பூஜை - சிறுகதை

poojai-short-story
பூஜை - சிறுகதை

அந்தச்சின்னப்புள்ள ஆத்தாவப்பாத்து கோவமாக் கேட்டுச்சு.  என்னா ஆத்தா எப்பப்பாத்தாலும் கஞ்சியும்  தொட்டுக்க மொளகாயும் தானா.  நெறயா படங்கள்ல வீதில போட்டுருக்காகலே எலைய போட்டு அது அதுல சோத்தப்போட்டு சுத்தி விதவிதமா என்னான்னமோ வைச்சிருக்காகளே அதெல்லாம் வைச்சா தெனம் திம்பாக.  

அது எல்லாம் திங்கிறது தானா.. இல்ல வேற என்னமுமா ஒரு நாகூட அப்புடி வைச்சி நான் பாத்தது கூட இல்ல.
நீ என்னடான்னா எப்பப்பாத்தாலும் அந்தகஞ்சி தான் அதையும் சோறா குடுக்க மாட்டீங்குற. கஞ்சிய காச்சி அதுல உப்ப போட்டு தொட்டுக்க மொளகா இல்லாட்டி கீரன்னு ஏதோ பச்சயா வேகவைச்சி குடுக்குற  எலைகூடப்போடுறதில்ல, ஒனக்கு வேற எதுவும் சமைக்கத்தெரியாதா,அதே தட்டுத்தான் பள்ளிக்கொடம் தொறந்தாவாவது சாம்பார்சோறு  மாதிரி ஏதாவது குடுப்பாக அதுக்கும் வழியில்ல..  எப்ப இதெல்லாம் எனக்கு கண்ணுல காட்டப்போறன்னு அனத்திக்கிட்டே இருந்தா...

அதுக்கு ஆத்தா சொல்லிச்சி ஒரு வாரம் பொறு
என்னத்தையாவது பண்ண முடியுமான்னு பாக்குறேன்னு சொல்லிச்சி. போத்தா எப்பப்பாத்தாலும் இதைத்தான் சொல்ற இப்பத்தாறேன் அப்புறமாத்தாறேன்னு சொல்றதோட சரி..செய்யிற பழக்கம் கெடையாது என்னத்தையாவது சொல்லி ஏமாத்திப்புடுற..ன்னு கண்ண க்கசக்குனா

அதுக்கு ஆத்தா சொல்லுச்சு.. ஏம்மா நா என்ன வைச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுறேன் வசதி இருந்தா செஞ்சுகுடுக்கமாட்டேனா.  மாசாமாசம் ரேசன்ல குடுக்குற அரிசி வாங்கித்தான் கஞ்சி ஊத்துறேன்  அங்க குடுக்குற பருப்பு சீனி எண்ண கூட வாங்க வக்கில்ல. என்னாத்தப்பண்ண. ஒங்க அப்பனும் ஆத்தாளும் ஒன்ன எங்கிட்ட விட்டுட்டு ஒன்னாபோய்ட்டாக . எனக்கு இருக்குற வயசான ஒடம்ப வைச்சிக்கிட்டு  வேலை எதுவும் செய்யமுடியல.   

ஏதோ வயசாளிகளுக்கு முதியோர் பென்சன் நு ஒன்னு குடுக்குறாக அதைவைச்சிப்பொழப்பு ஓடுது. சொத்துபத்து ஏதுமில்ல. சொந்தக் காரவுக ஒதவியுமில்ல. இந்த கெளவி என்னாத்தப்பண்ணமுடியும். தெனம் சாணி பொறுக்கியாந்து எரு தட்டி காயவைச்சி விக்கிறேன் அதையும் இப்ப வீடுகள்ல வாங்குறதில்ல. என்னமோ கேஸ் அடுப்பாம் வாங்க மாட்டீங்குறாக... 

பொணம் எரிக்கமாத்திரம் வந்து வாங்கிட்டுப்போறாக அதுவும் எத்தன நாளைக்கின்னு தெரியல. மாடுக முன்னமாதிரி இல்ல. பொணம் எரிக்கவும் கரண்டு வந்துருச்சாம்  என்னமோ   மண்ணு தோண்டப்போனா மழைவருது   பஞ்சு பொறக்கப்போனா காத்தடிக்குது... நம்ம நேரம் அப்புடி  இருந்தாலும் கொஞ்சம் பொறு   செஞ்சு தாறேன்னு சொல்லிச்சி..

அன்னிக்கி  ஆத்தா நாளைக்கி ஒனக்கு விதம் விதமா சமைச்சிப்போடுறேன்  பாரு நீயே அசந்துடுவன்னு சொல்லிச்சி . மறுநா  காலையில வெளியே போச்சு  போய்ட்டு சாயங்காலம் தான் வந்துச்சு அது கூடையில என்னான்னமோ கொண்டாந்துருந்துச்சு.  

அடுப்பப்பத்தவைச்சி என்னான்னமோ பண்ணிக்கிட்டு இருந்துச்சு. ஆத்தா  . அந்தப்புள்ள ஆத்தா பசிக்குது சீக்கிரம் சாப்பாடு போடுன்னு கண்ணக்கசக்கவும் இந்தா இந்தப்பொரியையும் சுண்டலையும் சாப்புட்டுக்கிட்டு இரு சீக்கிரமே  சமைச்சிடுறேன் அப்புறமா ரெண்டுபேரும் ஒக்காந்து திங்கலாம்னு சொல்லி தொண்ணையில சுண்டலும் பொரியும் குடுத்துச்சு....

ஆத்தா சமைக்கிற வாசம் ஊரைக்கூப்புட்டுச்சு குடிசைக்கு வெளியில போறவுக கூட என்னாத்தா இம்புட்டு மணமா இருக்கு ஏதாவது விசேசமா விருந்தாளிக ஆரும் வாரகளான்னு கேட்டுக்கிட்டே போனாக. அதுக்கெல்லாம் பதில் சொல்ல ஆத்தாவுக்கு நேரமில்ல.  மும்முரமா சமைச்சிக்கிட்டு இருந்துச்சு...
கொஞ்சநேரத்துல அந்தப் புள்ளையக் கூப்புட்டுச்சு ஆத்தா வந்து ஒக்காருன்னு சொல்லிச்சு அந்தப்புள்ள தட்டெடுக்கபோக  ஆத்தா வேணாமுன்னு சொல்லிட்டு  ஒக்காரவைச்சி எலையப்போட்டுச்சு . 
அப்ப அந்தப்புள்ள  எலையில எப்புடி ஆத்தா கஞ்சி குடிக்கிறதுன்னு கேட்டுச்சு.

அதுக்கு ஆத்தா சொல்லிச்சி பேசாம ஒக்காரு எல்லாம் எனக்குத்தெரியும்னு சொல்லிட்டு எலையில தண்ணி தெளிச்சிச்சி தொடைச்சிட்டு அதுல ப்பூசணிக்கா கூட்டு  வைச்சி அதுக்குப்பக்கத்துல வாழைக்கா பொறியல்..  அப்புறம் சுண்டல்    அப்புறம் கொஞ்சம் சக்கரைப்பொங்கல் அப்புறம் புளியோதரை கொஞ்சம் வைச்சிச்சி  அப்புறம் எலையில சோத்தப்போட்டு கொழம்பு அந்தக்கொழம்புல பூசணி வாழக்கா முருங்கக்கா  எல்லாம்போட்டு மணக்க மணக்க ஊத்துச்சு.. ஒரு டம்ளர்ல மோர் வேற இருந்துச்சு.. மொதல்ல இனிப்புல இருந்து ஆரம்பி சக்கரைப்பொங்கல சாப்புடுன்னு சொல்லிச்சி..

இப்ப எலை பூராம் நெறைஞ்சிருந்துச்சு.. பாத்ததுமே அந்தப்புள்ளைக்கி  வயிறு நெறைஞ்சமாதிரி ஆயிருச்சு. ஒவ்வொன்னா ருசிச்சி சாப்புட்டுச்சு பக்கத்துல ஒக்காந்து பாத்துப் பாத்து ஆத்தா பரிமாறுச்சு அந்தப்புள்ள சாப்புடுறதப்பாக்கும் போது கண்ணுல இருந்து கண்ணீர் வழிய அதை முந்தானையில தொடச்சிச்சி 
அம்புட்டும் ருசியாக்கெடக்கு ஆத்தா எதைத்திங்கிறது எத விடுறதுன்னு தெரியல இந்த சின்ன வயித்துக்கு  அம்புட்டு எடமில்ல ஆத்தா ஒன் கையக்கொண்டா முத்தம் கொடுக்கனும் என்னா ருசி என்னா ருசின்னு மூக்க உறிஞ்சிக்கிட்டே சாப்புட்டா அவ.  அதைப்பாத்து ஆத்தா கண்கலங்குச்சு

ஏன் ஆத்தா  அழுகிறன்னு கேட்டதுக்கு அடுப்புல ப்பொகை அதுதான் கண்ணுல தண்ணி  வருதுன்னு சொல்லிச்சி. பாவம் இவளோட அப்பனாத்தா இருந்திருந்தா தெனம்  வகை வகையா சாப்புட்டு இருக்கும் இப்ப இதைச்சாப்புட வேண்டியதா இருக்குன்னு நெனச்சப்ப துக்கம் தொண்டய அடைச்சிது
அப்ப அத்தப்புள்ள கேட்டுச்சு ஆத்தா இம்புட்டு க்கு காசு ஏதுன்னு கேட்டவன்ன ஆத்தா சொல்லிச்சி எல்லாம் அம்மனோட அருள்மா நேத்து ஆயுத பூஜை இன்னிக்கி விஜய தசமில்லயா அதான் அதுல சம்பாறிச்சதுன்னு சொல்லிட்டு கண்ணத்தொடச்சிக்கிச்சு ஆத்தா 

ஏன்னா திருஸ்டிப்பூசணிக்காயமொள்காயப் பொறக்கி வந்து சுத்தம் பண்ணி  தோரணத் துக்குக் கட்டிருந்த வாழக்காய புடுங்கிட்டு வந்தும் கோயில்ல பிரசாதமாக்குடுத்த சக்கரை புளியோதரைபொங்கலை வாங்கிட்டு வந்ததும் சிதறுகாய் விட்ட தேங்காய அரைச்சி சமைச்சதும்  தோரணம் கட்டின எலைய அறுத்துட்டு வந்து கழுவி போட்டதும்  நீர் மோர் பந்தல்ல வாங்கிட்டு வந்த மோரை வைச்சி சமாளிச்சதும்  அவ நெஞ்ச உறுத்த   கண்ணீர் கசிய வேண்டிக்கிட்டா இதையாவது கொடுத்தீகளே அம்மன்சாமி மாருகளே ன்னு  எல்லாத்துக்குமா சேத்து அம்மனோட ஆயுத சரஸ்வதி விஜயதசமி கொண்டாடிய சாமிகளுக்குத்தான் கும்புடப்போடனும்னு பேத்திக்கிட்ட சொல்லிக்கிட்டு கண்ணத்தொடைச்சா அந்த அன்னபூரணி ஆத்தா.....

அ.முத்துவிஜயன்