Breaking News :

Sunday, October 27
.

"பகவானை விட பாகவதன் உயர்ந்தவன்" - காஞ்சி மகா பெரியவா


பெரியவாளுக்குத் தன்னைப் பற்றி யார் நிந்தனை செய்தாலும் கோபம் வராது. ஆனால், தன்னிடம் தொண்டு செய்பவர்களைப் பற்றிக் குறைவாகப் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

"ஹெக்கண" என்ற கன்னட வார்த்தையால், தமிழ்ப் பணியாளர்களை விளித்த சில கன்னட தாய் மொழிக்காரர்கள்.

ஸ்ரீமடத்தில் கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட சிலர் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் எல்லோருக்கும், மகாப் பெரியவாளும் கன்னடம் பேசுபவர் என்பதால், உள்ளூர அகங்காரம்.

தமிழ்ப் பணியாளர்களைக் கூப்பிடும்போது, "ஹெக்கண" என்று விளித்து அழைப்பார்கள்.அந்தக் கன்னடச் சொல்லுக்கு, உண்மையான அர்த்தம் என்ன என்று தெரியாத தமிழடியார்கள், ஏதோ - சார்,ஐயா, சுவாமி நண்பா என்று பொருள் கொண்டு பதிலளித்து வந்தார்கள்.

ஒரு நாள் கன்னடம் பேசும் தொண்டர், 'ஹெக்கண' என்று ஒரு தமிழ் சிஷ்யரைக் கூப்பிடுவதை கேட்டுக் கொண்டே வந்து விட்டார்கள் பெரியவா.

அதுவரை பெரியாவாளுக்கு அப்படி ஒரு கோபம் வந்து யாரும் பார்த்ததேயில்லை.

"இவர்களெல்லாம் ஹெக்கண என்றால்,நீங்களெல்லாம் என்ன?. குரூரமானமிருகங்கள். இனிமேல் பூஜைக் கட்டுக்கு கன்னடக்காரர்கள் யாரும் வரக்கூடாது" என்று கடுமையான உத்தரவு போட்டு விட்டார்கள்.

பின்னால் தமிழ் சிஷ்யர்கள் விசாரித்த போது, ஹெக்கண என்றால் பெருச்சாளி என்று அர்த்தம் என்பது தெரியவந்தது.

அப்போது ஸ்ரீமடத்தில் பூஜ்ய ஸ்ரீ அனந்தானந்த ஸ்வாமிகளும்இருந்தார். அவரிடம் போய் முறையிட்டிருக்கிறார்கள் பாதிக்கப்பட்டவர்கள். பெரியவாளிடம் தாராளமாகப் பேசும் உரிமை உடையவர் அவர்.

மறுநாள் வாய்ப்புக் கிடைத்த போது. "யாரோ எதையோ சொன்னதைப் பெரியவா பொருட்படுத்தக்கூடாது. நானும் பெரியவாளும் கூடக் கன்னடக்காரர்கள் தான்.. அவர்களை மன்னித்து, மறுபடியும் கைங்கர்யத்துக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

பின்னர் தான் அவர்கள் பூஜைக்கட்டில் சேவை செய்ய அனுமதிக்கப்பட்டார்கள்.

பெரியவாளுக்குத் தன்னைப் பற்றி யார் நிந்தனை செய்தாலும் கோபம் வராது. ஆனால், தன்னிடம் தொண்டு செய்பவர்களைப் பற்றிக் குறைவாகப் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டார்கள்.

"பகவானை விட பாகவதன் உயர்ந்தவன்"

நிதர்சனமான நிஜம் தான்.

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.