இடைத்தேர்தலில் CPM, CPI தனித்துப் போட்டி - அதிர்ச்சியில் விஜய்!.
’பரந்தூர் நிலத்தை விவசாயிகளிடம் தரவேண்டும்’- சிபிஎம் பெ.சண்முகம்
"பரந்தூர் விமான நிலையத்துக்காக கைப்பற்றப்பட்ட நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது. எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது." என சிபிஐஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார். புதிய விமான நிலையத்துக்கான இடம் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்காக கையகப்படுத்திய நிலத்தை தவெக அரசு என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.
விவசாயிகளுக்காக மட்டும்தான் பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை முதல்வர் ரத்து செய்துள்ளார். எடுக்கப்பட்ட நிலம் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தி முடிவெடுப்பார் என அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் தெரிவித்தார். பரந்தூர் விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தை, மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாற்று திட்டங்களுக்கு செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், "பரந்தூர் விமான நிலையத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை அரசு என்ன செய்யப் போகிறது என்று சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்குப் பதிலளித்த தொழில்துறை அமைச்சர், மாற்றுத் தொழில் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போகிறோம் என்று பதிலளித்துள்ளார்.
நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறு குடியேற்ற சட்டம் 2013-ன் அடிப்படையில், குறிப்பிட்ட திட்டத்திற்காகக் கையகப்படுத்தப்பட்ட நிலம் 5 ஆண்டுகளுக்குள் பயன்படுத்தப்படவில்லை என்றாலோ அல்லது அந்தத் திட்டம் கைவிடப்பட்டாலோ, நிலத்தைச் சம்பந்தப்பட்ட விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்க வேண்டும். வேறு ஒரு திட்டத்திற்கு மாற்ற முடியாது.
எனவே, சட்டத்திற்கு விரோதமாகத் தமிழக அரசு நடந்துகொள்ளக் கூடாது. விவசாயிகளிடம் நிலத்தை ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்." எனத் தெரிவித்துள்ளார்.