சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு!

gem-veeramani-case-small-girl-suicide-case
சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு!

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே 2 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் ரீதியில் துன்புறுத்தி சிறுமி ஒருவரை தற்கொலைக்கு தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகார் அடிப்படையில் தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடந்தையாகச் செயல்பட்ட சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், முன்னாள் உதவியாளர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் கமிஷனர் தேன்மொழி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு படையினர் சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். காங்கிரஸ் பிரமுகர் ரஞ்சன்குமார் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

வீரமணியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிப்பதற்காக 93453-19676 என்ற செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் இந்த செல்போன் எண்ணில் பேசியோ அல்லது வாட்ஸ் அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம் என சிறப்பு புலனாய்வு படையினர் அறிவித்துள்ளனர்.

புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறப்பு புலனாய்வு படையினர் தெரிவித்துள்ளனர். வீரமணியிடம் பணம் பறித்தவர்கள் குறித்தும் தனியாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தொழிலதிபர் வீரமணியால் பாலியல் ரீதியாக சீரழிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் வீரமணி மீது புதிதாக மேலும் ஒரு போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஜெம் வீரமணி மீது ஏற்கனவே 2 போக்சோ வழக்குகள் பதியப்பட்டுள்ள நிலையில், பாலியல் ரீதியில் துன்புறுத்தி சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக மேலும் ஒரு வழக்கு, பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணி இதுவரை 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாக வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் முதல் வழக்கு, 2004இல் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தற்கொலை தொடர்பாக தாய் புகாரில் மற்றொரு வழக்கு, மற்றொரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தனியாக ஒரு போக்சோ வழக்கு என 3 வழக்குகள் ஜெம் வீரமணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ளன.