Breaking News :

Friday, May 03
.

HBD பாடகி எல். ஆர். ஈஸ்வரி


திரை இசை பாடகி எல். ஆர். ஈஸ்வரி  பிறந்த நாள் இன்று  1938.  இவர் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். மனோகரா படத்திற்காக எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைப்பில் "இன்ப நாளிலே இதயம் பாடுதே" என்ற பாடலை ஜிக்கி குழு பாடலை  பாடினர். அன்று முதல் இவரும் குழுப் பாடகியானார். 

 

முதன் முதலில் தனியாகப் பாடும் சந்தர்ப்பம் நல்ல இடத்துச் சம்பந்தம் (1958) திரைப்படத்துக்காக கே. வி. மகாதேவனின் இசையமைப்பில் இவரே தான் அவரே அவரே தான் இவரே என்ற பாடலைப் பாடினார். இதுவே இவரது முதல் பாடலாகும்.1961 ஆம் ஆண்டு வெளியான பாசமலர் திரைப்படத்தில் இவர் பாடிய "வாராயென் தோழி" என்ற பாடல் இவருக்கு மிகவும் புகழைத் தேடித் தந்த பாடல். இது இன்றும் திருமண விழாக்களில் ஒலிக்கும் பாடலாகும்.

 

 "எலந்தைப் பழம்", 'முத்துக்குளிக்க வாரியளா' 'பளிங்கினால் ஒரு மாளிகை' பட்டது ராணி'   ‘காதோடு தான் நான் பாடுவேன்'  போன்ற பாடல்கள் இவருக்குப் பெரும் புகழைத் தேடித்தந்த ஏனைய பாடல்கள்.பிற்காலத்தில் இவர் துள்ளிசைப் பாடல்களையே நிறைய பாடினார். எழுபதுகளின் பிற்பகுதியில் ஈஸ்வரிக்கு திரைப்பட வாய்ப்புக் குறைந்தது. இருந்தாலும் பக்திப் பாடல்களை  அதிகம் பாடி வந்தார்.


 

பி. பி. ஸ்ரீனிவாஸ் குரலுக்கேற்ப எத்தனை எத்தனை பாடல்கள் ( ‘ராஜ ராஜ ஸ்ரீ’, ‘கண்ணிரண்டும் மின்ன மின்ன’, ‘சந்திப்போமா இனி சந்திப்போமா..’). சந்திரபாபுவோடு இணைந்து 'பொறந்தாலும் ஆம்பளையா' (போலீஸ்காரன் மகள்) பாடலின் சேட்டைகள், எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மயக்கக் குரலோடு சேர்ந்த பாடல்கள்தான் ( ‘மறந்தே போச்சு’, ‘அநங்கன் அங்கதன்’, ‘ஆரம்பம் இன்றே ஆகட்டும்’, ‘கல்யாணம் கச்சேரி’ ) எத்தனை! பி. சுசீலாவோடு இணைந்து இசைத்த அக்காலப் பாடல்கள் ( ‘கட்டோடு குழலாட’ - பெரிய இடத்துப் பெண், ‘அடி போடி’ - தாமரை நெஞ்சம், ‘தூது செல்ல’ - பச்சை விளக்கு, ‘உனது மலர்க்கொடியிலே’ - பாத காணிக்கை, ‘மலருக்குத் தென்றல்’ - எங்க வீட்டுப் பிள்ளை, ‘கடவுள் தந்த’ - இருமலர்கள்). இவை தோழியரது வெவ்வேறு மனநிலையின் பிரதிபலிப்புகளைக் கச்சிதமாக வார்த்த பாடல்களில் சில. டி. எம். சவுந்திரராஜன் - எல். ஆர். ஈஸ்வரி இணை குரல்கள், பல்வேறு ரசங்களைப் பருகத் தந்தவை.

 

‘கேட்டுக்கோடி உறுமி மேளம்' (பட்டிக்காடா பட்டணமா), 'சிலர் குடிப்பது போலே' (சங்கே முழங்கு), ‘மின்மினியைக் கண்மணியாய்' (கண்ணன் என் காதலன்), ‘உன் விழியும் என் வாளும்; (குடியிருந்த கோயில்), ‘அவளுக்கென்ன' (சர்வர் சுந்தரம்) என்ற பாடல் வரிசைக்கும் முடிவில்லை. ஆண், பெண் என இணைக் குரல்களின் தனித்தன்மை எப்படியிருப்பினும், அவற்றுக்கு ஏற்ப இயைந்து பாடுவதில் எல்.ஆர்.ஈஸ்வரி ஓர் இணையற்ற இணை.


 

முறைப்படியான சங்கீதப் பயிற்சி இல்லாமலே மகத்தான இசையைச் சலிக்காத குரலில் சளைக்காமல் வழங்கி இருக்கும் ஈஸ்வரி எல்லாக் காலங்களுக்குமானவர். இனிய வாழ்த்துக்கள் அவரது எண்பத்து நான்கு    வயதுக்கு! - நூற்றாண்டைக் கொண்டாடுவதற்கு.


.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.