Breaking News :

Monday, December 02
.

சிவந்த மண் மூவி தகவல்


2 ஆண்டுகளுக்கு முன்பு இதே நவம்பர் 9 ஆம் தேதி ( 9.11.1969) தீபாவளி அன்று வெளிவந்து, இன்று 53 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் ஒரு அற்புதமான திரைப்படம், நடிகர் திலகம் நடித்து, ஸ்ரீதர் தயாரித்து, இயக்கிய 'சிவந்தமண்'.

வெளிநாட்டில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமைக்குரிய, காதல், சென்டிமென்ட் கலந்த ஆக்க்ஷன் படம் இது.

நடிகர் திலகம், காஞ்சனா, M.N.நம்பியார், S.V.ரங்கராவ், சாந்தகுமாரி, முத்துராமன், நாகேஷ், சச்சு, (இயக்குநர்) K. விஜயன், ஜாவர் சீதாராமன், மாலி, தாதா மிராஸி, தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி என்று ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்த படம்.
---------
படத்தின் கதைச்சுருக்கத்தைச் சில வரிகளில் பார்ப்போமா ?

வசந்தபுரி சமஸ்தானத்தின் மன்னர் குணசீலர் ( ஜாவர் சீதாராமன்). பதவி வெறி, அதிகாரப் பித்துக்  கொண்ட கொடுங்கோலனான திவான்( நம்பியார்), போர்த்துகீசிய நாட்டுடன் ஒரு ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டு, ஆட்சி அதிகாரம் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலுகிறார்.

நாட்டு மக்கள் அதை எதிர்த்துப் போராடுகின்றனர். அந்தப் போராட்டத்தில் தன் தந்தையை இழந்த இளைஞன் ஆனந்த் (முத்துராமன்) புரட்சிக்காரனாக உருவாகிறான்.

கடமையே உயிரென நினைக்கும் நாட்டின் உயர் போலிஸ் அதிகாரி  ( இன்ஸ்பெக்டர் ஜெனரல்) சந்திரசேகர் ( S.V.ரங்கராவ் ).அவரது மனைவி ஜானகி ( சாந்தகுமாரி).

ஐ.ஜி யின் மகன் பாரத் (சிவாஜி). சுவிட்சர்லாந்து நகரின் பெர்ன் பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெறுகிறார். 

அதை அறிந்து, அதே நகரில் இருக்கும் வசந்தபுரி இளவரசி சித்ரலேகா, தன்னை வசந்தி என்ற பெயரில் ஒரு சாதாரணப் பெண்ணாக பாரத்திடம் அறிமுகம் செய்து கொள்ள, இருவரும் காதல் வயப்படுகின்றனர்.

தாய்நாட்டின் சந்தர்ப்ப சூழல் காரணமாக இருவரும் நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட, அவர்கள் வந்த விமானம் விபத்துக்குள்ளாகிக் கடலில் விழ, இருவரும் படுகாயங்களுடன் தப்பிப் பிழைக்கின்றனர்.

திவான் தன்னை மணக்க விரும்பும் சதித்திட்டம் அறிந்த வசந்தி, வசந்தபுரி அரண்மனைக்குச் செல்ல மறுத்து விட, இருவரும் பாரத்தின் நண்பன் ஆனந்த் ( முத்துராமன்) வீட்டுக்குச் சென்று, திவானுக்கு எதிரான  போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

போராட்டத்தில் ஆனந்த் சுட்டுக் கொள்ளப்பட, பாரத், வசந்தி இன்னும் சில புரட்சி வீரர்களுடன் இணைந்து தலை மறைவு வாழ்க்கை நடத்தி, திவானை எதிர்த்து ரகசியமாகப்  போராடுகிறார்கள். 

பல கட்டத் தொடர்  முயற்சிகளின் தோல்விக்குப் பின்னர்,  திவான் பாரத்தால் கொல்லப்பட, நாடு  திவானின் கொடுங்கோல் அதிகாரத்தில் இருந்து விடுதலை பெற, பாரத் வசந்தி இருவரும் திருமணத்தில் இணைகின்றனர்.

------------

அதுவரை காதல், மெல்லியல் மன உணர்வுகள், நகைச்சுவை என்று மட்டுமே படங்களை இயக்கி வந்த ஸ்ரீதர் இயக்கிய முதல் ஆக்‌ஷன் படம் இது.

 நடிகர் திலகம் காதல், சென்டிமெண்ட், ஆக்‌ஷன் என்று  அனைத்து விசயங்களிலும் படு அமர்க்களமாகப் புகுந்து விளையாடியிருப்பார்.

ஆனால், படத்தில் அவர் அறிமுகமாகும் காட்சி, ஆடம்பரமின்றி, மிக மிக அமைதியாக, மென்மையாக  இருக்கும்.

சுவிட்சர்லாந்து நாட்டின் புகழ் பெற்ற  பெர்ன் பல்கலைக் கழகத்தில் அவர் முதல் மாணவராகத் தேர்வு செய்யப்பட்டார் என்ற செய்தியைப் பத்திரிக்கையில், அவர் படத்துடன், பார்த்த காஞ்சனா அன்று மாலை ஜூரிச் நகரின் உணவு விடுதி ஒன்றில் தற்செயலாகப் பார்த்து,  அவரைச் சந்திக்க அவரருகில் வருவார்.  

அப்போதுதான் நடிகர்திலகம் முதல் முறையில் திரையில் தோன்றுவார்.. வலது கை விரல்களைக் கன்னத்தில் வைத்துக் கொண்டு, ஸ்பூனில் இடது கையில் எடுத்து அவர் ஐஸ்கிரீம் சாப்பிடுவது அவ்வளவு நளினம். காஞ்சனா அருகில் வந்து பேசியவுடன், சாப்பிடுவதை விட்டு விட்டு  உடனே எழுந்து நிற்பதும், கொஞ்ச நேர உரையாடலுக்குப் பின்னர் அவரிடம் "உங்க பெயர் என்ன ?"  என்று கேட்காமல், "உங்க பெயரை நான் தெரிஞ்சுக்கலாமா ?" என்று கனிவாகக்  கேட்பதும் பெண்களுக்கு அவர் தரும் மரியாதையையும் கண்ணியத்தையும் காட்டும். 

'நான் தோழிகளுடன் பாரீஸ் போகப் போகிறேன்' என்று காஞ்சனா சொன்ன போது, அதையே "பரீஸ் ?" என்று படு ஸ்டைலாக உச்சரித்துக் திருப்பிக் கேட்பது அமர்க்களம். 

இரண்டொரு நாளில் பாரிஸில்  காஞ்சனாவைக் கண்ட போது, அவரிடம் தன் காதலைக் கூற முயன்று, எப்படிச் சொல்லுவது என்ற தடுமாற்றத்துடன்  முன்னும் பின்னும் நடந்து, அவஸ்தைப் படுவது அருமை.

காஞ்சனாவுடன் சேர்ந்து பல இடங்களையும் சுற்றிப் பார்க்கும் போதும், அவருடன் டூயட் பாடும் காதல் காட்சிகளிலும், எக்ஸ்போ காட்சிகளிலும், இருவரும் படகைக் கால்களால் மிதித்து ஓட்டும் போதும், ஏரியில் இருவரும் விளையாடி மகிழும் நீர் விளையாட்டின் போதும்,  நடை, உடை, பாவனை ஆகிய அனைத்திலுமே மென்மை கலந்த ஒரு கண்ணியத்தைப் படு இயல்பாக வெளிப்படுத்தி இருப்பார்.

இத்தகைய பூப்போன்ற மென்மையானவரா பிற்பாடு புரட்சி வீரன் பாரத்தாக அப்படி வீர தீர சாகசங்களை நிகழ்த்தியவர் என்று எண்ணும்போது படு வியப்பாக இருக்கும்.

விமானம் விபத்துக்குள்ளாகி, சிவாஜி காஞ்சனா இருவரின் நினைவற்ற உடல்களும் கரையோரம் நீரில் குப்புறக் கிடப்பதும், பெரிய அலை ஒன்று வரும்போது உடல்கள் அப்படியே அலைக்கழிக்கப்படுவதும், நிஜமாகவே  உயிரற்ற இரு உடல்கள் நீரில் மிதந்தால் எப்படி இருக்குமோ அதைப் போலவே மனதைப் பதற வைக்கும். தான் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றெல்லாம் சிறிதும் நினைக்காமல்,  டூப் போடாமல் , தானே அந்தக் காட்சியில் சிவாஜி நடித்திருப்பது ஒவ்வொரு சிவாஜி ரசிகனையும் நிச்சயம் பெருமிதப்பட வைக்கும்.

அரண்மனைக்கு எதிரில் நடந்த போராட்டத்தில், நம்பியார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நண்பன் முத்துராமன் உயிரிழந்த பின்னர், புரட்சிக்காரனாக மாறும் இவருடைய ஆக்‌ஷன் கலந்த நடிப்பு மிகவும் உயர்ந்து கொண்டே போகும்.

மற்ற புரட்சி வீரர்கள் கீழே நிற்க, உயரமான பாறையின் மேல் நின்றபடி, இவர் நடத்தும் உணர்ச்சிகரமான உரை, சாதாரணமானவர்களுக்குக் கூட நரம்புகளை முறுக்கேற்றி வீரத்தை வர வைக்கும்..

குண்டுகளைப் போட்டபடியும், துப்பாக்கியால் சுட்டபடியும் ஹெலிகாப்டர் இவர்களைத் துரத்த, அதிலிருந்து  தப்பிக்க இவர்கள் ஓடும் காட்சி படம் பார்ப்பவர்களை இருக்கைகளின் நுனியில் உட்கார வைக்கும்.. அதுவும் அந்தக் காட்சியில் டூப் போடாமல் இவரே நடித்து,  ஹெலிகாப்டர்  இவரது தலையை நிஜமாகவே உரசுவது போல மிகவும் தாழ்வாகப் பறந்து போகும்போது, நொடிப்பொழுதில் அவர் குழிக்குள் குதித்துத் தப்பிக்கும் காட்சி அனைவரின் நெஞ்சையும் பதற வைக்கும். அவர் ஒரு நொடி தாமதித்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதைக் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது.

போர்த்துகீசியக் கப்பலுக்கு வெடிகுண்டு வைக்க இவரும் மாலியும் கடலில் ரகசியமாக நீந்திச் செல்வதும், கப்பலினுள் சென்று குண்டு வைப்பதும் பின்னர் தப்புவதும் ஏதோ ஆங்கிலப்படத்தைப் பார்ப்பதைப் போல அவ்வளவு திரில்லிங்காக இருக்கும்.

திவானை அழிப்பதை மட்டுமே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்டு, வேறு எந்த விதமான பாச பந்த உணர்ச்சிகளுக்கும்  இடம் கொடுக்காமல், தான் போடும் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற இவர் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் அற்புதம். 

திவான் வரும் ரயிலைக் கவிழ்க்கப் பாலத்தை வெடி குண்டு வைத்துத் தகர்த்து திவானைக் கொல்ல முயலும்போது,  அதே ரயிலில் வருவது சொந்த அப்பா என்று தெரிந்தும், அதைப்பற்றிச் சற்றும்  கவலை இல்லாமல் காரியத்தில் இறங்குவதும், தனது அந்த முயற்சி தோல்வி அடைந்ததற்குக் காரணம் காஞ்சனா என்று தெரிந்ததும் தன் சொந்த மனைவி என்றும் பாராமல் அவரைத் துப்பாக்கியால் சுடத் துணிந்ததும் தன் நோக்கத்தில்  அவர் எந்த அளவுக்கு நேர்மையாகவும் உறுதியாகவும் இருந்தார் என்பது புரியும்.
 

அதுவும் உயரமான அந்தப் பாலத்தில் வெடிகுண்டு வைக்க இரண்டு இரும்புக் கிராதிகளின் மேல் இரண்டு கால்களையும் விரித்து வைத்துக் கொண்டு நடக்கும் காட்சியில், டூப் போடாமல் இவரே நடித்திருப்பதும், ஒரு இடத்தில் திடீரென்று ஒரு கால் தவறுவதும் அனைவர் மனதிலும் பெரும் படபடப்பை ஏற்படுத்தும். 

எதற்காக இவர் உயிருக்கு ஆபத்தான இப்படிப்பட்ட காட்சிகளில் டூப் போடாமல், தானே நடித்து தன்னை வருத்திக் கொள்கிறார் என்று அவர் மேல் நமக்கு உண்மையிலேயே கோபம் வந்தாலும், 'நடிப்பு என்று வந்து விட்டால் தனது உயிர் கூடத் தனக்கு இரண்டாம் பட்சம்தான்' என்ற அவரது உயர்ந்த தொழில் பக்தியைச் சொல்ல  இந்த ஒரு காட்சியே போதும்.
 

உடல்நிலை சரியில்லாத தாயைச் சந்திக்க இரவில்  ரகசியமாக வீட்டுக்கு வந்து அம்மா அப்பாவுடன் பேசும் காட்சியிலும், தன் வருகை அறிந்த திவானின் உத்தரவுப்படி தன்னைக் கைது செய்யும்படி தன் தந்தையிடம் வேண்டும்போது அவர் மறுக்க, தன் கணவர் கடமை தவறாதவர் என்பதை நிரூபிக்கத் தன் தாயையே தன் கைகளில் விலங்கை மாட்ட வைப்பதுமான காட்சிகளில் அவரது நடிப்பு படு உருக்கமானது.

கை விலங்குடன் நம்பியாரின் அறைக்கு அழைத்து வரப்பட்டபோது, நம்பியார் சோபாவில் அமர்ந்து  செருக்காகக் கால் மேல் கால் போட்டபடி பேச, அடுத்த நொடியே இவரும் நம்பியாருக்கு எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து, கால் மேல் போட்டபடி பேசுவது, அசல் வீரபாண்டிய கட்டபொம்மனை நினைவுக்குக் கொண்டு வரும் அற்புதமான நடிப்பு.

சிறை அதிகாரி அவரை அறையில் அடைக்க உத்தரவிட்டுக் கொண்டுருக்கும்போதே சிறையின் அமைப்பைக் கண்களால் நோட்டமிட்டு, தப்பிக்கும் வழியை முடிவு செய்து கொண்டு, மௌனமாக ஒரு புன்னகை செய்வதும்,  அறைக்குள்ளே தள்ளி அடைக்கப்படும்போது, நொடிப் பொழுதில் எதிர்ச்சுவரில் கால்களை உந்தித் திரும்பி வந்து, காவலனைத் தாக்கித் துப்பாக்கியைப் பறித்து, சிறை அதிகாரியைப் பிடித்துக் கொண்டு ஒவ்வொரு காவலராகத் துப்பாக்கிகளைத் தன் காலடியில் கொண்டு வந்து வைக்க வைத்து அவற்றை ஒவ்வொன்றாகச் சிறை அறைக்குள் கால்களால் தள்ளி விடுவது மிகவும் வியக்க வைக்கும் காட்சிகள். 

"பட்டத்து ராணி..."  பாடலின் போது, அரபு ஷேக் வேடத்தில்,  கையில் சாட்டையுடனும்,  துப்பாக்கியுடனும்,  காட்சி முழுவதும் , என்ன நடக்கப் போகிறதோ என்ற பதற்றத்துடனேயே நம்பியாரைத் தவிக்க  வைப்பது அருமை... அதிலும் சுழல் மேடையில், மேடை  சுழலும் திசையில் காஞ்சனா சுற்ற, இவர் சுழற்சிக்கு எதிர் திசையில் படு கம்பீரமாக அடி எடுத்து நடப்பதும் அதே வேளையில் கவனம் முழுவதும் நம்பியார் மேலும், அவரை நோக்கியே துப்பாக்கியைக் குறி  வைத்து இருப்பதும் அமர்க்களம்.

காஞ்சனா, வழக்கமாகக் கதாநாயகனுடன் வந்து செல்லும் நாயகிகளைப் போல இல்லாமல், ஆரம்பத்தில் சுவிட்சர்லாந்திலும், பின்னர் வசந்தபுரியிலுமாக,  படம் முழுவதும் வருவதுடன், புரட்சி வீரன் பாரத்தின் போராட்டத்தில் சிறப்பாகத் துணை நிற்கிறார். எவ்வளவு அடித்த போதும், துப்பாக்கியில் சுடப்படுவாய் என்று மிரட்டப்பட்ட போதும், வெடிகுண்டுத் திட்டத்தின் தோல்விக்கு உதவியது யார் என்ற உண்மையைச் சொல்ல மறுப்பது அருமையான நடிப்பு.

படத்தின் முதுகெலும்பே நம்பியாரின் அமர்க்களமான நடிப்புதான். அவர் வரும் ஒவ்வொரு காட்சியுமே நயவஞ்சகம் மற்றும் கொடூங்கோன்மையின் உச்சத்தை நமக்குக் கண் முன்னே கொண்டு வந்து காட்டுகின்றன. துப்பாக்கியை எடுத்து நாமே நம்பியாரைச் சுட்டு விட வேண்டும் என்று பல சமயங்களில் நம்மை நினைக்க வைப்பது அவரது நடிப்பின் மாபெரும் வெற்றி.

புரட்சிக்காரன் ஆனந்தாகக் கொஞ்ச நேரமே வந்தாலும், முத்து ராமன் மனதில் நிற்கிறார். அதிலும் இறந்து போனதாக நம்பப்பட்ட பாரத் உயிருடன் திரும்பி வந்தபோது நம்ப முடியாமல் அவரது கண்கள், ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒன்று சேர, அகலமாக விரிவது அருமை. 

நாகேஷும், சச்சுவும் மதுபானக் கடை உரிமையாளர்களாக வந்து, பாரத் கூட்டத்தினருக்கு உதவுகிறார்கள். அவ்வப்போது நாகேஷ் லேசாகச் சிரிக்க வைக்கிறார். கல்யாணக் காட்சியின்போது, திடீர் ஐயராக மாறி, மந்திரம் தெரியாமல் அவர் அடிக்கும் கூத்துகள் அருமை. 

சச்சுவை இவ்வளவு படு கவர்ச்சியாகப் படம் முழுவதும் பயன்படுத்தி இருக்க வேண்டுமா என்பது சற்றே நெருடலான கேள்விதான்.

புரட்சி வீரர்களாக வரும், (இயக்குநர்) K.விஜயன், மாலி (ஜெமினி மகாலிங்கம்), தாதா மிராஸி ( ரத்தத்திலகம்,  புதிய பறவை, மூன்று தெய்வங்கள் ஆகிய அற்புதமான நடிகர் திலகத்தின் படங்களை இயக்கிய அவரேதான்) போன்றவர்கள் சிவாஜியின் போராட்டத்தில் துணை நின்று அருமையாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் நடிகர் திலகத்துடன் இன்னொரு கதாநாயகனும் இருக்கிறார்.

அவரைப் படத்தில் பார்க்க முடியாது. காதில் கேட்கவும், கேட்டு இதயத்தில் உணரவும் மட்டுமே முடியும். 

அவர்தான் மெல்லிசை மன்னர் MSV.

அவரது ஆயிரக்கணக்கான படங்களில் சிவந்த மண் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று.

படம் முழுவதும்  பின்னணி இசையில் மனுசன் புகுந்து விளையாடி இருப்பார்.

ஆரம்பத்தில் காதல் ரசம் சொட்டும் காட்சிகளில்  மனதுக்கு இதமான பின்னணி இசையைத் தந்தவர், கதைக்களம் வசந்தபுரிக்கு நகர்ந்த பிறகு, விஸ்வரூபம் எடுத்துப் பின்னி எடுத்திருப்பார். ஒரு ஆக்‌ஷன் படத்துக்கு எப்படிப் பின்னணி அமைக்க வேண்டும் என்பதற்கு இந்தப் படம் ஒரு டிக்சனரி. அதுவும் கப்பலில் வெடிகுண்டு வைப்பதற்கு சிவாஜியும் மாலியும் கப்பலுக்குள் நுழைந்த பிறகு அவர் அமைத்த பின்னணி இசை, சஸ்பென்ஸ், திகில் ஆகியவற்றை அதிகரிக்கச் செய்வதாக இருக்கும். கப்பலில் போர்த்துகீசிய நாட்டினருக்கு நடக்கும் பார்ட்டியின் போது, பாடல் எதுவும் இல்லாமல், ராதிகாவின் நடனத்துக்குக்  கொடுத்திருக்கும் பின்னணி இசை ஆங்கிலப் படங்களுக்குச் சவால் விடுவது போல இருக்கும். 

படத்தின் அனைத்துப் பாடல்களையும் மிக அற்புதமாகத் தந்திருக்கிறார் கவியரசர். வெளிவந்து ஐம்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்றும் நாம் திரும்பத் திரும்பக் கேட்டு மகிழும் தேனினும் இனிய பாடல்களைக் கவியரசர் மெல்லிசை மன்னர் ஜோடி நமக்கு அளித்தது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று.

      முத்தமிடும் நேரமிப்போ....

      ஒரு ராஜா ராணியிடம்....

      பார்வை யுவராணி கண்ணோவியம்...

       பட்டத்து ராணி பார்க்கும் பார்வை...

       சொல்லவோ சுகமான கதை....

        ஒரு நாளிலே உறவானதே....

ஆகிய பாடல்களில் எதைச் சொல்வது எதை விடுவது ?

"பட்டத்து ராணி..."  பாடலைப் பற்றியும் , அதில் பயன்படுத்தப்பட்ட எண்ணற்ற வாத்தியக் கருவிகளைப் பற்றியும், L.R.ஈஸ்வரி அற்புதமாக அதைப் பாடியதைப் பற்றியும், பாடலில் MSV அமைத்த வித்தியாசமான  BGM பற்றியும்  ஏகப்பட்ட கட்டுரைகள் ஏற்கெனவே வந்துள்ளன.

"முத்தமிடும் நேரமிப்போ..." 

"சொல்லவோ சுகமான கதை சொல்லவோ..."

ஆகிய இரண்டு பாடல்களுமே மதுபான விடுதியில் ஆடப்படும் கவர்ச்சியான ஆட்டத்துக்குப் பாடப்பட்ட, நம்மைத் தாளம் போட வைக்கும் பாடல்களாக  இருந்தாலும், இரண்டுமே ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசமான இசையில் அமைந்திருக்கும்.

முன்னதை L.R.ஈஸ்வரி பாடியதில் வியப்பு ஒன்றும் இல்லை. அதற்குப் படு கவர்ச்சியாக சச்சு நடனமாடி இருப்பார்.

"சொல்லவோ சுகமான கதை..." பாடலை P.சுசீலாவைப் பாட வைத்திருப்பதுதான் ஆச்சரியமான விசயம். தன் தேன் குரலில் அதை மிகவும் இனிமையாகப் பாடி இருப்பார் சுசீலா அம்மா. அதற்கு ஆடிப் பாடி நடித்தது காஞ்சனா.

"பார்வை யுவராணி கண்ணோவியம்..." (TMS )
"ஒரு நாளிலே உறவானதே..." ( TMS, P.சுசீலா)
ஆகிய இரண்டுமே மென்மையான காதல் பாடல்கள்.. தேனில் ஊற வைத்த  பலாச்சுளைகள் போன்றவை..

படத்தில் 7 நிமிடங்கள் வரக்கூடிய,  மிக முக்கியமான பாடலான,
"ஒரு ராஜா ராணியிடம்...." பாடலைப் பற்றி மட்டுமே ஒரு தனிப்பதிவு போடலாம். அவ்வளவு சங்கதிகள் அப்பாடலைப் பற்றி உள்ளது. இருப்பினும் முடிந்தவரை சுருக்கமாகச் சொல்கிறேன்.

கவியரசரும், மெல்லிசை மன்னரும் தங்கள் இருவரில் யார் பெரியவர் என்ற போட்டியில் கலந்து கொண்டவர்களைப் போல, ஒருவரை ஒருவர் மிஞ்சும் வகையில் , இந்தப் பாடலில், ஆளுக்காள் அற்புதத்தைப் படைத்திருப்பார்கள். 

பாடல் படமாக்கப்பட்ட இடங்கள் ரோம், பாரிஸ், வெனிஸ், சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலை ஆகிய பகுதிகள்.

உற்றுக் கவனத்தால் படமாக்கப்பட்ட ஒவ்வொரு இடத்திலும் ஒரு சரணமும், ஒவ்வொரு சரணத்துக்கும் வித்தியாசமான இசையமைப்பும் இருப்பது தெரியும்..

அக்கார்டின், வயலின், பாங்கோஸ், கிடார், ப்ளூட்,  டிரம்பெட் ஆகியவற்றை அந்தந்த சரணத்துக்கு ஏற்ற மாதிரி அற்புதமாகப் பயன்படுத்தி ஒரு ஜூகல்பந்தியே நடத்தி இருப்பார் மெல்லிசை மன்னர். அதிலும் ஆல்ப்ஸ் மலைப் பனிச் சறுக்குக் காட்சிகளின் BGM இல் அக்கார்டினில் அற்புதமாக விளையாட்டுக் காட்டியிருப்பார். 

கவியரசர் சற்றும் சளைக்காமல் மேலே மேலே போய்க் கொண்டே இருப்பார்..

ஒரு சரணம்  முழுக்க "மோ.."  என்ற எழுத்தில் அனைத்து வரிகளும் முடிந்தால், இன்னொரு சரணத்தில்           " யோ..."என்று அனைத்து வரிகளும் முடியும். வேறொரு சரணத்தில் "னோ.." என்று முடியும். அதை விட முக்கியம் " "மோ.. யோ..னோ... "என்று முடியும் எழுத்துக்களுடன் நாயகன் ஒவ்வொரு கேள்வியாகக்  கேட்ட, அதே "மோ..யோ..னோ.." என்று முடியும் எழுத்துக்களுடன் கேள்விகளாகவே  கேட்டு நாயகி நாயகனின் கேள்விகளுக்குப்  பதில் அளிப்பதைப் போல எழுதியிருப்பது கவியரசரின் ஒப்பில்லாத கை வண்ணம்.

மேலும் ஒவ்வொருமுறை  மோ..யோ..னோ ஆகிய எழுத்துக்களை   இருவரும் பாடும்போதும், ஒவ்வொரு முறையும் அந்த உச்சரிப்புகள்  வித்தியாசமாக இருக்கும் வண்ணம் அமைத்திருப்பது மெல்லிசை மன்னர் செய்த  அற்புதம்.

அதுவும் சுசீலா அம்மா "மோ...யோ...னோ.." என்று சற்றே இழுத்த மாதிரி முடிப்பது அப்படியே தேனை நேரடியாகக்  காது வழியே நம் நாக்கில் தடவுவதைப் போல இனிக்கும்..மயக்கும்.

இறுதியில் மெல்லிய வயலின் இசையுடனும், அதை விட இனிய சுசீலா அம்மாவின் குரலுடனும் பாடல் முடியும்.

பாடல் வரிகளைக் கவனித்தால், வெளிநாட்டுக்குச் சென்றாலும் ஒரு இந்தியப் பெண் எப்படித் தன் பெண்மையை உயர்வாக மதிக்கிறாள் என்பது மிகவும் அருமையாகப் புரியும்.

"ஓடம்....பொன்னோடம்..." வரிகளின் சரணம் முழுவதும், இருவரும் படகைக் காலால் வலிப்பதாக,  லாங் நாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். முகம் சரியாகத் தெரியாது. அதனால் அந்தச் சரணம் முழுவதையுமே வேறொரு விதத்தில் குளாசப்பில் எடுத்து, லாங் சாட்டில் இவர்கள் படகு வலிப்பதையும், குளோசப் ஷாட்டில் பாடல் வரிகளைப் பாடுவதையும்,  அதைச் சின்னதாக அப்படியே திரையின் வலது ஓரத்தின் மேற்புறத்தில் சூப்பர் இம்போஸ் செய்து, இரண்டையும் ஒரு சேரத் திரையில் அற்புதமாகத் தந்திருப்பார் இயக்குநர் ஸ்ரீதர். 

பிற்காலத்தில் 'பிக்சர் இன் பிக்சர்' என்ற,  ஒரே நேரத்தில் இரண்டு காட்சிகளைக் காணும்  வசதியுடன்,  TV கள் விற்பனைக்கு வந்தன. அதனை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே, லாங் ஷாட்டையும், குளோசப் ஷாட்டையும் ஒரே திரையில் இடம்பெறச் செய்து அற்புதம் காட்டி விட்டது நடிகர்திலகம் & ஸ்ரீதர் டீம்.

இப்போது போல, ஒரே ஒரு பாடல் காட்சிக்கு மட்டும் வெளிநாடு சென்று, அரைகுறை ஆடைகள் கொண்ட வெளிநாட்டு அழகிகளுடன் ஒரு குத்தாட்டம் போல அதை எடுக்காமல், ஒரு படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் எடுத்தது மட்டும் அல்லாமல், அதை எப்படி எடுக்க வேண்டும் என்று பாடம் நடத்திக் காட்டிய படம்தான் சிவந்த மண். 

 பாரிஸ் நகரத்தின் வீதிகள், கடைகள் ஆகியவை இரவு நேரத்தில்  மின்னொளியில் அற்புதமாக மின்னுவதையும், ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடக்கும் காளையைக் குத்திக் கொள்ளும் அரிய காட்சியையும், ரோம், வெனிஸ், பாரிஸ் நகரங்களின் அழகிய பகுதிகள், ஆல்ப்ஸ் மலையின் அழகிய பனிச் சிகரங்கள், மற்றும் 7 நிமிடக் காட்சியாக எக்ஸ்போ கண்காட்சியின் விதவிதமான ராட்சஷ ராட்டினங்கள் ரோலர் கோஸ்டர்களையும்  அப்படியே கண் முன் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் பாலகிருஷ்ணனின் காமெராவும் மிகவும் பாராட்டத்தக்கது.

இத்தகைய அற்புதமான ஒரு படம் திரையிட்ட அனைத்துத் திரையரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்து ஓடியதும், சென்னையில் நான்கு தியேட்டர்கள்  உட்பட, மொத்தம் ஒன்பது திரையரங்குகளில் நூறு நாட்களைக் கடந்து ஓடி, சிறந்த ஒரு வெற்றியைப்  பெற்றது ஒன்றும் வியப்பல்லவே.

அப்படி நூறு நாட்கள் ஓடிய திரையரங்குகளில் எங்கள் கோயம்புத்தூர் ராயல் தியேட்டரும் ஒன்று என்பதில் எங்களுக்கெல்லாம் பெருமைதான். 

நன்றி.

நாகராஜன் வெள்ளியங்கிரி.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.