கொளத்தூருக்கு இடைத்தேர்தல் வருமா? - மாஃபா பாண்டியராஜன்
கொளத்தூர், வில்லிவாக்கம் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் வரக்கூடும் என்றும், அதற்காக அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் மாஃபா பாண்டியராஜன், அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய மாஃபா பாண்டியராஜன், தற்போதைய ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
அப்போது, ஒரே ஒரு மதத்தை சார்ந்து அரசாங்கம் செயல்படுவதாக மக்களிடம் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தனது மதம் குறித்து பேசியதை சுட்டிக்காட்டிய அவர், அன்பின் மொழியை இந்து, இஸ்லாமிய மதங்கள் வழங்கவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், தவெக தலைவர் விஜய் வில்லிவாக்கம் தொகுதிக்கு வரும்போது கூட்டம் கூடிவிடும் என கூறப்படுவதாகவும், ஆனால் அவர் தொகுதிக்கு வருவதில்லை என்றும் மாஃபா பாண்டியராஜன் விமர்சித்தார். இன்னும் சில ஆண்டுகளில் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வருவார் என கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்து வருவதாகக் கூறினார். இதனிடையே, கொளத்தூர் அல்லது வில்லிவாக்கம் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரக்கூடும் என்றும், எனவே அதிமுகவினர் அனைவரும் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா மற்றும் டிக்கெட் விநியோகம் தொடர்பாகவும் அவர் விமர்சனங்களை முன்வைத்தார். அதிமுக ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கானோருக்கு இலவசமாக டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதாகவும், தற்போது டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தாம்பரம் பகுதியில் முடிக்கப்பட்ட பணிகளுக்கு மீண்டும் டெண்டர் விடப்பட்டதாகவும், இதுகுறித்து கேள்வி எழுப்பிய ஐஏஎஸ் அதிகாரி மாற்றப்பட்டதாகவும் அவர் கூறினார். அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மாஃபா பாண்டியராஜன் குற்றம்சாட்டினார்.