Breaking News :

Thursday, May 02
.

பாடகி சுஜாதா மோகன் வாழ்க்கை வரலாறு


தென்னிந்திய திரைப்படத்துறையில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆவார். தனது இனிமையானக் குரலால், தென்னிந்திய மக்களின் இதயங்களில் நிரந்தர இடம் பிடித்த அவர், ‘தமிழ்’, ‘தெலுங்கு’, ‘மலையாளம்’, ‘கன்னடம்’ மற்றும் ‘இந்தி’ என அனைத்து மொழிகளிலும் சுமார் 4000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

‘புது வெள்ளை மழை’,
‘காதல் ரோஜாவே’,
‘நேற்று இல்லாத மாற்றம்’,
‘ஆத்தங்கரை மரமே’,
‘பூ பூக்கும் ஓசை’,
‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’,
‘உன் சமையலறையில்’,
‘ஆசை ஆசை இப்பொழுது’,
‘நெஞ்சம் எல்லாம் நீயே’,
‘காற்றின் மொழி’ போன்ற பாடல்கள் அவரின் இனிமையானக் குரலுக்குச் சான்றுகளாகும்.

திரைப்படத்துறையில் கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, இசைப் பணியாற்றி வரும் இவர், மூன்று முறை
‘கேரள மாநில அரசு’ மற்றும்
‘தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதையும்’,
இரண்டு முறை ‘ஏசியாநெட் திரைப்பட விருதையும்’,
பதினொரு முறை ‘ஃபிலிம் கிரிட்டிக்ஸ் விருதையும்’
‘சினிமா எக்ஸ்பிரஸ்’ விருது’, ‘தினகரன்’ விருது’, ‘ஸ்வராலையா யேசுதாஸ் விருது’ எனப் பல விருதுகளை வென்றுள்ளார்.

பிறப்பு: மார்ச் 31, 1963
பிறப்பிடம்: திருவனந்தபுரம், கேரளா மாநிலம், இந்தியா
பணி: பின்னணிப் பாடகி
நாட்டுரிமை: இந்தியன்

சுஜாதா மோகன் அவர்கள், 1963  ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில், லட்சுமி என்பவருக்கு, மகளாகப் பிறந்தார்.

இவருடைய தாத்தா டி. கே. நாராயண பிள்ளை அவர்கள், இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, முந்தைய திருவாங்கூர் – கொச்சி மாநில முதல் தலைமை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டு வயதில் தந்தையை இழந்த அவர், தன்னுடைய ஏழு வயதிலேயெ பாடத்தொடங்கினார். கர்நாடக இசை மேதையும், பிரபல பின்னணிப் பாடகருமான “கே.ஜே யேசுதாசுடன்” இணைந்து கிட்டத்தட்ட 2000-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் பாடி, தன்னுடைய மழலைக் குரலால் இசை ரசிகர்களைத் தன்வசப்படுத்தினார்.

12 வயது இருக்கும் பொழுது, 1975 ஆம் ஆண்டு எம். கே. அர்ஜுனன் இசையில் வெளிவந்த ‘டூரிஸ்ட் பங்களா’ என்ற திரைப்படத்தில் ‘கண்ணெழுதி பொட்டுதொட்டு’ என்ற பாடலைப் பாடி, திரைப்படத்துறையில் தன்னுடைய முதல் பாடலைப் பதிவு செய்தார். அதன் பிறகு, இசையமைப்பாளர் எம். ஜி. ராமகிருஷ்ணன் அவர்கள், திரைப்பட இசை அல்லாத பலப் பாடல்களை அவருக்கு வழங்கினார்.

தமிழ் சினிமாவில் ‘காயத்ரி’ என்ற திரைப்படத்தின் மூலம், இளையராஜா இசையில் தன்னுடைய முதல் பாடலைப் பாடிய அவர், அதன் பிறகு, 1988 ஆம் ஆண்டு மோகன்லால் நடித்த ‘சித்ரம்’ திரைப்படத்தில் இரண்டு பாடல்களைப் பாடி மலையாள சினிமாவில் புகழ் பெற்றார். இதனைத் தொடர்ந்து, ‘தமிழ்’ ‘மலையாளம்’, ‘தெலுங்கு’, ‘கன்னடம்’ மற்றும் ‘இந்தி’ என அனைத்து மொழிகளிலும் பாடத்தொடங்கிய அவர், சுமார் 4000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி பல விருதுகளை வென்றார்.

1977 ஆம் ஆண்டு ‘காயத்ரி’ என்ற திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாகத் தன் பெயரை பதிவு செய்த சுஜாதா அவரகள், இளையராஜாவின் இசையில் ‘காலைப் பணியில்’ என்ற பாடலைப் பாடினார்.

1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ரோஜா’ திரைப்படத்தில் ‘புது வெள்ளை மழை’ மற்றும் ‘காதல் ரோஜாவே’ என்ற இரு பாடல்களைப் பாடி, தமிழ் இசை நெஞ்சங்களை தன்வசப்படுத்தினார். அவரின் இனிமையான குரலில் மிகவும் அழகாகப் பாடப்பட்ட இந்தப் பாடல்கள், தமிழ் இசைப்பிரியர்கள் அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. அதனைத் தொடர்ந்து, பல தமிழ் பாடல்களைப் பாடிய சுஜாதா அவர்களுக்கு,
‘நேற்று இல்லாத மாற்றம்’,
‘ஆத்தங்கரை மரமே’,
‘என் வீட்டுத் தோட்டத்தில்’,
‘பூ பூக்கும் ஓசை’,
‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’,
‘ஏதோ ஒரு பாட்டு’,
‘காற்றின் மொழி’,
‘இரவா பகலா’,
‘காதல் நீதானா’,
‘அழகூரில் பூத்தவளே’,
‘ஆசை ஆசை இப்பொழுது’,
‘உன் சமையல் அறையில்’ போன்ற பல பாடல்கள் வெற்றியைத் தேடித்தந்து, அவரது மென்மையான குரலில் இசை மழையாய் பொழிந்தது.

‘புது வெள்ளை மழை’ (ரோஜா),
‘காதல் ரோஜாவே’ (ரோஜா),
‘நேற்று இல்லாத மாற்றம்’ (புதிய முகம்),
‘என்வீட்டுத் தோட்டத்தில்’ (ஜென்டில்மேன்),
 ‘ஆத்தங்கரை மரமே’ (கிழக்கு சீமையிலே),
‘இனி அச்சம் அச்சம் இல்லை’ (இந்திரா),
‘தில்லானா தில்லானா’ (முத்து),
‘பூ பூக்கும் ஓசை’ (மின்சாரக் கனவு),
‘சந்திரனை தொட்டது யார்’ (ரட்சகன்),
 ‘பூவுக்குள் ஒளிந்திருக்கும்’ (ஜீன்ஸ்),
‘ஏதோ ஒரு பாட்டு’ (உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்),
‘ஒரு பொய்யாவது சொல்’ (ஜோடி),
‘காதல் நீதானா’ (டைம்),
‘இரவா பகலா’ (பூவெல்லாம் கேட்டுப்பார்),
‘சொட்ட சொட்ட நனையுது’ (தாஜ்மகால்),
‘வாடி வாடி நாட்டுக் கட்ட’ (அள்ளித்தந்த வானம்),
‘உன் சமையலறையில்’ (தில்),
‘மஞ்சள் பூசும்’ (ஃப்ரண்ட்ஸ்),
‘கவிதைகள் சொல்லவா’ (உள்ளம் கொள்ளை போகுதே),
‘காதல் பிசாசே’ (ரன்),
‘ஆசை ஆசை’ (தூள்),
‘அழகூரில் பூத்தவளே’ (திருமலை),
‘நெஞ்சம் எல்லாம் நீயே’ (ஆயுத எழுத்து),
‘காற்றின் மொழி’ (மொழி).

சுஜாதா அவர்கள், 1981 ஆம் ஆண்டு “கிருஷ்ணா மோகன்” என்பரைத் திருமணம் செய்துகொண்டார். இவர் ஒரு டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஒரே மகள் “ஸ்வேதா மோகன்”. இவரும் ஒரு பின்னணிப் பாடகி என்பது ஒரு குறிப்பிடத்தக்கது.

2001-ல் ‘தில்’ திரைப்படத்தில் இருந்து ‘உன் சமையலறையில்’ பாடலுக்கும்,
 1996-ல் ‘மின்சார கனவு’ திரைப்படத்தில் இருந்து ‘பூ பூக்கும் ஓசை’ பாடலுக்கும்,
1993-ல் ‘புதிய முகம்’ திரைப்படத்தில் இருந்து
‘நேற்று இல்லாத மாற்றம் என்னது’ மற்றும்
‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தில் இருந்து
‘என் வீட்டு தோட்டத்தில்’ போன்ற பாடலுக்காக, சிறந்த பின்னனி பாடகிக்கான ‘தமிழ் அரசு மாநில விருது’ வழங்கப்பட்டது.

பதினொரு முறை ‘பிலிம் கிரிட்டிக்ஸ்’ விருது.
‘சினிமா எக்ஸ்பிரஸ்’ விருது.
‘தினகரன்’ விருது.

1996, 1999 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் ‘கேரளா மாநில திரைப்பட’ விருது.
2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான ‘ஏசியாநெட் திரைப்பட’ விருது.
2008 – ஜி.எம்.எம்.ஏ மூலம் ‘சிறந்த பெண் பாடகர்’ விருது.
2009 – ‘ஸ்வராலையா யேசுதாஸ்’ விருது.

மிகவும் அமைதியான, ஆர்ப்பாட்டம் இல்லாத குரலுக்கு சொந்தக்காரர் சுஜாதா மோகன் அவர்கள்.

தன்னுடைய தேனினும் இனியக் குரலால், இன்றும் சினிமா இசைப்பிரியர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கிறார். சொல்லப்போனால், தமிழ் சினிமாவில் பல பாடகிகள் வந்து போகிறார்கள், ஒரு சிலர் மட்டுமே பல பாடல்களைப் பாடி, தமது இனிமையான குரல்களினால் இசை ரசிகர்களை கட்டிப்போடுகிறார்கள். அப்படிப்பட்ட பாடகிகளின் வரிசையில் சுஜாதாவிற்கும் இடம் உண்டு என்பதை யாராலும் மறுக்க இயலாது.

நன்றி: தமிழச்சி கயல்விழி (முகநூல்)


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.