லீமா ரோஸின் தோழி மீனா ஜெயக்குமார் தவெகவில் இணைந்தார் - பின்னணி?.
லீமா ரோஸின் தோழி மீனா ஜெயக்குமார் தவெகவில் இணைந்தார் - பின்னணி?
பொதுவாக தேர்தல் காலத்தில் அரசியல் கட்சியினர் கட்சி மாறுவது இயல்புதான். தமிழகத்தில் தேர்தல் முடிந்தும் அரசியல் கட்சிகளில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. தவெக பவருக்கு வந்துள்ளதால் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து தவெகவில் இணைந்து வருகிறார்கள். இந்நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவின் நிழலும், லீமா ரோஸின் தோழியுமான மீனா ஜெயக்குமார் தவெகவில் இணைந்துள்ளார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தவெக தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தலில் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இதனால் அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்து வருகிறார்கள்.
இதேபோல திமுகவின் சில முக்கிய நிர்வாகிகளும் தவெகவில் இணைந்துள்ளளனர். திமுக கலை இலக்கிய பேரவை மாநில துணை செயலாளராக இருந்தவர் மீனா ஜெயக்குமார். இவரின் கணவர் ஜெயக்குமார் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ வேலுவுக்கு மிகவும் நெருக்கமானவர். திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறையில் முக்கிய பவர் சென்டராக ஜெயக்குமார் குடும்பம் இருந்தது. கோவை மருதமலை கோயில் அறங்காவலர் குழு தலைவராகவும் இருந்தார்.
இவரின் மனைவி மீனா, கடந்த 2022 உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி மேயராவதற்கு முயற்சி செய்தார். மேலும் எம்எல்ஏ, எம்பி சீட்களுக்கும் முயற்சி செய்தார். கோவை பொறுப்பாளராக செந்தில் பாலாஜி இருந்ததால் அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. தேர்தல் முடிந்ததும் திமுக மற்றும் செந்தில் பாலாஜி மீது பல்வேறு விமர்சனங்களை வைத்துவிட்டு கட்சியில் இருந்து வெளியேறினார்.
மீனா ஜெயக்குமாருக்கு, பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் நெருங்கிய தோழி. தேர்தல் முடிந்ததும் இருவரும் சந்தித்து கொண்டனர். மேலும் அமைச்சர் செங்கோட்டையனையும் சந்தித்தார். அப்போதே மீனா தவெகவில் இணைய போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சரும், தவெக பொதுச் செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் மீனா தவெகவில் இணைந்துள்ளார்.
இதுகுறித்து மீனா ஜெயக்குமார் தன்னுடைய சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில், "மக்கள் நலனே அரசியலின் அடித்தளம் என்ற உறுதியுடன், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் ஆனந்த் அவர்களை நேரில் சந்தித்து, அவர்களின் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தேன். இது ஒரு கட்சி இணைவு மட்டுமல்ல; மக்களுக்காக முழுமையான அர்ப்பணிப்புடன் பணியாற்றும் புதிய பொறுப்பின் தொடக்கமாகும்.
தமிழ்நாடு முதலமைச்சர்ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலில், கழகத்தின் கொள்கைகளையும் இலட்சியங்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்து, மக்கள் நலனுக்காக நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட உறுதியேற்கிறேன். மக்களின் நம்பிக்கையே எங்கள் பலம். மக்கள் சேவையே எங்கள் அரசியல்" என்று கூறியுள்ளார். திமுக முன்னாள் அமைச்சரின் நிழல் தவெகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.