முன்பு கிராமத்தில் ஒரு உப்பு வியாபாரி வாழ்ந்து வந்தான். அந்த ஊரில் உள்ளவர் எல்லாம் இந்த வியாபாரியிடம் தான் உப்பு வாங்குவார்கள். உப்பு வியாபாரம் செய்து தன் வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து கொண்டிருந்தான். இவன் ஒரு காமாட்சியம்மன் பக்தன். தினமும் காமாட்சி அம்மனை வணங்கி விட்டுதான் வியாபாரத்திற்கு செல்வான். இப்படி தினம்தோறும் இவனது வாழ்க்கை சுமூகமாக தான் சென்று கொண்டிருந்தது.
அந்தக் காலத்திலெல்லாம் உப்பு விற்க செல்பவர்கள் கழுதையின் மீது உப்பு மூட்டையை போட்டு எடுத்துக்கொண்டு போய் வியாபாரம் செய்வார்கள். வழக்கம் போல உப்பு மூட்டைகளை கழுதையின் மீது ஏற்றிக் கொண்டு வியாபாரத்திற்கு சென்றான் உப்பு வியாபாரி. என்றைக்கும் இல்லாமல் அன்றைக்கு காலநிலையானது மிகவும் மோசமாக மாறி நன்றாக மழை பெய்து விட்டது. என்ன ஆகும்? மூட்டையில் இருந்த உப்புக்கள் எல்லாம் கரைந்து போய்விட்டது. அந்த வியாபாரிக்கு பெருத்த நஷ்டம். கஷ்டம் வந்துவிட்டது முதலில் அவன் திட்டியது அந்த காமாட்சி அம்மனை தான்.
தினம்தோறும் உன்னை நினைத்து பூஜை செய்த எனக்கு இப்படியொரு தண்டனையா? எனக்கு பெருத்த நஷ்டம், இனிமே நான் உன்னை வணங்க மாட்டேன். என்று அந்த அம்மனை திட்டி கொண்டே நடந்து வந்து கொண்டிருந்தான்.
அந்த சமயத்தில் வழியில் வந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் இவனை மிரட்டி கொள்ளையடிக்க முயன்றனர். ஆனால் அந்த வியாபாரி தான் இன்று வியாபாரம் செய்யவில்லையே. இவனிடம் எப்படி பணம் இருக்கும். வந்தவர்கள் அவனை நன்றாக சோதனை செய்து விட்டு பணம் இல்லை என்று விட்டு சென்று விட்டார்கள்.
திருடர்கள் இவனை விட்டு சென்ற போது இந்த உப்பு வியாபாரியை பார்த்து ‘உனக்கு இன்று நல்ல நேரம் போலிருக்கு. உன்னிடம் பணம் ஏதுமில்லை. அதனால் உன்னை விட்டு விட்டு செல்கின்றோம்.’ என்று கூறிவிட்டு சென்றனர். அப்போது தான் அந்த உப்பு வியாபாரி யோசித்தான்.. ‘ஒருவேளை இன்று நாம் உப்பினை விற்றுவிட்டு பணத்தோடு வந்திருந்தால் பணத்தை காப்பாற்ற, இந்த திருடர்களிடம் சண்டையிட வேண்டியதாக இருந்திருக்கும். இதனால் என் உயிரை கூட நான் இறந்திருப்பேன். இன்றைக்கு என் உப்பு கரைந்து கூட நல்லதுக்காக என்பதை நான் உணர்ந்து விட்டேன்’. என்று அந்த காமாட்சி அம்மனிடம் மனதார மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.