Breaking News :

Sunday, October 13
.

எட்டு மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி*


சினி கிராஃப்ட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள அரசியல்-நகைச்சுவை திரைப்படமான 'ஒத்த ஓட்டு முத்தையா' போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. 

நாடாளுமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், இப்படம் விறுவிறுப்பாக வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

 

சென்னையில் உள்ள பரணி’ டப்பிங் ஸ்டூடியோவில் 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் டப்பிங் பணிகளில் பங்கேற்ற கவுண்டமணி, தொடர்ந்து எட்டு மணி நேரம் உற்சாகத்துடன் டப்பிங் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

 

தற்கால அரசியலை தனக்கே உரிய பாணியில் நையாண்டி செய்யும் வேடத்தில் கவுண்டமணியும் அவருடன் நெருக்கமாக பயணிக்கும் பாத்திரத்தில் யோகி பாபுவும் நடிக்கின்றனர். கவுண்டமணிக்கும் யோகி பாபுவுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி மிக நன்றாக அமைந்திருப்பதாகவும் அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை சிரிப்பு மழையில் நனைய வைக்கும் என்றும் இயக்குநர் சாய் ராஜகோபால் தெரிவித்தார். இவரும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

கவுண்டமணி-செந்தில் நகைச்சுவை ஜோடிக்கு பிறகு கவுண்டமணி-யோகி பாபு கூட்டணி மிகவும் பேசப்படும் என்று தெரிவித்த இயக்குநர், இரு நடிகர்களும் தங்கள் காட்சிகளை மிகவும் ரசித்ததாக கூறினார். 

 

ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகி வரும் இப்படத்தில் நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரனும் ஆனந்த்பாபுவின் மகனுமான கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுக்கு ஜோடியாக மூன்று இளம் நடிகைகள் நடிக்கின்றனர். 

 

கவுண்டமணி ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்கிறார். மாறுபட்ட ஒரு நகைச்சுவை பாத்திரத்தில் சிங்கமுத்துவும், நல்லதொரு வேடத்தில் சித்ரா லட்சுமணனும் நடிக்கின்றனர். மேலும், மொட்டை ராஜேந்திரன்,  O A K. சுந்தர், ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை,  டாக்டர் காயத்ரி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளம் களம் இறங்கியுள்ளது.

 

படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால், "சுமார் 70 படங்களில் கவுண்டமணி மற்றும் செந்திலுக்கான நகைச்சுவை பகுதியை எழுதியதோடு, பல்வேறு படங்களில் உதவி, துணை மற்றும் இணை இயக்குநராக நான் பணியாற்றி உள்ளேன். மணிவாசகம், அர்ஜுன், டி பி கஜேந்திரன் உள்ளிட்டோர் உடன் பணியாற்றி உள்ளேன். எனது 25 ஆண்டு கால திரையுலக பயணத்தில், பாண்டியராஜன், ஈஸ்வரி ராவ் நடிப்பில் 'சுந்தரி நீயும் சுந்தரன் நானும்', 'பாய்ஸ்' மணிகண்டன் மற்றும் சிம்ரன் நடிப்பில் 'கிச்சா வயசு 16' ஆகிய படங்களை இயக்கி உள்ளேன்.

 

'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னபோது மிகவும் மகிழ்ச்சி தெரிவித்ததோடு நடிப்பதற்கும் உடனே சம்மதம் தெரிவித்தார். ஆறு முதல் 60 வரை அனைத்து வயதினரும் ரசிக்கக்கூடிய அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இது இருக்கும். இப்படத்தை ரசிகர்கள் கண்டு மகிழ்ந்து தங்களது பேராதரவை தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

 

இத்திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்க, ஹெக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். கலை இயக்கத்திற்கு மகேஷ் நம்பியும், படத்தொகுப்புக்கு ராஜா சேதுபதியும் பொறுப்பேற்றுள்ளனர். பி ஜி துரை, தீனா மற்றும் மணிவண்ணன் ஆகியோர் அசோசியேட்டுகளாக பணியாற்றுகின்றனர். தயாரிப்பு மேலாளர்: ராஜன், மக்கள் தொடர்பு: நிகில் முருகன். கோவை லட்சுமி ராஜன் இணை தயாரிப்பில் 'ஒத்த ஓட்டு முத்தையா' விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

.

Sign up for the Newsletter

Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.