காமராஜர் காலை உணவு திட்டம்... டெண்டர் நிபந்தனை - தமிழக அரசு!

kamarajar-morning-food-scheme-tender-terms
காமராஜர் காலை உணவு திட்டம்... டெண்டர் நிபந்தனை - தமிழக அரசு!


பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அடுத்த 3 ஆண்டுகளுக்கான உணவு விநியோகம் தொடர்பாக டெண்டர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. காமராஜர் காலை உணவு திட்ட டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள, 1,545 அரசு ள்ளிகளில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும், 1.45 லட்சம் மாணவர்கள் பயன் பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து, நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும், இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் வாயிலாக, 19.34 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தவெக அரசு அமைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தை, 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை, செப்டம்பர் 17 ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்ய, முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 15.14 லட்சம் மாணவர்கள் கூடுதலாக பயன் பெறுவார்கள்.

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்திற்கு ஆண்டுதோறும் 343 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. நடப்பு 2026 -27 ஆம் நிதியாண்டில் இத்திட்டத்திற்கு, 217 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. தற்போது டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு நிபந்தனைகளை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த 3 ஆண்டுகளுக்கான காலை உணவு விநியோகம் தொடர்பாக டெண்டர் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கான நிபந்தனைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி, 13 வகை உணவுகளில் தினமும் ஒரு வகை வழங்க வேண்டும். 4 வகை உப்புமா, 4 வகை கிச்சடி, 3 வகை பொங்கல், 2 வகை கேசரி வழங்க வேண்டும். காலை 7.30 மணிக்குள் பள்ளிக்கூடங்களுக்கு சூடான உணவு கொண்டு சேர்க்கப்பட வேண்டும். 294 கலோரி சத்துடன் காலை உணவு வழங்க வேண்டும். குழந்தைகளுக்கான காலை உணவு 150 - 200 கிராம் எடையுடன் இருக்க வேண்டும்.

ஒப்பந்ததாரர்கள் பணம் பெற தலைமை ஆசிரியர் ஒப்புதல் கட்டாயம். பள்ளி தலைமை ஆசிரியரின் சான்றிதழ் கிடைத்த பிறகு ஒப்பந்ததாரருக்கு மாதாந்திர பணம் வழங்கப்படும். உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வின் மூலம் உணவின் தரம் கண்காணிக்கப்படும். மொபைல் ஆப் மூலம் உணவு விநியோகம் கண்காணிக்கப்படும் ஆகிய நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.