கரூர் நெரிசல் பலி: அரசு பணி ரத்து - ஐகோர்ட் உத்தரவு

karur-stamped-issue-cm-vijay-high-court-order
கரூர் நெரிசல் பலி: அரசு பணி ரத்து - ஐகோர்ட் உத்தரவு

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கப்பட்ட அரசு பணியை மதுரை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த மாதம் துவக்கத்தில் கரூர் சென்ற முதல்வர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து அரசு பணி வழங்கி பணி நியமன ஆணையை வழங்கியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அரசுப் பணியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இது விஜய்யின் தவெக அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தமிழக முதல்வர் விஜய் கடந்த 10 ஆம் தேதி கரூர் சென்றார். கரூரில் மக்கள் சந்திப்பை நடத்திய விஜய், அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அடுத்து பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினார். 31 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அரசுப் பணி உத்தரவு ரத்து

இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அரசு பணி வழங்க தடையில்லை என்றும் தற்காலிக அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது. தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அரசு பணி வழங்கப்பட்ட உத்தரவை ரத்து செய்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்ளுக்கு பணம், பொருளாதார உதவிகளை வழங்கலாம். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்படுமா? பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்கி தொழில் தொடங்குபவர்களாக மாற்றலாம். கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்க வழிகாட்டுதல்கள் உள்ளன.

சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி

பாதிக்கப்பட்டவர்களுக்கு சாதாரண அரசு பணி வழங்கப்பட்டுள்ளது என்பதை ஏற்க முடியாது. கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக வாரிசுகள் காத்திருக்கும் போது, இவர்களுக்கு எப்படி வழங்க முடியும். சிவகாசி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க முடியுமா? என்றும் சரமாரி கேள்வி எழுப்பிய நீதிபதி, அரசு வேலை வழங்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கரூர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரணையை கண்காணித்து வரும் நிலையில் எத்தகைய கருத்தையும் முன்வைக்க விரும்பவில்லை. அதுபோக அரசு தரப்பில் கருணைப் பணிக்கு சில வழிகாட்டுதல்கள் உள்ளன. வயது, கல்வி என தகுதியின் அடிப்படையிலேயே வழங்க வேண்டும். அனைவரையும் சமமாக பார்க்க வேண்டும்.

இளைஞர்கள் பலர் காத்திருக்கும் போது..

இளைஞர்கள் பலர் காத்திருக்கும் போது இவர்களுக்கு வேலை வழங்கியதை ஏற்க முடியாது. அரசு தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக கூறுவதை ஏற்க முடியாது. எந்த ஒரு பணியும் சாதாரண பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே. சட்டப்பிரிவின் 162-வது பிரிவின் கீழ் நலத்திட்ட கொள்கைகளை வகுப்பதற்கு அரசுக்கு பரந்த நிர்வாக அதிகாரங்கள் இருந்தாலும், அந்த அதிகாரங்கள் அரசியலமைப்பு வரம்புகளுக்குள் செயல்பட வேண்டும்.

விபத்து, பேரிடர்களின் போது

சீரான சட்டப்பூர்வக் கொள்கை இல்லாமல் இத்தகைய நியமனங்களை அனுமதிப்பது, தன்னிச்சையான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். அதோடு, மற்ற விபத்துகள் அல்லது பேரிடர்களின் போதும் இதே போன்ற கோரிக்கைகளுக்கு வழியை ஏற்படுத்தும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.