Breaking News :

Monday, March 20

கோயில்களில் குடமுழுக்கு நிகழும் போது பருந்துக்காக ஏன் காத்திருக்கிறார்கள்?

அறிவியல் காரணம் என்ன?"

இங்கு மட்டுமல்ல ரோமானிய, கிரேக்க மன்னர்கள் இறந்தபிறகு அவர்களின் சடலம் புதைக்கப்பட்டதும் ஒரு கருடன் மேலே பறக்கவிடப்படும். அது அரசனின் ஆன்மாவைச் சொர்க்கத்துக்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கைதான்.
கோவில் குடமுழுக்கு
கோவில் குடமுழுக்கு
விகடனின்  பக்கத்தில் கதிர் என்ற வாசகர், "கோயில்களில் குடமுழுக்கு நிகழும் போது பருந்துக்காக ஏன் காத்திருக்கிறார்கள்? அதன் அறிவியல் காரணம் என்ன?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். அந்தக் கேள்விக்கான பதில் இங்கே!

அறிவியல் மற்றும் புராண காரணங்கள் மிக உண்டு. காரணம் இல்லாமல் இங்குக் காரியமே இல்லை எனலாம். மிருகம் என்றால் மான். அதுவே சகல விலங்குகளுக்கும் மிருகம் என்று பொதுவானது. அதேபோல் பட்சி என்றாலே கருடன்தான். அதுவே சகல பறவைகளுக்கும் பொதுப் பெயரானது. பருந்து வகைகளில் பெரிய இனம் கருடன். கழுகு, பருந்து, வல்லூறு, ராஜாளி, கருடன் என்று தனித்தனியே இருந்தாலும் பொதுவாகப் பருந்து என்று அழைக்கிறார்கள். கோயில் விழாக்களில் பறந்து வருவது பருந்து அல்ல, கருடன் என்றே வணங்கப்படுகிறது.

கோவில் குடமுழுக்கின் போது வட்டமிடும் கருடன்
கோவில் குடமுழுக்கின் போது வட்டமிடும் கருடன்
தொன்றுதொட்ட காலம் முதலே கருட வழிபாடு நம் கலாசாரத்தில் உள்ளது. ரிக் வேதம் கருடப் பறவையை ஸ்யேன, சுபர்ணா என்று குறிப்பிடுகிறது. கருடன் பறக்கும் இடத்தில் தீமைகள் அண்டாது என்பது நம்பிக்கை. அதாவது அது பறக்கும் இடத்தில் பாம்புகள் போன்ற விஷ ஜந்துக்கள் இருக்காது. கருட நிழல் படும் இடத்தில் விஷம் வேலை செய்யாது என்பதும் நம்பிக்கை. மேலும் விவசாயத்தை அழிக்கும் எலி போன்ற விலங்குகளும் இருக்காது; கொன்றுவிடும் என்ற காரணமே கருட வழிபாட்டுக்கு முதல் வித்தாக அமைந்தது. மனிதருக்கு எது உபயோகமானதோ அது வணங்கப்படும் இல்லையா!

இந்திரன், வருணன் போலக் கருடனும் ஒரு தேவனாகவே வழிபடப்பட்டது. புராணங்களில் திருமாலின் வாகனமாகக் கருடன் அமைந்துள்ளது. திருமாலின் திருநாமங்களில் ஒன்றாக 'சுபர்ண' என்ற பெயரும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் இரண்டு முறை குறிப்பிடப்பட்டு உள்ளது. கருடன் திருமாலின் 'சங்கர்சண' அம்சம் என்றும் வணங்கப்படுகிறது. தைத்ரீய சம்ஹிதை, ஜைமினீய பிராமணம், முண்டகோபநிஷத் போன்ற வேத நூல்கள் கருடனைக் குறிப்பிட்டுப் போற்றுகின்றன. கருடன் திருமாலின் அம்சம் என மகாபாரதத்தின் அனுசாசன பர்வத்தில் கூறப்பட்டுள்ளது. 'பறவைகளில் நான் கருடன்' என்று கண்ணனே கீதையில் கூறி இருக்கிறான் இல்லையா! ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார் கருடனின் அம்சம் என்பதால் திருமாலின் மாமனாராகவும் கருடன் இருக்கிறார். ஸ்ரீவில்லிபுத்தூரில் ரங்கமன்னாரோடு ஒரே ஆசனத்தில் அமர்ந்தும் காட்சி தருகிறார்.

கருடன் வாழ்வோடு மட்டுமல்ல, மனிதர்களின் இறப்போடும் சம்பந்தப்பட்டவர். இறந்தவர் வீட்டில் 13-ம் நாள் கருட புராணம் படிக்கும் வழக்கம் இருந்து வந்தது. புண்ணியம் செய்து இறந்து போனவரின் ஆன்மாவைக் கருடனே வைகுந்தத்துக்கு சுமந்து செல்வார் என்பது நம்பிக்கை. இதுபற்றி திருக்குறளும் சொல்கிறது.

 
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்றே

உடம்போடு உயிரிடை நட்பு

அதிகாரம்: நிலையாமை | குறள் எண்: 338

இதேபோல் கல்லாடனாரின் பாடலும் உயிரைக் கழுகுடனே ஒப்பிட்டுச் சொல்லும்.

இங்கு மட்டுமல்ல ரோமானிய, கிரேக்க மன்னர்கள் இறந்தபிறகு அவர்களின் சடலம் புதைக்கப்பட்டதும் ஒரு கருடன் மேலே பறக்கவிடப்படும். அது அரசனின் ஆன்மாவைச் சொர்க்கத்துக்குக் கொண்டு செல்லும் என்ற நம்பிக்கைதான். ஹோரஸ் என்ற தேவனின் அம்சமே அரசர்கள் என்றும், ஹோரஸ் கருட முகமும் மனித உடலும் கொண்டவர் என்றும் ரோமானிய வரலாறு நம் கருடாழ்வாரின் வடிவத்தைப் போன்றே குறிப்பிடுகிறது. மாயன், காதிக், மெக்ஸிகன் பழங்குடி மக்களின் புராணங்களிலும் கருட வழிபாடு முக்கியப் பங்கு வகிக்கிறது.

பௌத்தர்களும் ஜைனர்களும் கூட கருட வழிபாட்டைச் செய்கிறார்கள் என்பதில் இருந்து உலகம் எங்கும் கருட வழிபாடு பரவி இருந்ததை உணரலாம். மௌரியர்கள் கருடனை ஆட்சியைக் காக்கும் தெய்வமாக வணங்கினார்கள். குப்தர்கள் ஜெய ஸ்தூபியிலும், நாணயங்களிலும் கருடனைப் பொறித்து வெற்றியின் சின்னமாக வணங்கினார்கள். சோழர்கள் தஞ்சை நகரையே கருடனின் வடிவத்தில் உருவாக்கினார்கள் என்ற தகவலும் உண்டு.

 
விஷ்ணுவின் கொடியாக, வாகனமாக, காவலனாக, சாமர சேவை செய்யும் தொண்டனாக விளங்குபவர் கருடன். அதனால் வைணவம் சிறந்து விளங்கிய காலத்தில் கருட வழிபாடு மேலோங்கியது. இதில் ஒரு குறிப்பும் உள்ளது. நாகங்களைக் கண்டு பயந்த இடத்தில் நாகங்களை அழிக்கும் கருடனின் வழிபாடு அச்சத்தின் காரணமாகவே சிறப்புற்றது என்று வரலாறு கூறுகிறது.

சண்முக சிவாசார்யர்
கருட தரிசனம் ஏன் முக்கியமானது, அதற்கென பலன்கள் ஏதும் உண்டா என காளிகாம்பாள் கோயில் ஷண்முக சிவாசார்யரிடம் கேட்டோம். "குடமுழுக்கு, லோக க்ஷேமத்துக்கான யாகங்கள், திருவிழாக்கள் நடைபெறும் நேரத்தில் சரியாக வானில் கருடன் வட்டமிடும் அதிசயம் இன்றும் நடைபெறுகிறது. கருடன் ஒன்றே இறக்கைகளை அசைக்காமல் வானில் நின்றபடி வட்டமிட முடியும். அதுவே கருடன் என்பதை நாம் உணர்ந்து கொள்ளக் காரணமாகிறது. வேதங்கள் முழங்கும் இடத்தில் கருடன் தோன்றுவார். காரணம் கருடன் வேத முழக்கப் பிரியன் என்றும் வேத படிமமானவர் என்றும் சொல்லப்படுகிறது.

கருடன் வட்டமிடாவிட்டால் அந்த குடமுழுக்கு அல்லது யாகத்தில் ஏதோ குறை என்று மக்கள் குறைபட்டுக் கொள்வார்கள். ஆனால் பூஜை முறைகளில் வழிகாட்டும் சைவ, வைணவ ஆகமங்களிலோ, வைதீக, தாந்த்ரீக சாஸ்திரங்களிலோ குடமுழுக்கு சமயத்தில் கருடன் வரவேண்டும் என்ற எந்த விதியும் இல்லை என்பதே உண்மை. ஆனால் வேத மந்திரப் பிரயோகமும், ஹோம ஆகுதிப் பொருள்களின் வாசமும் அந்த இடத்தில் கருடனை வரவழைத்து விடும் என்பது நம்பிக்கை. கருட தரிசனம் என்பது சகுனத்தின் அடிப்படையில் நன்மை தரும் விஷயமாகவே எடுத்துக் கொள்ளப்படுகிறது. கருட தரிசனம் என்பது பெருமாளே வந்து ஆசி கூறுவதற்குச் சமம் என்பதால் கருட தரிசனத்துக்குக் காத்திருப்பது நம் வழக்கமாக உள்ளது" என்று கூறினார்.

தங்கப் பறவை, அதிர்ஷ்டப் பறவை என்று உலகெங்கும் போற்றப்படுவது கருடன். இதைப் பார்த்தால் நல்ல சகுனம் என்றும் மனதில் நம்பிக்கையும் தைரியமும் உண்டாகும் என்றும் பரவலாக நம்பப்படுகிறது. பறவைகளை ஆராய்ச்சி செய்பவர்கள் கூட வெள்ளை கழுத்து கொண்ட பழுப்பு நிற கருடனைக் கண்டால் உற்சாகம் பெறுவதாகப் பல குறிப்புகளில் எழுதி உள்ளனர்.

ஆன்மிகத்தில் கருடனைத் தரிசிப்பதும், குரலைக் கேட்பதும், திருமாலைச் சுமந்தபடி வரும் கருட சேவையைத் தரிசிப்பதும் புண்ணிய காரியமாகப் போற்றப்படுகிறது. அதனால் கருட தரிசனத்துக்குக் காத்திருக்கிறோம்.
கருடன்
கருடன்
ஆனால் விஷமாகிப் போன உரங்கள், பூச்சிக் கொல்லி மருந்துகள் மூலம் விளைந்த தானியங்களை உண்ட வயல் எலிகள் பெருத்தன. அதை உண்ட கழுகுகளும் கருடனும் விஷம் பரவி அழிந்தன. திருக்கழுகுன்றத்திலேயே இன்று கழுகு வருவதில்லை. கருடனும் அருகிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளுக்குப் பிறகு விழாக்களில் கருடனைத் தரிசிப்போமா என்று தெரியவில்லை. அது அந்த பெருமாளுக்கே வெளிச்சம்!

Tags

    Sign up for the Newsletter

    Join our newsletter and get updates in your inbox. We won’t spam you and we respect your privacy.