அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவுக்கு வர ரெடி - செங்கோட்டையன்

tvk-minister-sengottaiyan-admk-mla
அதிமுக எம்எல்ஏக்கள் 10 பேர் தவெகவுக்கு வர ரெடி - செங்கோட்டையன்

அதிமுகவில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு வர தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.

கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுக நிலையை பார்த்து ஏற்கனவே 6 பேர் தவெகவுக்கு வந்துவிட்டனர். இன்னும் 10 பேர் வர தயாராக இருக்கிறார்கள்" என்று கூறினார்.

கோபிசெட்டிபாளையத்தில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:-

10 எம்எல்ஏக்கள் தயாராக இருக்காங்க

அதிமுகவில் இருந்து 10 எம்.எல்.ஏக்கள் தவெகவிற்கு வர தயாராக இருக்கிறார்கள். அதிமுகவின் நிலைமையை பார்த்து ஏற்கனவே 6 பேர் தவெகவுக்கு வந்துவிட்டார்கள். இன்னும் 10 பேர் தயாராக இருக்கிறார்கள்.. மொத்தமாக 25 பேர் ஒன்றாக வர தயாராகிவிட்டனர். 10 எம்.எல்.ஏக்கள் வந்தால் முடிந்துவிட்டது. இதெல்லாம் நடக்கும்.. அப்புறம் தான் தெரியவரும்" என்று கூறியுள்ளார். அதிமுகவில் உள்கட்சி குழப்பம் நீடித்து வரும் நிலையில், அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக ஈரோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய செங்கோட்டையன் கூறியதாவது:- ஆட்சி 6 மாதம் தான் என்கிறார்கள். நான் சொல்கிறேன்.. விஜய் இருக்கும் வரை அவர்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதல்வர். எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்குகிறோம் என்கிறார்கள். போய் விலைக்கு வாங்குவதற்கு ஆட்டுச்சந்தையா? இங்கே இருக்கிற தவெக எம்.எல்.ஏக்கள், விஜய் எங்கே குதிக்க சொன்னாலும் குதிப்பார்கள். எந்த இடம் என்று பார்க்க மாட்டார்கள். அந்த அளவுக்குதான் அவர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

கட்சி கம்பெனியா இருந்தால் போதும்

அங்கே இருக்கிறவர்கள் இங்கே வருவார்களே தவிர இங்கே இருக்கிறவர்கள் அங்கே போக மாட்டார்கள். பவானி சாகர் ஆறு கிழக்கு நோக்கிதான் போகும். மேற்கு நோக்கி போகாது. ஆகவே மேற்கு நோக்கி போகிறவர்கள் அவர்கள்தான். நான் இன்று சொல்கிறேன். கொஞ்ச நாளில் தலைவர்கள் மட்டும்தான் இருப்பார்கள். அவர்களே சொல்லிவிட்டார்கள். மதிமுக மாதிரி நாங்க நடத்தக்கூடாதா? என்று..

10 பேர் இருந்தால் போதும், கட்சி கம்பெனியா இருந்தால் போதும் நான் அதை வைத்து சமாளித்துவிடுவேன் என்கிறார்கள். முதலில் நினைத்தார்கள் எதிர்க்கட்சியாக வருவோம் என்று நினைத்தார்கள். அதையும் பிடுங்கிவிட்டீர்கள். செங்கோட்டையனை ஒழித்துவிட்டுத்தான் வேறு வேலை என்றார்கள். கற்பனை உலகத்தில் இருக்கிறார்கள்" என்றார்.

6 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா?

தமிழக வெற்றிக் கழகம் கட்சி சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் இடது சாரி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அதிமுக எம்.எல்.ஏக்கள் 25 பேர் தவெகவிற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இவர்களில் 6 பேர் சில வாரங்களில் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர். அதிமுகவில் தொடர்ந்து சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில், தவெக அமைச்சர் செங்கோட்டையனின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும் செங்கோட்டையனின் பேச்சு அதிர்ச்சியை கொடுப்பதாக அமைந்துள்ளது.