கள் வாதம் சரி என்றால், மருத்துவமனையில் உள்ள அனைவரும் தூங்கலாமே! நோயாளிகள் காவலாளியை எழுப்பலாம், காவலாளி செவிலியரை எழுப்பலாம், செவிலியர் மருத்துவரை எழுப்பலாம் என்ற நிலை உருவாகிவிடுமே" என்று கூறியுள்ளார்.

அதேநேரம் டாக்டருக்கு ஆதரவாகவும் பதிவுகளை காண முடிந்தது. ஒரு நெட்டிசன் கூறுகையில், "தயவுசெய்து மருத்துவர்களின் பணிச்சுமையைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும்; பணியாளர் பற்றாக்குறை மற்றும் நோயாளிகளின் வருகையைப் பொறுத்து, சில சமயங்களில் அவர்கள் 36 மணிநேரப் பணிநேரத்தைக் கூட மேற்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவதாக, சட்டமன்ற உறுப்பினர்களும் பிற அரசியல் தலைவர்களும் ஏன் தணிக்கை மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்? அத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.