கன்னத்தை கிள்ளியதும் ஒரு நொடி ஷாக் – ரச்சிதா ராமின் ரசிகர் சந்திப்பு வைரல்

rachita-ram-shocking-fans-meet
கன்னத்தை கிள்ளியதும் ஒரு நொடி ஷாக் – ரச்சிதா ராமின் ரசிகர் சந்திப்பு வைரல்

கன்னட திரையுலகின் பிரபல நடிகை ரச்சிதா ராமின் பிறந்தநாள் கொண்டாட்டம் இந்த முறை வழக்கத்தைவிட சற்று வித்தியாசமாக சமூக வலைதளங்களில் கவனம் பெற்றிருக்கிறது. ரசிகர்களை நேரில் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த ரச்சிதாவிடம் ரசிகர் ஒருவர் ஆர்வ மிகுதியில் திடீரென கன்னத்தைப் பிடித்து கொஞ்சிவிட்டு சென்ற சம்பவம் கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. எதிர்பாராத அந்த தருணத்தில் ஒரு நொடி அதிர்ச்சியடைந்த ரச்சிதா, அடுத்த நொடியே தன்னை இயல்புபடுத்திக் கொண்டு ரசிகர்களை சந்திப்பதைத் தொடர்ந்தார்.

அதோடு கதை முடியவில்லை. மற்றொரு ரசிகரும் இதேபோல் கன்னத்தைத் தொட முயன்றபோது, இந்த முறை ரச்சிதா அதை உடனடியாக தடுத்து செல்லமாகக் கடிந்து கொண்ட காட்சியும் வெளியாகியுள்ளது. இதனால், “ரசிகர்களிடம் நெருக்கமாக இருப்பது வேறு… தனிப்பட்ட எல்லையை மதிப்பது வேறு” என்ற விவாதமும் இணையத்தில் எழுந்தது.

ஆனால் இந்த சம்பவத்தைப் பற்றி ரச்சிதா எடுத்துக்கொண்ட அணுகுமுறையே பலரது கவனத்தையும் ஈர்த்தது. ரசிகர்கள் தன் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே இதைப் பார்க்கிறேன் என்றும், தவறான நோக்கத்துடன் யாராவது நடந்து கொண்டிருந்தால் நிச்சயம் அதைத் தட்டிக் கேட்டிருப்பேன் என்றும் அவர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால் இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்து பெரிய சர்ச்சையாக மாற்ற வேண்டாம் என்ற மனநிலையிலேயே அவர் அதை கடந்து சென்றிருக்கிறார்.

உண்மையில், ரச்சிதாவின் ரசிகர் சந்திப்பு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்தால், அவர் ரசிகர்களிடம் எவ்வளவு இயல்பாக பழகுகிறார் என்பது புரிகிறது. சிலருடன் புகைப்படம் எடுக்கும்போது தோளில் கை போடுகிறார்; கை கொடுத்து வாழ்த்துகளை ஏற்றுக்கொள்கிறார். புகைப்படம் எடுக்கத் தெரியாமல் தடுமாறும் ரசிகர்களுக்கு உதவி செய்வதும், அவர்களுடைய சிறிய அன்பு வெளிப்பாடுகளை சிரித்தபடி ஏற்றுக்கொள்வதும் இந்த சந்திப்பில் இடம்பெற்றிருக்கிறது.

ஒரு ரசிகர் கொண்டு வந்த சாக்லேட்டை அன்புடன் ஏற்றுக்கொள்வது, இன்னொருவர் கையைப் பிடித்து முத்தமிடுவது, ஒருவர் கவிதை சொல்ல வேண்டும் என்று ஆர்வமாக நிற்பதை ஜாலியாக ரசிப்பது என, ஒவ்வொரு ரசிகருடனும் ஒரே மாதிரியான முறையான தூரத்தில் இல்லாமல் மிகவும் நெருக்கமாகவும் இயல்பாகவும் ரச்சிதா பழகிய காட்சிகள் வெளியாகியுள்ளன. பெண்கள் திருஷ்டி கழிக்கும் போதும் அதை சிரத்தையாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். இதனால் இந்த சந்திப்பு வெறும் ‘புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி’ போல இல்லாமல், ரசிகர்களுக்கும் நடிகைக்கும் இடையிலான ஒரு நெருக்கமான சந்திப்பாகவே தெரிகிறது.

இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ரசிகர்களை நேரில் சந்தித்து பிறந்தநாளைக் கொண்டாடுவது ரச்சிதாவுக்கு புதிதல்ல. அவரது பிறந்தநாளையொட்டி பெங்களூருவில் உள்ள அவரது இல்லம் அருகே ரசிகர்கள் திரண்டு, கேக் வெட்டி கொண்டாடியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முறையும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்ட நிலையில், ரச்சிதா அவர்களுடன் நேரம் செலவிட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

இப்படிப்பட்ட நேரங்களில் நடிகைகள் ரசிகர்களிடம் ஒரு குறிப்பிட்ட இடைவெளியை வைத்துக்கொள்வது பாதுகாப்பானது என்பதில் சந்தேகமில்லை. ஏனென்றால் எதிரில் இருப்பவர் அடுத்த நொடி எப்படி நடந்து கொள்வார் என்பதை எப்போதும் கணிக்க முடியாது. ஆனால் அதே நேரத்தில், ரச்சிதா ரசிகர்களிடம் காட்டும் இந்த இயல்பான அணுகுமுறையைப் பார்த்து ரசிப்பவர்களும் அதிகம். அவருடைய புன்னகையும், ரசிகர்களின் சிறிய சிறிய அன்பையும் ஏற்றுக்கொள்ளும் விதமும் இந்த சந்திப்பை இன்னும் தனித்துவமாக்கியிருக்கிறது.

அதனால்தான் அந்த ஒரு நொடி—ரசிகர் கன்னத்தைப் பிடித்ததும் ரச்சிதாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியும், அடுத்த நொடியே அவர் அதை கடந்து சென்ற விதமும்—இவ்வளவு வேகமாக வைரலானதில் ஆச்சரியமில்லை.

ஒரு வீடியோவைப் பார்த்த பிறகு, “இன்னொரு ரச்சிதா ரீல்ஸ் பார்ப்போமா?” என்று அல்காரிதமும் விடாமல் தள்ளிக்கொண்டே வர… நம்முடைய ‘ஸ்டோரி தேடும் தியாகமும்’ தொடர்ந்துகொண்டே இருக்கிறது!

ரசிகர்களிடம் இவ்வளவு இயல்பாக பழகும் ரச்சிதா ராமுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!