காம ஒத்தடங்கள் இதமாக..?
காம ஒத்தடங்கள் இதமாகக் கிடைக்கும் பொழுது.. அட நிஜம் தாங்க.. ஆறவே ஆறாது என்றெல்லாம் எதுவும் இல்லை. காலம் அனைத்திற்கும் ஒரு தீர்வு வைத்திருக்கிறது, சற்றுப் பொறுப்பவர்கள் பிழைத்துக் கொள்கிறார்கள்.
LKG முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் பொழுது ஒரு சில டீச்சர்களை நமக்கு மிகவும் பிடிக்கும். அவர்கள் நம்மைச் சேர்த்து அணைத்து பாராட்டும் பொழுது அவர்களின் கதகதப்பும் வாசமும் அன்று முழுவதுமே நம்முடன் இருப்பது போலத் தோன்றும். சில குழந்தைகளுக்கு "ச்சே.. இவங்க நமக்கு அம்மாவா வந்திருக்கக் கூடாதா?.." என்று தோன்றும், ஒரு சில குறும்புக்கார குழந்தைகளுக்கு "இந்த மிஸ்'ஸை தான் மேரேஜ் பண்ணிக்கணும்.." என்று தோன்றும். இது ஒருவிதமான கள்ளங்கபடமில்லாத பப்பி லவ்.
அடுத்தது பதின்ம வயதில் வரும் பருவ கோளாறு. இதில் பெரும்பாலும் திரைப்படத்தில் வரும் நடிகைகளே மானசீக காதலிகளாக இருப்பார்கள். ஒரு சில ஜென்மங்கள் மட்டும் தான் தரங்கெட்டு திரியும். இது போன்ற ஜென்மங்கள் எதிர்காலத்தில் திருமணமும் செய்து கொண்டு நாய்படாத பாடு படுகின்றன. கேட்டால் "நாங்க செவென்த்'ல இருந்தே லவ்வர்ஸ்.. நைந்த்'ல இருந்தே லவ்வர்ஸ்.." என்ற அங்கலாய்ப்பு வேறு. "அப்ப நீங்க ஸ்கூலுக்கு படிக்குறதுக்கும் விளையாடுறதுக்கும் போகலை..". இவர்கள் அருகில் குடியிருப்பவர்கள் பெரும்பாலும் சொல்வது இது தான். "இதுங்க எங்க குடும்பம் நடத்துதுங்க.. தினம் இராத்திரி பூரா சண்டை தான்.. மாத்தி மாத்தி குத்தம் சொல்லிக்கிட்டு, அவங்க குழந்தை இராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தது.." என்பார்கள்.
அடுத்தது கல்லூரியில் வரும் ஓரளவிற்கு (ஓரளவுக்குத் தாங்க) மெச்சூர்ட் லவ். இது 50 சதவிகிதம் திருமணத்தில் முடிய வாய்ப்புகள் அதிகம். இதில் தோல்வியுற்றவர்களின் வலிகள் தான் பெரும்பாலும் ஆயுளுக்கும் தொடரும் என்பார்கள். ஒரு சிலர் தன் உயிரை மாய்த்தும் கொள்கிறார்கள். ஒரு சிலர் தாடி வளர்த்துக் கொண்டு திரிகிறார்கள், ஆனால் அவர்கள் கூடத் திருமணம் செய்த பின் வரிசையாக இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள்.
கேட்டால் "என்னடா மச்சான் பண்றது.. நம்பி ஒரு பொண்ணு வந்துட்டா, அவளை யாரும் மலடி'ன்னு சொல்லிட கூடாதில்ல.." என்பார்கள்.
"உங்க தியாகம் உயர்ந்தது தான் பாஸ்.. அதுக்காக மூனு வருஷத்துல இரண்டு பிள்ளை எல்லாம் கொஞ்சம் பெரிய தியாகமா தெரியுது.." என்று நான் என் நண்பர்களைக் கிண்டல் செய்வேன்.
இன்னொருத்தன் இன்னும் சூப்பர். "அவ என்னை விட்டு போயிட்டா.. ஆனா இது எங்கம்மா கொடுத்த உயிரு.. எங்கமமாவுக்காக நான் வாழ்ந்து தான ஆகணும்.." என்பான்.
சரிடா.. அம்மாவுக்குப் புள்ளையா மட்டும் இருக்க வேண்டியது தான.. எதுக்குக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்ன? என்னடா நீ.. பேரன் பேத்தி பாக்கணும்னு எங்கம்மாவுக்கு ஆசை இருக்காதா?.. நான் தான் சொன்னனே, எங்கம்மாவுக்காகத் தான் என்னையே நான் மாத்திகிட்டேன்னு..
"உங்கப்பன் மவனுங்களா.. என்னென்ன கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றீங்கடா டேய்.." என்று மேற்கொண்டு விசாரித்துப் பார்த்தால் தான் தெரிகிறது. இவனுக்குப் பார்த்திருக்கும் பெண் மிகவும் அழகானவள் என்று. என் நண்பன் ஒருவன் கிண்டலாகக் கூறுவான். "ஆம்பளைங்கன்னாலே தியாகிங்க தான்'டா.. எத்தனை லவ் புட்டுக்கிட்டாலும் இன்னொருத்திக்கு வாழ்க்கை தர ரெடியா ஆகிடுறானுங்க.." என்பான்.
"அட போய்யா.. உண்மையா காதல் செய்தவன் எப்பவுமே வேற பொண்ண ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.." என்பவர்களுக்கு எல்லாம் வீட்டில் இன்னும் பெண் பார்க்க ஆரம்பிக்கவில்லை என்று அர்த்தம்.
"வலி என்றால் காதலின் வலி தான் வலிகளில் பெரிது.. அது வாழ்வினும் கொடிது.." என்ற பாடல் வரிகளின் அர்த்தம் 100 சதவிகிதம் உண்மையென்றால், அதற்கு எதிர் பாடலான "ஆழ்வார்பேட்டை ஆளுடா… அறிவுரைய கேளுடா… ஒரே காதல் ஊரில் இல்லையடா…" என்ற பாடல் வரிகளின் அர்த்தமும் 1000 சதவிகிதம் உண்மைதான்.