பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை!
பெரியவாளைத் தவிர வேறு தெய்வமே இல்லை
உறுதியாய் நம்பிய பிரதோஷ மாமாவும்
அருள் விளையாட்டு செய்த பெரியவாளும்.
பெரியவாளைத் தவிர, வேறு தெய்வமே இல்லை என்று, உறுதியாய் நம்பியவர் மீளா அடிமை என்னும் பிரதோஷம் மாமா.
அப்படிப்பட்டவர், ஒரு நாள் தன் அலுவலகத்தில் யாரோ வைத்தீஸ்வரன் கோயிலைப் பற்றி பேசிக் கொண்டிருந்ததில் மனதில் லேசான சலனம். தானும் அக்கோயிலுக்குப் போகவேண்டும் என்கிற ஆசை மனதினுள்.
தனது மூன்றாவது வயதில் தந்தையுடன் அக்கோவிலுக்குப் போனவர்தான்.அவரது தந்தையின் பெயரும் வைத்தியநாத சர்மா.அதனால் தன்னை வைத்தீஸ்வரர் அழைக்கிறார் என்கிற நினைப்புடன், வீட்டீற்கு வந்து தன் துணைவியாருடன் இதைப் பற்றிப் பேசுகிறார்.
துணைவியார், திடீரென எதிர்கேள்வி கேட்டார்.
"பெரியவாளே சாட்சாத் பரமேஸ்வரராய் இருக்கார்னு சொல்வீர்களே....இப்போது ஏது இன்னொரு தெய்வத்தைப் பார்க்கணும்னு சொல்றேளே?"--உண்மை உறைத்தது.
மீளா அடிமை ஆடித்தான் போனார். தான் ஏதோ ஒரு பெரிய தவறு செய்துவிட்டதாக உணர்ந்து, பூஜை அறைக்குப் போய் மகாபெரியவாளின் திரு உருவத்திடம் நின்று கண்கலங்கி...
"பிரபோ...நீயே தெய்வம் என்கிற என் அசையாத நம்பிக்கைக்கு, கொஞ்சமும் சலனம் ஏற்படாத பக்தியை எனக்கு அருள்வாயாக" என்று மனமுருக வேண்டினார்.
இது சாதாரண விஷயம் என்றாலும், அடுத்து நடந்த அதிசயத்தை என்ன என்று சொல்ல?
சாட்சாத் வைத்தீஸ்வரரே, பிரத்யட்சமாக வந்தது போல, ஒரு அன்பர், அவர் வீட்டிற்கு வந்து வைத்தீஸ்வரர் கோயில் பிரசாதத்தைக் கொடுத்தார்.
மீளா அடிமைக்கு மெய் சிலிர்க்கிறது. கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்னும் அவரது எண்ணம், துணைவியாரின் கேள்வி, கோவில் பிரசாதம் இதெல்லாம் தாமாகவே நடந்து முடிந்திருக்கின்றன என்றாலும், இதற்கெல்லாம் காரணம் அந்த மகா பெரியவர் அல்லவா?
மனதில் நினைத்த மாத்திரத்திலேயே அற்புதத்தை நடத்தும் சக்தி அவருக்கு மட்டுந்தான் உண்டு என்று சொல்லி உருகுகிறார், பிரதோஷம் மாமா என்னும் மீளா அடிமை.
கட்டுரையாளர்- ரா.வேங்கடசாமி
புத்தகம்-காஞ்சி மகானின் கருணை உள்ளம்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.