Breaking News :

Saturday, July 13
.

நடிகர் குமரி முத்து


இயக்குநர் மகேந்திரனால் முகவரி கொடுக்கப்பட்டவர் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் குமரி முத்து. [வயது 76]. ’முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நண்டு’ போன்ற படங்களில் படம் பார்ப்போர் மனதில் யார் இவரென வினவச் செய்தவர்.

‘கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காட்டுப்புதூர் தான் இவரது சொந்த ஊர். பள்ளிப்பருவத்திலேயே சொந்த நாடகங்கள் போட்ட அனுபவம் உண்டு. அப்போது இவரது ஊருக்கு பாவைக்கூத்து நடத்த ஒரு குழு வந்திருந்தது. திரைக்குப் பின்னிருந்து ஒரு நாள் இவர் பாடியது அக்குழுவினருக்கு மிகவும் பிடித்துப் போனதால் இவரையும் அவர்களுடன் அழைத்துச் சென்றுவிட்டார்கள். ஊர் ஊராக அந்தக் குழுவினருடன் சுற்றினார். சில நாட்களில் இவரைத் தேடி இவரது பெற்றோர் சென்று மீண்டும் ஊருக்கு அழைத்து வந்துவிட்டார்கள்.

அதற்குப் பிறகும் படிப்பில் கவனம் இல்லாது போகவே, எட்டாம் வகுப்போடு படிப்பிற்கு விடை கொடுத்துவிட்டு, சென்னைக்குச் சென்றுவிட்டார். அப்போது இவரது மூத்த சகோதரர் நம்பிராஜன் பல படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தார். இவரது அண்ணி தாம்பரம் லலிதா, மீண்ட சொர்க்கம், பாகப்பிரிவினை, தெய்வப்பிறவி, அமுதவல்லி, ஒரே வழி போன்ற படங்களில் நடித்து பிரசித்துப் பெற்று விளங்கிக் கொண்டிருந்த நேரமது. தாம்பரம் லலிதா ஏதாவது உதவுவார்களா என்று பார்த்தார் இவர். செய்வதாக தெரியவில்லை. விளைவு மீண்டும் சில மாதங்களில் ஊருக்குச் சென்றுவிட்டார். இந்த இடைப்பட்ட நாட்களில் திருவள்ளுவர் நாடக சபா, லட்சுமி நாடக சபா, சென்னை, வைரம் நாடக சபா உருவாக்கிய நாடகங்களில் நடித்துவந்தார்.

‘ஊருக்குப் போய் சுமார் 200 நாடகங்களில் நடித்தார். இவரே அவற்றை இயக்கவும் செய்தார். எல்லா நாடகங்களிலுமே இவர்தான் முதன்மையான நகைச்சுவை வேடம் தரித்தார். “வாத்தியார் முத்து” என்றுதான் எல்லோரும் இவரை அழைப்பார்கள். மீண்டும் சென்னைக்கு வந்தார்.

1968-இல் சென்னையில் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நடைபெற்ற நாடகத்தைப் பார்க்க வந்த வசனகர்த்தா, ஏ.எல்.நாராயணன் பரிந்துரையில் எல்.பாலு இயக்கிய ‘பொய் சொல்லாதே’ என்ற படத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. நாகேஷுடன் ஒரே ஒரு காட்சியில் பார்பராக வருவார். அதற்கு இவர் வாங்கிய தொகை இருபத்தைந்து ரூபாய். அதற்குப்பின்னர் பெருமாள் முதலியாரின் ‘தங்கதுரை’ என்ற படத்தில் நடித்தார். நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து தேவிகாவின் சொந்தப்படமான ‘’வெகுளிப் பெண்’’ படத்தில் நடித்தார். 1978-இல் வெளிவந்த ‘இவள் ஒரு சீதை’ படத்தில் காந்திமதியுடன் சேர்ந்து நடித்தார்.

இவரை நான்கு பேருக்குத் தெரிய வைத்தவர் இயக்குநர் மகேந்திரன். பல மாதங்கள் படங்கள் இல்லாமல் இருந்தபோது சென்னை, எல்டாம்ஸ் சாலையில் உள்ள கிறித்தவக் கலைத் தொடர்பு நிலையம் உருவாக்கிய வானொலி மற்றும் மேடை நாடகங்ளில் நடித்தார். அங்குதான் இயக்குநர் மகேந்திரன் இவருக்குப் பரிச்சயமானார். அங்கு அவர் நாடகங்கள் எழுதிக்கொண்டிருந்தார். இது நடந்து பல மாதங்களுக்குப் பின் எதேச்சியாக ஒரு நாள் அவரை இவர் சந்தித்தார். அவர் உருவாக்கவிருக்கும் முள்ளும் மலரும் படத்தில் இவருக்கு வேடமிருப்பதாகச் சொன்னார் மகேந்திரன். அதிலிருந்து தொடர்ந்து ‘அழகிய கண்ணெ’ படம் வரை ஒன்பது படங்களில் அவருடன் இவர் இணைந்து பணியாற்றினார். இவருக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்தவை ‘நண்டு’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ ஆகியவை.

கே.பாக்யராஜின் மேற்பார்வையில் பாலகுமாரன் இயக்கிய ‘இது நம்ம ஆளு’ படத்தில் இவர் மனோரமாவின் கணவராகவும், கே.பாக்யராஜின் தந்தையாகவும் முடி திருத்துபவராக நடித்திருந்தார். 

ஆரம்பத்தில் கே.எம்.முத்து என்றுதான் தன் பெயரை பயன்படுத்தி வந்துள்ளார். அது அவ்வளவாக ராசியானதாக தோன்றாததால், பலர் சொல்லி, குமரி முத்து என்று தன் பெயரை திருமண அழைப்பிதழில் முதன் முதலாகப் போட்டுள்ளார். இவருக்குப் பாராட்டை வாங்கிக் கொடுத்த இன்னொரு படம் ‘பாலைவனச் சோலை’.

தொடர்ந்து ஈரவிழிக்காவியங்கள், தேவி ஸ்ரீ தேவி, இது நம்ம ஆளு, கோழி கூவுது, கொக்கரக்கோ, தூரம் அதிகமில்லை, தூங்காத கண்ணின்று ஒன்று, ஏதோ மோகம், பசி, நினைவுகள், இலையுதிர்க் காலம் போன்ற 200–க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

படங்களில் நடித்ததுடன் குமரி ஃபைன் ஆர்ட்ஸ் என்ற நாடகக்குழுவை ஆரம்பித்து, அதன்மூலம் ‘சிரிப்புத்தான் வருகுதய்யா’, ‘சிந்திக்க ஒரு நிமிடம்’ ஆகிய நாடகங்களை நடத்தி வருகிறார்.

இவர் 29.2.2016 அன்று தனது 78-ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.
15.04.1984-சினிமா எக்ஸ்பிரஸ் இதழிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.