Breaking News :

Friday, July 12
.

"உனக்கு ஏது இவ்வளவு பணம்?"


தன்மேல் நாவிதருக்கு உள்ள பக்தியை, வெளிப்படுத்த வேண்டும் என்றே, அந்தக் கேள்வியைக் கேட்ட மகாபெரியவா.

"சாமி.. எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலேன்னு, ரொம்ப வருத்தமா   இருந்துச்சுங்க அதனால  என்னோட குடிசையை வித்துட்டேங்க!" - நாவிதரின் பதில்.

தொகுப்பு-வெ-ஐஸ்வர்யா
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-. குமுதம் லைஃப்
(27-06-2018 தேதியிட்ட-இதழ்)


மகா பெரியவா ஆந்திரா பக்கம் பாதயாத்திரை செய்து கொண்டிருந்த சமயம்  அது அப்போது ஒருநாள் பௌர்ணமி வந்தது.


சன்யாச தர்மப்படி பௌர்ணமி நாளில் வபனம் (க்ஷவரம் செய்து முடிகளை அகற்றுவது) செய்து கொள்ள வேண்டும். ஆசார்யா யாத்திரை செய்து கொண்டிருந்ததால், தெலுங்கரான நாவிதர் ஒருவரை அதற்காக  அழைத்துக் கொண்டு வந்தார்கள்..


ஆந்திராவில் சுற்றுவட்டாரத்திலேயே மகாபெரியவா,மேலும் சில மாதங்கள் யாத்திரை செய்ததால், அடுத்தடுத்த பௌர்ணமி நாட்களிலும் அதே நாவிதர் வந்து வபனம் செய்தார். பிறகு ஒரு கட்டத்தில் அந்த நாவிதர் காஞ்சி மடத்திற்கு அழைத்து  வரப்பட்டு,பெரியவா சேவைக்கு அமர்த்தப்பட்டார். ஆரம்பத்தில் மகா  பெரியவாளின் மகத்துவம் எதுவும் அவருக்குத் தெரியாது. யாரோ ஒரு சன்யாசிக்குத்தான் வபனம் செய்கிறோம் என்பதுபோல்தான் அவர் இருந்தார்


ஆனால், நாளாக நாளாக எத்தனை எத்தனையோ ஜன்மாக்களில் செய்த பலனால், மகானைத் தொட்டுத் திருத்தொண்டுசெய்யும் பாக்கியம் கிடைத்திருக்கிறது என்று உணர்ந்து கொண்ட அவர், அதனால் பூரண பக்தியோடு வந்து, மிகுந்த சிரத்தையோட பணி செய்தார்.


அப்படி வந்த சமயங்களில் எல்லாம், பக்தர்கள் பலரும் பரமாசார்யாளுக்கு பலப்பல காணிக்கைகளைத் . தருவதைப் பார்த்தார். மகாபெரியவாளுக்கு தானும் ஏதாவது தரவேண்டும் என்ற ஆசை, அவருக்குள் தோன்றி வேகமாக வளரத் தொடங்கியது.


மகா பெரியவாளுக்கு ஏழ்மையான இந்த பக்தர் எதைக் கொண்டு வர முடியும்? காவியேறிய துணியில் நிறைய புற்று மண்ணை மூட்டையாகக் கட்டி,அதையும் மாங்குச்சியையும் (இவை இரண்டும் மகான் உபயோகிப்பவை) ஒவ்வொரு முறையும் எடுத்துவருவார். ஆசார்யா முன் அதை சமர்ப்பித்துவிட்டு, தன் பணியைச் செய்துவிட்டு விடைபெறுவார்


பெரியவா முன் அவர் விரும்பாமலேயே பக்தர்கள் சமர்ப்பிக்கும் பழங்கள், பாதாம்,  முந்திரி,பிஸ்தா போன்றவை, விலை உயர்ந்த சால்வைகள்,தங்க நாண்யங்கள், இத்யாதி,  இத்யாதியான பலப்பல கணிக்கைகளுக்கு இடையே, நாவிதர் சமர்ப்பித்துச் செல்லும் அழுக்கு மூட்டையும் இருக்கும்.பக்தியோட அளித்த அதுவே மகாபெரியவாளுக்கு மகத்தான காணிக்கையாகத் தெரியும்.


ஆனால், நாவிதர் அதனை உணரவில்லை. வழக்கம்போல் ஒரு பௌர்ணமியன்று வந்தவர், அன்று புற்றுமண் வைத்து தட்டில்,விலை உயர்ந்த பழங்கள், தேங்காய்,  திராட்சை என பலப்பல காணிக்கைகளோடு,  கொஞ்சம் ரூபாய் நோட்டுக்களையும் வைத்து எடுத்து வந்து சமர்ப்பித்தார்.


வழக்கம்போல்,மடத்து தொண்டர் ஒருவர், அந்த மூங்கில்தட்டை எடுத்துச் சென்று மகான் முன் சமர்ப்பித்தார். இருந்ததை இருந்தவாறே அறியும் மகானுக்கு அது யார் தந்தது என்று தெரியாதா என்ன? இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல், " இன்னிக்கு அந்த தெலுங்கர் வரலையோ?" என்று அறியாதவர் போல கேட்டார்


அவர்தான் கொண்டுவந்து இதை சமர்ப்பித்தார் என்று தொண்டர்கள் சொல்ல, கொஞ்சம் தொலைவில் நின்றிருந்த அந்த  நாவிதரைப் பார்த்தார் மகான். "உனக்கு ஏது இவ்வளவு பணம்?"... தன்மேல் அவருக்கு உள்ள  பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்றே அந்தக் கேள்வியைக் கேட்டார்


"சாமி..எல்லோரையும் போல உங்களுக்கு என்னால ஏதும் கொண்டுவந்து தரமுடியலையேன்னு, ரொம்ப வருத்தமா இருந்துச்சுங்க.அதனால என்னோட குடிசையை வித்துட்டேங்க.!"


"குடிசைன்ன அதுல நீ மட்டும்தான் இருந்தியோ?" மகானின் குரலில் கனிவு தெரிந்தது.


"இல்லீங்க,பொண்டாட்டி,குழந்தைகளோடதான் இருக்கேன்..அவங்களைத் தெருவுல ஒரு மூலையில இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன்க,!"


அவர் சொல்லி முடிக்க, அங்கிருந்த மற்ற பக்தர்களுக்கு, மகாபெரியவா மீது நாவிதர் வைத்திருந்த பரிபூரண பக்தி தெரியவந்தது. அவரது திருப்பணிக்கு நிகராக தாங்கள் எதையுமே செய்ய முடியாது என்று புரிந்து கொண்ட அவர்களின் நெஞ்சம் நெகிழ்ந்து கண்களில் நீர் நிறைந்தது.


குடும்பத்தையே தெருவில் நிறுத்திவிட்டு உடைமைகள் அத்தனையையும் தன் மீது கொண்ட பக்திக்காக  சமர்ப்பித்து நிற்கும் நாவிதரின் பக்தி மேன்மையை அனைவரும் அறிய  வேண்டும் என்பதற்காக மகான்  நடத்திய நாடகம்தான், "தெலுங்கர் வரலையா?"  என்று அவர் கேட்டது என்பதைப் புரிந்து கொண்ட எல்லோரும், ஜயஜய சங்கர, ஹரஹர சங்கர என்று குரல் எழுப்பினார்கள்.


அடியார்க்கு வீடுபேறு தரவல்ல ஈசனின் அம்சமான மகாபெரியவா, தன்னிடம் பரிபூரண பக்தி கொண்டிருந்த அந்த நாவிதருக்கு நிரந்தரமானதொரு வீட்டைக் கட்டித் தரும்படி உத்தரவிட்டார். அது, கடவுளின் குரலாகவே கேட்டது அந்த நாவிதருக்கு.

Tags

    .

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.