17 உயரமான கட்டிடங்களுக்கு அனுமதி - தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு!

cmda-real-estate-tamilnadu-cm-joseph-vijay
17 உயரமான கட்டிடங்களுக்கு அனுமதி - தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அதிரடி உத்தரவு!

சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் தனது கட்டிட அனுமதி நடைமுறையில் கொண்டுவந்த அதிரடி மாற்றத்தைத் தொடர்ந்து, கடந்த ஒரே மாதத்தில் மட்டும் சுமார் 17 உயரமான கட்டிடங்களுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதிலும் அளிக்கப்பட்ட மொத்த அனுமதிகளின் எண்ணிக்கைக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுக்குமாடி மற்றும் உயரமான கட்டிடங்களை கட்டுவதற்கான தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால், அதற்கான திட்ட அனுமதியைப் பெறுவதில் நிலவி வந்த தாமதம் ரியல் எஸ்டேட் துறையினரிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், சிஎம்டிஏவின் இந்த வேகமான நடவடிக்கை சென்னை ரியல் எஸ்டேட் சந்தையில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

சிஎம்டிஏ வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சென்னையின் உயரமான கட்டிடங்களுக்கான அனுமதி பெறப்பட்ட விபரம் பின்வருமாறு:
2021: 66 திட்டங்களுக்கு அனுமதி
2022: 58 திட்டங்களுக்கு அனுமதி
2023: 30 திட்டங்களுக்கு அனுமதி
2024: 17 திட்டங்களுக்கு அனுமதி
2025: 9 திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி

கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கும் வேகம் படிப்படியாகக் குறைந்து வந்ததை இந்த டேட்டா காட்டுகின்றன. மேலும், பல கட்டுமான நிறுவனங்களின் கோப்புகள் மற்றும் விண்ணப்பங்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்புதல் பெற முடியாமல் தேங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது.

முந்தைய அனுமதி நடைமுறையின்படி, 18.3 மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட கட்டிடங்களின் வரைபடங்கள், சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தலைமையிலான குழுவால் பரிசீலிக்கப்படும். அதன் பின்னர், இறுதி ஒப்புதலுக்காக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருக்குக் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

அமைச்சக அளவில் இந்தக் கோப்புகளுக்கு ஒப்புதல் பெற வழக்கமாக 15 நாட்கள் முதல் 2 மாதங்கள் வரை தாமதமாகும். இதற்கிடையே, முந்தைய நடைமுறையில் அரசியல் ரீதியான கட்சி நிதி கோரப்பட்டதால், பல முக்கியமான கோப்புகள் நீண்ட காலமாக நிலுவையில் வைக்கப்பட்டதாக துறை சார்ந்த அதிகாரி ஒருவர் பரபரப்பான குற்றச்சாட்டைத் தெரிவித்துள்ளார்.

இந்தத் தேவையற்ற தாமதங்கள் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கடந்த ஜூன் 15 அன்று ஒரு புதிய அரசாணையை வெளியிட்டது. இதன் மூலம், உயரமான கட்டிடங்களுக்கு இறுதி ஒப்புதல் அளிக்க அமைச்சருக்கு இருந்த அதிகாரம் நீக்கப்பட்டது.

இதன் பயனாக, இப்போது சிஎம்டிஏ குழுவே நேரடியாக முடிவெடுத்து ஒப்புதல் அளிக்கிறது. அரசு அளவில் ஒப்புதல் பெற வழக்கமாக 2 மாதங்கள் வரை ஆகும். புதிய விதிமுறையின் மூலம் அந்த 2 மாத கால விரயம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாற்றம் அனுமதி முறையை மிகவும் வேகமாக மாற்றியுள்ளது.

அதேவேளையில், கட்டிடங்கள் கட்டுவதற்கு சுற்றுச்சூழல் அனுமதி, விமானப் போக்குவரத்துத் துறை அனுமதி போன்ற பிற சட்டரீதியான சான்றிதழ்களையும் டெவலப்பர்கள் பெற வேண்டியுள்ளது. எனவே, அனைத்துத் துறைகளின் கூட்டு நடவடிக்கைக்குப் பிறகே கால விரயம் எந்த அளவுக்குக் குறையும் என்பது தெளிவாகும்.

அமைச்சரின் தலையீடு நீக்கப்பட்டதன் மூலம் லஞ்ச நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த வெளிப்படையான புதிய நடைமுறை காரணமாக, வரும் காலங்களில் சென்னையின் உட்கட்டமைப்பு மற்றும் கட்டுமானங்கள் புதிய உயரத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.