கோயில்கள் அருகே உள்ள பெரியார் சிலையை அகற்றுவேன் - அண்ணாமலை

we-the-leaders-annamalai-periyar-statue
கோயில்கள் அருகே உள்ள பெரியார் சிலையை அகற்றுவேன் - அண்ணாமலை

பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துகளில் பெண்கள் விடுதலை மற்றும் சாதி ஒழிப்பு ஆகியவற்றை ஏற்று கொள்வதாகவும், அதேநேரத்தில் அவரது நாத்திக கொள்கை மற்றும் பிராமண எதிர்ப்பு நிலைப்பாட்டை முழுமையாக நிராகரிப்பதாகவும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், பெரியார் சிலை தொடர்பாகவும் அவர் சில கருத்துகளை குறிப்பிட்டார்.

பெரியாரின் 148வது பிறந்தநாளையொட்டி அண்ணாமலை தனது சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். மதுரையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது அவர் இது தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.


வைகை ஆற்றின் 33 ஏக்கர் பரப்பளவிலான பகுதியை 7 வாரங்களாக வீ தி லீடர்ஸ் அமைப்பினர் தூய்மைப்படுத்தினர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை பல்வேறு விஷயங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசினார். குறிப்பாக பெரியாரின் சமூக சீர்திருத்த பணிகள் குறித்து பேசிய அவர், பெண்கள் விடுதலை மற்றும் சாதி ஒழிப்பு குறித்து பெரியார் வலியுறுத்தியதை ஏற்று கொள்வதாக தெரிவித்தார். அதேநேரம் பெரியாரின் நாத்திக கருத்துகளையும் பிராமண எதிர்ப்பு நிலைப்பாட்டையும் தான் முழுமையாக நிராகரிப்பதாக கூறினார்.

செப்டம்பர் 17ஆம் தேதி பெரியாரின் பிறந்தநாளையொட்டி அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியிருந்தார். பெரியார் சமூக சீர்திருத்த இயக்கங்கள் சமூகத்தில் முக்கிய பங்காற்றியதாகவும், தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் அழியாத தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், சமத்துவமின்மை மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தனது வாழ்நாளின் பெரும்பகுதியை பெரியார் செலவிட்டதாகவும் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

அரசியலுக்கு வந்த பிறகு பெரியாரின் பிறந்தநாளை அண்ணாமலை பொதுவெளியில் குறிப்பிடுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்பு 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த சிறிது காலத்திலேயே பெரியாருக்கு அவர் புகழஞ்சலி செலுத்தியிருந்தார். இருப்பினும், அப்போது பாஜகவில் இருந்தே அவருக்கு எதிர்ப்பு வந்ததால் அதன் பிறகு பெரியார் பிறந்த நாளுக்கு போஸ்ட் போடுவதை தவிர்த்தார்.

மேலும், தமிழக பாஜக தலைவராக இருந்த காலகட்டத்தில் பெரியாரின் கருத்துகளின் பல விஷயங்களை அண்ணாமலை தொடர்ந்து எதிர்த்தார். குறிப்பாக, இந்து கோயில்களுக்கு அருகே பெரியார் சிலைகள் மற்றும் நாத்திக வாசகங்கள் இருப்பது தொடர்பாக கடுமையாக சாடினார். இந்தச் சூழலில் தான் பெரியாரை பாராட்டி அண்ணாமலை வெளியிட்ட பதிவு அவரது ஆதரவாளர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியது.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை, பெரியாரின் அரசியல் வரலாற்றில் பல முரண்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்தி எதிர்ப்பு தொடர்பான பெரியாரின் நிலைப்பாட்டை உதாரணமாக குறிப்பிட்ட அவர், 1935ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு குறித்து பேசிய பெரியார், 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோரை சுட வேண்டும் என்று கூறியதாக குறிப்பிட்டார்.

காங்கிரஸ் மற்றும் திமுகவுடனான பெரியாரின் அரசியல் தொடர்புகளையும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார். குறிப்பாக, 1961ஆம் ஆண்டு அப்போதைய சென்னை முதலமைச்சர் காமராஜருக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு பெரியார் கேட்டுக்கொண்டதையும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்து கோயில்களுக்கு வெளியே நாத்திக வாசகங்களுடன் இருக்கும் பெரியார் சிலைகள் தொடர்பான தனது நிலைப்பாட்டை தான் மாற்றவில்லை என அண்ணாமலை தெரிவித்தார். 'கடவுள் இல்லை' என்ற நாத்திக வாசகங்கள் கோயிலுக்கு வெளியே இருப்பது பொருத்தமாக இருக்காது என்று கூறிய அவர், தான் ஆட்சிக்கு வந்தால் அந்த சிலைகளை அகற்றுவோம் என்றார்.

ஆனால் சிலைகளை அழிக்கப் போவதில்லை என்றும், அவற்றை மரியாதையுடன் வேறு பொது இடங்களுக்கு மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்தார். பாஜகவில் இருந்த காலத்திலும் இதே நிலைப்பாட்டை அண்ணாமலை முன்வைத்திருந்தார். தற்போது பாஜகவில் இருந்து விலகி வீ தி லீடர்ஸ் இயக்கத்தில் இணைந்த பிறகும் அவரது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்