Breaking News :

Wednesday, December 04
.

ஜெயலலிதா எம் ஜி.ஆர் நடித்த கடைசி படம் என்ன?


எம்ஜிஆர் ஜெயலலிதா இணைந்து  நடித்த திரைப்படங்கள்  புரட்சித் தலைவர் என போற்றப்பட்ட எம்.ஜி.ஆருடன், புரட்சித் தலைவி என புகழாரம் சூட்டப்பட்ட ஜெயலலிதா இணைந்து நடித்த திரைப்படங்கள் காலங்கள் கடந்து காவியமாய் மக்கள் மனதில் பதிந்து போனவை.
ஆயிரத்தில் ஒருவன்... 1965-ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் தான் எம்.ஜி.ஆரும், ஜெயலிதாவும் இணைந்து நடித்து முதல் திரைப்படம். தமது அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட படமாகவும், எம்.ஜி.ஆரால் போற்றப்பட்ட படமாகவும் இது அமைந்தது. மருத்துவர் மணிமாறனாக எம்.ஜிஆரும், இளவரசி பூங்குழலியாக ஜெயலலிதாவும் தோன்றிய இந்த திரைப்படம் மக்கள் மனதில் நீங்காத நினைவுகளாய் பதிந்து கிடக்கிறது. 2014-ஆம் ‌ஆண்டு டிஜிட்டல் முறையில் மறுவெளியீடாக வந்த இந்த திரைப்படம் ஆண்டுகள் பல ‌கடந்த பின்னரும் வெள்ளி விழா கண்டது. 1965-ஆம் ஆண்டு இருவரும் இணைந்து கன்னித்தாய் என்ற திரைப்படத்திலும் நடித்தனர்.
1966-ஆம் ஆண்டு சந்திரோதயம், முகராசி ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். 1967-ஆம் ஆண்டு தாய்க்கு தலைமகன், காவல்காரன், அரசகட்டளை ஆகிய மூன்று திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். சந்திரோதயம் திரைப்படத்தில் சுசீலா குரலில் ஜெயலலிதா பாடும் என்ன கல்யாணமடி உங்க கல்யாணம் என்ற பாடல் பெண்ணியக் கருத்தின் வெளிப்பாடாகவும் அமைந்தது.
1968-ஆம் ஆண்டு அதிகபட்சமாக 6 திரைப்படங்களில் இவ்விருவரும் இணைந்து நடித்தனர். ரகசிய போலீஸ் 115, கண்ணன் என் காதலன், குடியிருந்த கோயில், ஒளிவிளக்கு, தேர்த்திருவிழா, காதல் வாகனம் ஆகிய திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.
1969-ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண், நம்நாடு ஆகிய திரைப்படங்களும் திரையரங்குகளில் வெற்றி கொடி கட்டின. ஜெயலலிதா சிறப்பாக பாடக் கூடியவர் என்பதை அறிந்த எம்ஜி.ஆர், அடிமைப் பெண் படத்தில் ஜெயலலிதாவுக்கு பாடும் வாய்ப்பை பெற்று தந்தார். அந்த படத்தில் ஜெயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு என்ற பாடல் தேனிசையாக அமைந்தது. அடிமைப்பெண் படத்தில் வெளியுலகம் தெரியாமல் இருட்டுக்குள் வாழும் எம்.ஜி.ஆரை, ஜெயலலிதா மாற்றித் தேற்றும் காட்சிகள் பெரும் ரசனைக்குரியவை.
1970-ஆம் ஆண்டு எங்கள் தங்கம், தேடி வந்த மாப்பிள்ளை, என் அண்ணன், மாட்டுக்கார வேலன் ஆகிய திரைப்படங்களில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் இணைந்து நடித்தனர். மாட்டுக்கார வேலன் படத்தில் எம்.ஜி.ஆருக்கு இருவேடங்கள். ஜெயலலிதாவுடன் அவர் நடித்த பாத்திரம் தியேட்டர்களில் விசிலை அள்ளித்தந்தவை.
1971-ஆம் ஆண்டு புரட்சித் தலைவரும், புரட்சித் தலைவியும் தோன்றிய குமரிக்கோட்டம், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய திரைப்படங்கள் வெளியாயின. 1972-ஆம் ஆண்டு ராமன் தேடிய சீதை, அன்னமிட்ட கை ஆகிய திரைப்படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். இதில் ராமன் தேடிய சீதை திரைப்படத்தில் திருவளர் செல்வியோ? நான் தேடிய தலைவியோ? என எம்.ஜி.ஆர் பாடிய பாடல் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு அச்சாரமாக அமைந்தது.
1973-ஆம் ஆண்டு வெளியான பட்டிக்காட்டு பொன்னையா திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கடைசியாக இணைந்து நடித்தனர். ஆயிரத்தில் ஒருவன் தொடங்கி பட்டிக்காட்டு பொன்னையா வரை 28 படங்களில் இருவரும் இணைந்து மக்களின் மனதில் பசுமை மாறாத நினைவுகளாய் நிலைத்துள்ளனர்.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.