Breaking News :

Sunday, May 19
.

சுஜாதாவின் ஜப்பானிய அனுபவங்கள்... 1989.


நடன மலர் எனும் தொகுப்பு

நாரிட்டா ஏர்போர்ட்டில் இறங்கியபோது காலை... ஜப்பானை ஏரோப்ளேன் ஜன்னலுக்கு வெளியே பார்த்தபோது தீவு, மலை, கடல் என்று தெரியாதபடி எல்லாமே பச்சை. விமான நிலையத்தில் இமிக்ரேஷனின் எட்டு க்யூவில், ஒன்றில் நாங்கள் மூவரும் நிற்க, நான் அந்த க்யூ சின்னதாக இருக்கிறது என்று மற்றதில் போய் நின்றேன். விதி! இமிக்ரேஷன் அதிகாரி ஒரு முறைக்கு மேல் என்னைப் பார்க்காமல், ``எதற்காக ஜப்பானுக்கு வந்திருக்கிறாய்...?’’

``பிசினஸ் விசிட்..’’

``இன்விடேஷன் இருக்கிறதா...? டெலிபோன் நம்பராவது இருக்கிறதா..?’’

``நண்பர்களிடம் இருக்கிறது..’’

``அவர்கள் எங்கே..?’’

``அதோ, அந்த க்யூவில்....’’ இல்லை!

அவர்கள் அனுமதிக்கப்பட்டுக் கடந்து விட்டார்கள். ``அங்கே இருக்கிறார்கள்... போய் வாங்கி வரவா..?’’

``அங்கே போகமுடியாது...’’

``இன்விடேஷன் அவர்களிடம் தான் உள்ளது...’’

``ஸாரி அங்கே போகமுடியாது...’’

``நான் என்ன செய்ய வேண்டும்...?’’

``ஜப்பானுக்குள் நுழைய அனுமதி இல்லை.. நெக்ஸ்ட்...’’

``ஐ ஸே திஸ் இஸ் ரிடிக்யுலஸ்...’’

``நெக்ஸ்ட்.. ப்ரீஸ்...!.’’

(ஜப்பானியர்களுக்கு `ல’வே வராது... ப்ளீஸ்க்கு பதில் ப்ரீஸ்...! புல்லட் ட்ரெயினுக்கு.. புரட் ட்ரெயின்..!)

என்னுடன் வந்திருந்த ஷங்கரும், விங் கமாண்டரும் ஜப்பானிய அரசால் அனுமதிக்கப்பட்டு, அந்தப் பக்கம் சப்பை மூஞ்சிக் கூட்டத்தில் எங்கே அவர்களைத் தேடுவது!

எனக்குச் சட்டென மற்றொரு உத்தி தோன்றியது. இன்னொரு க்யூவில் போய் நின்றேன். அந்த அதிகாரி கேள்வி கேட்காமல் பாஸ்போர்ட் விசாவைப் பார்த்து விட்டுவிட்டார்.

முத்திரை குத்துவதற்கு முன் என் கருப்புக் கண்ணாடியை கழற்றச் சொல்லி முகத்தைப் பார்த்தார். சொந்த தங்கையை ஒப்படைக்கலாம் போன்ற என் மூஞ்சியைப் பார்த்துவிட்டு, ``வெர்கம்’’ என்று உள்ளே அனுமதித்துவிட்டார். எனக்கு அப்போதுதான் உறைத்தது. என் கருப்புக் கண்ணாடியில் தான் மிஸ்டேக். முதல் அதிகாரிக்கு நான் ஒரு ஸ்மக்ளானி போல தெரிந்தது கருப்புக் கண்ணாடியும் திருத்தப் படாத மீசையும்தான் காரணம்!

வெளிநாடு செல்பவர்களுக்கு மற்றொரு  உபதேசம். இமிக்ரேஷன் அதிகாரியிடம் க. கண்ணாடி அணியாதீர்கள். நண்பர்களை விட்டுப் பிரியாதீர்கள். ஜெயிலுக்குப் போனால் கூட மாட, ரம்மியாட நண்பர்கள் வேண்டும்.

நாரிடாவில் எங்களை அழைத்துப் போக நோமுரா என்பவர் வரவேண்டும். குறிப்பிட்ட நோமுரா எனக்குத் தெரியும். மூஞ்சி தெளிவாக நினைவு. ஒரே ஒரு சிக்கல். நோமுராவை நான் பார்த்தது பெங்களூரில் இங்கே..?

ஜப்பானில் போகிற.. வருகிற.. பேர் அனைவரும் நோமுரா போலவே இருந்தனர். அதோ நோமுரா... இதோ நோமுரா... என ஒவ்வொருவராகக் கைகுலுக்கப் போய், நிஜ நோமுரா.. கொஞ்சம் லேட்டாக வந்து ``ரொம்ப ஸாரி’’ சொல்லி, சற்று தூரத்தில் நின்று இடுப்பை மடக்கி, ஒரு முறை குனிந்துவிட்டு சின்னதாக ஒரு பரிசு கொடுத்து பழுப்பாகச் சிரித்தார். அங்கு எல்லோரும் ஒரே ஜாடை; நல்ல மஞ்சள் அல்லது வெளுப்பு. ஆனால் பற்கள் அனைவருக்கும் பழுப்பு. ஏர்போர்ட் அருகிலேயே சில மணி நேரம் தங்க ஓர் ஓட்டலுக்குப் போனபோது, ஜப்பானின் முதல் தாக்கம் கிடைத்தது.

ஓட்டல் வாசலில் இரு இளம்பெண்கள் புஷ்பம் போல் சிரித்து, எங்களை நோக்கி `குடு மார்னிங்’ என்று குனிந்து வரவேற்றார்கள். ரொம்ப உற்சாகமாக இருந்தது. அந்தப் பெண்களுக்கு வேறு வேலையே இல்லை! அங்கு வருகிற அனைவரையும் வணங்கி வரவேற்பதுதான் அவர்கள் உத்தியோகம். சும்மா ஒரு சிரிப்பு, ஒரு அரிகாத்தோ (அரிகாத்தோ என்றால் தாங்ஸ்!) அவ்வளவுதான். சிரிக்க காசு கொடுக்கிறார்கள் ஜப்பானில் என்பது புலனாயிற்று.

ரூம் சின்னதாக இருந்தாலும் ஒரு டார்ச், ஒரு கிமோனா, ஒரு ரப்பர்செருப்பு போன்ற உபயோகமான வஸ்த்துக்கள் வைத்திருந்தார்கள். சின்னதாக ஃப்ரிட்ஜ், டி.வி. எல்லாம் உழக்கு சைஸில் இருந்தன. கிமோனாவைக் கடத்திவிடலாம் என்று பார்த்தால், அதன் மேல்.‌..  இது உங்களுக்குப் பிடித்திருந்தால் மானேஜரிடம் சொல்லுங்கள் விலைக்குத் தருகிறோம்... என்று குறிப்பு எழுதியிருந்தது.

ஜப்பானில் பெரும்பாலான ஓட்டல் அறைகள் சின்னதாகவே இருந்தன பாத்டப், கட்டில் எல்லாம் அவர்கள் சைஸுக்குத் தக்கபடி..

எலக்ட்ரானிக்ஸ் தொழில் துறையில் மிக உயரத்தில் இருக்கும் சின்ன சைஸ் மனிதர்கள்..

ஓட்டல் அறை டி.வி.யின் ரிமோட் கண்ட்ரோலில் ``பே டி.வி. (Pay T.V.) என்று ஒரு சிவப்பு பொத்தான் இருந்தது.

மரியாதை செலுத்த விரும்பும்போது

பெற்றோர்

இறந்துவிட்டனர்.

.... ஜப்பானியக் கவிதை.

...அதை அழுத்தினால் சானல் மாறி திரையில் நீலப்படம் வருகிறது. இரு ஜப்பானிய பெண்கள் மோசமான காரியங்களில் இருக்க... கண்களை உரித்துப் பார்ப்பதற்கு முன் சட்டென்று அந்தப்படம் கரைந்து... ``நீங்கள் மேலும் பார்க்க விரும்பினால் `சிவப்பு பொத்தானை மறுபடி அழுத்துங்கள்’ என்று கேட்டுக் கொள்கிறது திரை. அழுத்தினானல் படம் தொடர்கிறது.

இங்கே அழுத்த.. அழுத்த.. ஓட்டல் கம்ப்யூட்டரில் கணக்கு விஷமாக ஏறிக்கொண்டே போகிறது. அதுதான் சோகம்!

இருந்தாலும் இந்த ரிமோட் கண்ட்ரோல், ``பே டி.வி.’’ கம்ப்யூட்டருக்கு இணைப்பு என்பதெல்லாம் எலக்ட்ரானிக்ஸின் உன்னத சில்லுகள் கொண்ட சாதனங்கள். இத்தனை டெக்னாலஜியை நீலப் படம் காட்ட பயன்படுத்தும் ஜப்பானின் உள் மனச்சேதம் இதன் ஒட்டுமொத்தமான குணங்களில் ஒன்று. மற்றது எதிலும் Perfection அதிலும் நீலப்படமானாலும் சரி – ஓட்டல் அறைகளில் வெளிப்படையாக ஜன்ய பாகங்களைக் காட்டுவதில் தடை இருக்கிறது போலும். அதனால் மற்றொரு டெக்னாலஜி, படத்தைக் கூர்ந்து கவனித்தால் சுவாரஸ்யமான பாகங்கள் மட்டும் பிடிவாதமாக டிஜிட்டல் மொஸய்க் (Digital Mosaic) முறையில் மழுப்பிவிடுகிறார்கள்.. மீண்டும் டெக்னாலஜி!

இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஓட்டல் அறையில் தவறாமல் படுக்கையடியில் வைத்திருக்கும் புத்தகம்: ``புத்தரின் உபதேசங்கள்!’’

இந்த ஓட்டல் அறை சமாசாரம் ஜப்பான் தேசத்தின் ஒரு பொழிப்புரை எனலாம். முதலில் இடக்குறைவு. அதனால் கச்சிதமான... ஆனால் வசதியுள்ள அறை. கன்னாபின்னா சமாசாரத்துகெல்லாம் கூட உன்னதமான டெக்னாலஜி!

தேசிய மதமான பௌத்தத்தைப் பற்றிய அலட்சியப் போக்கு. "கிட்ஷ்" (Kitsch) என்ற ஒரு ஆங்கில வார்த்தை இருக்கிறது. அபத்தமாக செல்வச் சிறப்பைக் காட்டும் உரத்த ஆடம்பரம். தமிழ் சினிமா நாயகன் கனவுக் காட்சியில் தங்கக் கோட்டு போட்டுக் கொண்டு வருகிறானே அது `கிட்ஷ்’! இது ஜப்பானில் அதிகம். கட்டடங்களில், டாய்லெட்டுகளில், அநாவசிய சித்திர வேலைப்பாடு. எட்டாம் மாடியில் போலி வீனஸ் டிமிலோ சிலைகள், கேக் வடிவத்தில் கட்டடங்கள் என பணத்தை வைத்துக்கொண்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழிக்கிறார்கள்.

பூமிக்கடியில் பாரல் பாரலாக பெட்ரோல் புதைக்கிறார்கள். அமெரிக்க பல்கலைக் கழகங்கள் பலவற்றை விலைக்கு வாங்க முயற்சிக்கிறார்கள்.

ஹாலிவுட் ஸ்டுடியோக்கள், எதிர்காலத் திரைக்கதைகள், கம்ப்யூட்டர் கம்பெனிகள், மைனாரிட்டி ஷேர்கள் வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலாக்களில் அதிகம் செலவழிப்பவர்கள் ஜப்பானியர்கள்தாம். ஆனால் ஒரு அட்சரம் இங்கிலீஷ் தெரியாது. ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு ஜப்பானில் பிழைக்க முடியாது. டாய்லெட் கதவுகளில் கூட ஆண் எது பெண் எது என்று தெரியவில்லை.

ஜப்பானிய மொழியில்தான் எழுதியிருக்கிறார்கள். எல்லா எழுத்தும் பூச்சி பூச்சியாக! இந்த எழுத்துக்களை வைத்துக்கொண்டு எப்படித்தான் படித்து பாஸ் பண்ணினார்களோ... என்று ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வோர் எழுத்தும் திருப்பதி பெருமாள் மாதிரி அலங்காரமாக இருக்கிறது!

இம்மொழியின் பட எழுத்துக்களை `ஐடியோ கிராம்’ என்று சொல்கிறார்கள். சீனா, கொரியா போன்ற கிழக்காசிய மொழிகள் அனைத்தும் சீனத்து `கான்ஜி’ என்கிற எழுத்திகளிலிருந்து வந்தவை. கான்ஜி, சீனாவில் தோன்றியது கி.மு. 14ம் நூற்றாண்டில் என்கிறார்கள். அது கொரியா வழியாக நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் ஜப்பானிய வியாபாரிகள் மூலம் பரவியது. `கன்பூஷியஸின் பொன்மொழிகள்’ முதலில் ஜப்பானில் வந்த புத்தகம்.

கான்ஜி, ஒவ்வொரு எழுத்தும் ஒரு பொருளை, ஒரு முழு வார்த்தையைக் குறிக்கின்றன. எகிப்திய ஹிரோக்ளிஃபிக்ஸ் போல் இவை மரம், சூரியன், வீடு.. இப்படி சித்திரங்களிலிருந்து இவ்வெழுத்துக்கள் புறப்பட்டன. தமிழ் போன்ற மொழிகளில் எழுத்துகளுக்கு தனி அர்த்தம் கிடையாது. ஆனால் கான்ஜி, எழுத்துக்கள் அனைத்துமே வார்த்தைகள்.

இக்குழப்பம் போதாதென்று ஜப்பானியர்கள் கான்ஜி எழுத்து நவீன விஷயங்களுக்கு தடையாக உள்ளதென்று, பட எழுத்துக்களுடன் சில ஒலியன்களையும் சேர்த்து அவற்றை `ஹிராகானா காட்டகானா’ (Hiragana Katagana) என்று சொல்கிறார்கள். நவீன ஜப்பானிய மொழிப் பட எழுத்துக்கள் இருவகை ஒலியன்களாகக் கலந்துள்ளன. இவற்றை எழுதும்போது..மேலும், மேலிருந்து கீழ், சில சமயம் இடமிருந்து வலம் என மூன்று வகையாக எழுதுகிறார்கள்.

இங்கு பத்திரிகைகள் எல்லாமே கணையாழிபோல, கடைசிப் பக்கத்திலிருந்து படிக்கிறார்கள். இத்தனை குழப்பங்கள் இருந்தும் எத்தனை முன்னேற்றம்! தமிழிலேயே கற்றுக்கொண்டால் நாம் பின் தங்கிவிடுவோம் என்று இனி யாராவது சொன்னால், அந்த ஆளை உதையுங்கள்.

ஜப்பானில் இந்தியத் தூதரகத்துக்குப் போய்விட்டு மாலையே குமோ மோட்டோ எனும் தீவுக்குப் போனோம். ஜப்பானியர்கள் விமானம் செய்வதில்லை. அது ஒன்றைத்தான் விட்டு வைத்துள்ளார்கள். `போயிங் 767’ என்ற ஏர் பஸ் போன்ற விமானத்தில் சில புதுமைகளை செய்திருக்கிறார்கள். விமானம் டேக் ஆஃப் செய்யும் போது.. அதன் மூக்கில் இருக்கும் வீடியோ காமிராவிலிருந்து தெரியும் காட்சியை காபினுக்குள் டி.வி.யில் போடுகிறார் பைலட். நாமே விமானம் ஓட்டுவது போன்ற பிரமை ஏற்படுகிறது.

அது முடிந்ததும் விமானம் சுதாரித்துக் கொண்டு சீராகப் பறந்து கொண்டிருக்க.. முன் ஸீட்டில் சின்னப் பாப்பா ஒன்று எட்டிப் பார்த்தது. பொம்மை போல் ஒரு வயசு இருக்கும் என எண்ணிக் கொண்டிருந்த போது, பாப்பா ஒரு ஆச்சரியமான காரியம் பண்ணியது. ஸீட்டுக்கு அருகே இருந்த ஹெட்போனைச் சொருகி காதில் மாட்டிக்கொண்டு தானாகவே கையருகில் இருந்த சானல் ஸ்விட்சை ஒவ்வொன்றாகத் திருகி, தனக்கு இஷ்டமான பாட்டைத் தேர்ந்தெடுத்து சமர்த்தாக உட்கார்ந்தது.

பின்னால் நான் இன்னமும் சானல் ஸ்விட்சைத் தேடிக் கொண்டிருந்தேன்! இக்காட்சி என்னை மிகத் தீவிரமாக சிந்திக்க வைத்தது. நீங்களும் யோசித்துப் பாருங்கள்.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.