தங்க நகையுடன் நடனமாடிய வேல்முருகன் யார்?

katpadi-velmurugan-dmk-duraimurugan-kathir-anand
தங்க நகையுடன் நடனமாடிய வேல்முருகன் யார்?

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மகனும், வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த் - சங்கீதா அவர்களின் மகள் செந்தாமரைக்கும், திட்டக்குடி ரவி கண்ணன் - தீபா ஆகியேரின் மகன் தீபக் ரவிக்கும் திருமண நிச்சயதார்த்தம் கடந்த ஜூலை 12ம் தேதி இனிதே நடந்தது. வேலூர் காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் கல்லூரியில் இந்த நிச்சயதார்த்த விழா நடந்தது.

இந்த விழாவில் திமுகவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர், நடிகைகளும், யூடியூப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மிகப்பிரம்மாண்டமான முறையில் நடந்த விழாவில் கதிர் ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் நடனமாடினார்கள். இந்த வீடியோ கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. அந்த வீடியாவில் தங்க நகைநிறைய அணிந்தபடி ஒருவர் கதிர் ஆனந்துடன் சேர்ந்து நடனமாடினார்கள். அவர் யார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலர் அவரது பெயர் வேல்முருகன் என்பதை மட்டும் கண்டுபிடித்து வீடியோவை ஷேர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த வேல்முருகன் யார் என்பதை பார்ப்போம்.

வேலூர் மாவட்டம், காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுவின் தலைவர் தான் வள்ளிமலை வேல்முருகன். தி.மு.க-வைச் சேர்ந்த நிர்வாகியான இவர், கடந்த 2021 தேர்தலில் வென்று, காட்பாடி ஊராட்சி ஒன்றியக்குழுவின் தலைவரானார். கழுத்தில் கொத்துக் கொத்தாக கிலோக் கணக்கில் தங்க நகைகளை அணிந்து இருப்பார். அதேபோல உருளை வடிவத்தில் பிரேஸ்லெட்களையும் வேல்முருகன் அணிந்து இருப்பார். தெற்கே தூத்துக்குடி ஹரி நாடாருக்கு டஃப் கொடுக்கும் வகையில் வடக்கே வேல்முருகன் நடமாடும் நகைக்கடையாக இருந்து வருகிறார்,

இவர் 2021 உள்ளாட்சித் தேர்தலில் காட்பாடியில் 5-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் சீட் பெற்று வென்றார். அதன்பின்னர் காட்பாடி ஒன்றிய குழு தலைவரானார். 2019 தேர்தலில் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்துக்காக தீவிரமாக வேலை செய்தவர். 2021 சட்டசபை தேர்தல் துரைமுருகனுக்காக வேலை செய்தார்.

வேல்முருகனின் தந்தை பெயர் வேணுகோபால், மனைவி பெயர் மலர்க்கொடி,இவர் எஸ்.எஸ்.எல்.சி வரை படித்துள்ளார். மொத்தமாக ரூ.22 கோடிக்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக 2021 வேட்புமனு நிலவரப்படி தெரியவந்தது. அசையும் சொத்துகள் 10,79,66,676 ரூபாய் என்றும், அசையா சொத்துகள் 3,27,27,090 ரூபாய் என்றும் வேட்புமனுவில் 2021ம் ஆண்டு குறிப்பிட்டிருந்தார். இவரது மனைவி மலர்கொடி பெயரில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.