முகம் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் இருக்கும். தற்போது இதனை பயன்படுத்தி கொண்டு பல்வேறு நிறுவனங்கள் ஃபேஸ்வாஷ், மாய்ஸ்சரைசர்கள், சீரம், க்ரீம்கள் மற்றும் லோஷன்கள் போன்றவற்றை விற்பனை செய்கின்றனர். இதனால் வாங்கி பயன்படுத்துவதால் எண்ணற்ற பக்க விளைவுகள் ஏற்படுகிறது. அதற்கு பதிலாக வீட்டில் கிடைக்கும் எளிய பொருட்களை கொண்டே உங்கள் சருமத்தை அழகாக மாற்றலாம். அதில் ஒன்று தான் புதினா. புதினா அனைவரது சமையலறையிலும் இருக்கும் ஒரு முக்கிய பொருளாகும். புதினா இலைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, அவை சரும ஆரோக்கியத்தை பராமரிக்க பயனுள்ளதாக இருக்கும். மேலும் புதினா இலைகளின் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் கிளென்சர், டோனர் மற்றும் மாய்ஸ்சரைசராகவும் வேலை செய்கின்றது.
உங்கள் அழகு பராமரிப்பில் புதினா இலைகளை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
முகப்பருவை சரிசெய்ய:
புதினா இலைகளில் சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. இது உங்கள் சருமத்தில் சரும எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இதனால் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் தாராளமாக புதினாவை பயன்படுத்தலாம். இது முகப்பரு வராமல் தடுக்கிறது. மற்றும் புதினா இலைகளில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தைத் தடுத்து முகப்பருவையும் குணப்படுத்துகிறது. புதினா இலைகளை அரைத்து சாறு எடுத்து முகப்பருவில் தடவி 15 நிமிடங்களுக்கு பிறகு அது காய்ந்ததும் கழுவவும். தொடந்து இப்படி செய்து வந்தால் முகப்பரு தழும்புகளும் நீங்கிவிடும்.
காயங்களை குணப்படுத்தும்:
புதினா இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால், இது வெட்டு காயங்கள், கொசு கடித்தல் மற்றும் தோல் அரிப்பு ஆகியவற்றைக் குணப்படுத்த உதவுகின்றன. இதற்கு நீங்கள் புதினா இலை சாற்றை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதியில் தடவ வேண்டும். இது காயங்களை குணப்படுத்த உதவுவதோடு, சருமத்தில் எரிச்சல் உணர்வையும் ஆற்றும். எனவே இதனை வாரம் மூன்று முறை செய்து வாருங்கள்.
சருமத்தை ஈரப்பதமாக்குகிறது:
புதினா இலைகள் அஸ்ட்ரிஜென்டாக செயல்படுவதால், சருமத்தை இயற்கையாக டோனிங் செய்ய உதவுகிறது. புதினா சாற்றை எடுத்து ஒரு டோனர் பாட்டிலில் நிரப்பி, உங்கள் முகத்தில் டோனிங் செய்து வரலாம். தொடந்து இப்படி செய்து வந்தால் சரும துளைகளில் உள்ள அழுக்கை நீக்கி, சருமத்தை மிருதுவாகவும், நன்கு நீரேற்றமாகவும் மாற்றுகிறது. மேலும் இது உங்கள் சருமத்திற்கு இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, மற்றும் சுருக்கங்கள் மற்றும் மெல்லிய கோடுகளையும் சரி செய்கிறது.
கருவளையங்களை குறைக்கிறது:
புதினா இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் கண்களுக்குக் கீழே உள்ள கருமையை குறைக்க உதவுகிறது. புதினா இலை பேஸ்ட்டை எடுத்து கருவளைகளில் தடவி இரவில் விட்டு விடுங்கள், மறுநாள் காலையில் கழுவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இது கண்களுக்குக் கீழே உள்ள சரும நிறத்தை மேம்படுத்தி கருவளையத்தை குறைக்கும். உடனடி பலனை பெற புதினாவுடன், வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து அந்த சாற்றை எடுத்து கருவளையங்கள் அப்ளை செய்து வரலாம்.