தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் வானதி சீனிவாசன்? - டெல்லி தலைமை திட்டம்!
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் உட்கட்டமைப்பில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், தமிழக பாஜகவிலும் புதிய தலைமை மாற்றம் குறித்த சலசலப்புகள் அரசியல் களத்தில் வேகமெடுத்துள்ளன.
பாஜக தேசியத் தலைவர் நிதின் நபீன் தலைமையிலான புதிய நிர்வாகக் குழுவில் நாடு முழுவதும் பல்வேறு மூத்த தலைவர்களுக்கும் மாநிலத் தலைவர்களுக்கும் புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழக பாஜகவின் அடுத்த தலைவராக வானதி சீனிவாசன் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பாஜக தலைமை அறிவித்த மறுசீரமைப்பில், தேசிய அளவில் 13 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள் மற்றும் 16 செயலாளர்கள் கொண்ட பலமான அணி களமிறக்கப்பட்டது. ஸ்மிருதி இரானி, பிப்லப் குமார் தேப் ஆகியோர் மீண்டும் தேசியப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர். வசுந்தரா ராஜே, ராம் மாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தேசிய துணைத் தலைவர்களாகப் பொறுப்பேற்றனர்.
அதேபோல், கேரளாவுக்கு ராஜீவ் சந்திரசேகர், உத்தரப் பிரதேசத்திற்கு பங்கஜ் சவுத்ரி, குஜராத்திற்கு ஜெகதீஷ் விஸ்வகர்மா, டெல்லிக்கு ஹர்ஷ் மல்ஹோத்ரா என பல்வேறு மாநிலங்களிலும் தேர்தல் சமன்பாடுகள் மற்றும் கள சூழலை முன்னிறுத்தி தலைமைகள் அடுத்தடுத்து மாற்றப்பட்டன. அந்த வகையில் தமிழகத்திலும் அமைப்பு ரீதியாக புதிய வியூகத்தை அமல்படுத்த பாஜக மேலிடம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
தமிழக பாஜகவில் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலைக்குப் பிறகு, சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்று கட்சியை வழிநடத்தி வந்தார். கள அரசியலில் அனுபவம் வாய்ந்த தலைவராக அவர் செயல்பட்டு வந்தாலும், தமிழக அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகள், புதிய கூட்டணிக் கணக்குகள் மற்றும் பெண்களின் வாக்குகளைக் கவரும் முனைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு புதிய மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, டெல்லி தலைமையின் நேரடி பார்வையில் இருக்கும் தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசனை மாநிலத் தலைவராகக் கொண்டு வந்தால் கட்சிக்கு எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பது குறித்து மேலிடப் பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏபிவிபி மாணவர் அமைப்பில் தொடங்கி, மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அடித்தளக் கொள்கைகளுடன் பயணித்தவர். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை அனைவரிடமும் நேரடி தொடர்பில் உள்ளவர்.
பாஜகவின் மத்திய தேர்தல் குழு மற்றும் தேசிய மகளிர் அணித் தலைவராக பணியாற்றியதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் நேரடி நம்பிக்கையைப் பெற்ற தலைவர்களில் ஒருவராக உள்ளார்.
பாஜகவுக்கு வலுவான வாக்கு வங்கி இருக்கும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், சட்டமன்றத்தில் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வாக முக்கியப் போர்க்களத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றவர். பிற கூட்டணிக் கட்சிகளுடனும், அரசியல் தலைவர்களுடனும் முரண்பாடுகள் இன்றி மென்மையான, அதேநேரம் ஆணித்தரமான வாதங்களை முன்வைக்கும் வழக்கறிஞர் பின்னணி கொண்டவர்.
தமிழகத்தில் அடுத்தகட்ட தேர்தல் அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி வியூகங்களை வகுக்க ஒருமித்த கருத்துடைய, நிதானமான அணுகுமுறை கொண்ட தலைமை தேவை என்பதை பாஜக மேலிடம் உணர்ந்துள்ளது. டெல்லியில் நடைபெறும் அடுத்தடுத்த ஆலோசனைக் கூட்டங்களில் இந்த தலைமை மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு கமலாலய வட்டாரத்தில் நிலவி வருகிறது.