அறநிலையத்துறையில் கருப்பு ஆடு! - அமைச்சர் ரமேஷ்

tvk-minister-ramesh-aranilaya-thurai-dmk-sekar-babu
அறநிலையத்துறையில் கருப்பு ஆடு! - அமைச்சர் ரமேஷ்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சித்ததுடன், துறையின் உள்ளே இருந்து அவருக்கு தகவல் வழங்குபவர் யார் என்பது கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ், சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் அரசை நோக்கி கேள்வி எழுப்புவது இயல்பானது என்றும், அதற்கு அமைச்சர்கள் பதில் அளிப்பதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை ஜனநாயக முறையில் பதிவு செய்யாமல் கூச்சல், குழப்பம் ஏற்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டினார்.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் சட்டப்பேரவையில் ஜனநாயக நடைமுறைகள் சரியாக பின்பற்றப்படவில்லை என்றும் அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார். தற்போதைய தவெக ஆட்சியில் அனைத்து கேள்விகளுக்கும் அமைச்சர்கள் பதில் அளித்து வருவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தவெக அரசுக்கு 100 நாட்கள்தான் கடந்துள்ள நிலையில், அனைத்துத் துறைகளிலும் உடனடியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஆட்சி நிர்வாகத்தை மாற்றுவது திரைப்படத்தில் காட்சிகளை மாற்றுவது போல எளிதானது அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.

கோயில்களில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாகவும் அமைச்சர் விளக்கம் அளித்தார். திருப்பதி கோயிலுக்கு செல்லும்போது செல்போனை எடுத்துச் செல்லக்கூடாது என்ற மனநிலை மக்களிடம் ஏற்கனவே உள்ளது என்றும், அதே நடைமுறை தமிழக கோயில்களிலும் படிப்படியாக உருவாகும் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே, முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவுக்கு அறநிலையத்துறையின் தகவல்களை வழங்குவது யார் என்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷ் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்தார். துறையில் எந்த தவறும் நடைபெறவில்லை என்றால், முன்னாள் அமைச்சர் ஒருவர் துறையின் தகவல்களை கண்காணிப்பது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சேகர்பாபுவுக்கு தகவல் கொடுத்தது யாராக இருந்தாலும், அவரை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ரமேஷ் திட்டவட்டமாக தெரிவித்தார். திமுக ஆட்சியில் விளம்பர நோக்கத்துடன் பல்வேறு பணிகள் அறிவிக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.