Breaking News :

Sunday, October 27
.

விவாகரத்து வரை போன ஒரு தம்பதிகளை சேர்த்துவைத்த பெரியவா


ஒரு கணவன், மனைவி...ஒற்றுமையாகத் தான் இருந்தனர். திடீரென அவர்களிடையே தகராறு வந்தது. பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் இதை ஊதி ஊதி பெரிது பண்ணி விட்டார்கள்.  கடைசியில் விவாகரத்து வரை போனது. அவளுக்கு விவாகரத்தில் விருப்பமில்லை. ஏன் அவள் கணவனுக்கும் கூட அதில் சம்மதமில்லை. வீட்டு பெரியவர்களுக்கு கட்டுப்பட வேண்டிய சூழலில் இருந்தார்கள்.

காஞ்சிப் பெரியவரின் ஆசிகளோடு என்றுதானே கல்யாணப் பத்திரிகையில் அச்சிட்டோம்! அவர் நடமாடும் தெய்வ மல்லவா! அவரைப் போய்ப் பார்ப்போம் என முடிவு செய்தாள்.

அவள் தன் பெற்றோருடன் காஞ்சிபுரம் போனாள். பெரியவரின் அருள் வேண்டி அவர்முன் நின்றாள். நிம்மதியில்லாமல் தவிக்கும் தன் மனநிலையை  மானசீகமாக அவரிடம் முறையிட்டாள்.

எல்லார் மனதையும் படித்துவிடும் ஆற்றல் வாய்ந்த அந்தக் கருணைக் கடல், அவளையே பரிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு 'காமாட்சி கோவிலுக்குப் போய் அம்பாளை தரிசனம் பண்ணிவிட்டு வா!' என்றார். அவள் புறப்பட்டாள்.

பெற்றோரும் அவளோடு புறப்பட்டனர்.

''நான் அவளைத்தான் காமாட்சி கோவிலுக்குப் போகச் சொன்னேன்!'' என்றார் சுவாமி.

பெற்றோர் தயங்கி அங்கேயே நின்று விட்டார்கள்.
அர்ச்சனைத் தட்டைக் கொடுத்துவிட்டு சன்னதியில் பக்திப் பெருக்குடன் நின்றாள் அவள். அர்ச்சனை நிறைவடைந்ததும் தட்டைக் கொண்டு வந்தார் அர்ச்சகர். அவள் கைநீட்டி வாங்கிக் கொள்ளப் போனாள்.

'ரெண்டு பேருமாச் சேந்து வாங்கிக்குங்கோ!' என்றார் அர்ச்சகர்.
யார் ரெண்டு பேர்? நான் மட்டும் தானே நிற்கிறேன்? அவள் திரும்பிப் பார்த்தாள். என்ன ஆச்சரியம்! அவள் கணவன் தான் அவள் பின்னால் நின்று கொண்டிருந்தான்.

இருவர் விழிகளிலும் கண்ணீர் வழிந்தது. சேர்ந்தே அர்ச்சனைத் தட்டை வாங்கிக் கொண்டார்கள். விழிகளைத் துடைத்துக் கொண்டு, பேசியவாறே மடத்தை நோக்கி நடந்தார்கள். அந்தப் பேச்சில் எல்லாப் பிரச்னையும் சரியாகி விட்டது.

பெரியவரை இருவருமாகச் சேர்ந்து வணங்கினார்கள்
. ''மந்திரங்களைச் சொல்லிப் பண்ணி வச்ச கல்யாணத்தைச் சட்டம் எப்படிப் பிரிக்க முடியும்?  அர்ச்சனைத் தட்டைச் சேந்து வாங்கிண்ட மாதிரி வாழ்க்கையையும் சேந்து வாழப் பழகுங்கோ!

ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து வாழறதுதான் வாழ்க்கை. விட்டுக் கொடுக்கறதில உள்ள சந்தோஷம் அதை அனுபவித்து பார்த்தால் தான் புரியும்...! யாரோட வார்த்தைகளும் இனிமே உங்களைப் பிரிக்காது! பிரிக்கும்படி நீங்களும் விடக்கூடாது.''

பெரியவர், அவளுக்கு குங்குமப் பிரசாதத்தை மட்டுமல்ல. ஆனந்தமான வாழ்க்கையையும் பிரசாதமாக வழங்கி விட்டார்.

 அர்ச்சனைத் தட்டைச் சேந்து வாங்கிண்ட  மாதிரி வாழ்க்கையையும் சேந்து வாழப் பழகுங்கோ! .-பெரியவா.

ஜூன் 17,2017,தினமலர்-விட்டுக் கொடுத்து வாழுங்கள்!

-திருப்பூர் கிருஷ்ணன்

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.