நீங்களும் கொஞ்சம் பேப்பரை படிங்க.. - மாணிக்கம் தாகூருக்கு கனிமொழி சோமு பதிலடி
முதல்வர் விஜய் தலைமையில் நடந்த அனைத்து கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காததற்கான உண்மை வெளி வருகிறது என்று கூறிய மாணிக்கம் தாகூருக்கு திமுக எம்பி கனிமொழி சோமு பதிலடி கொடுத்துள்ளார். முதலில் கதறாமல் பேப்பரை படிக்க தொடங்குங்கள் என்று கூறியுள்ள கனிமொழி சோமு, திமுக மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த ஊருக்கு முன்பு கதறிக்கொண்டிருக்கிறீர்கள் என்றும் சாடியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் அனைத்து கட்சி எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு பேசுகையில்,
தமிழ்நாட்டிற்கு எது முக்கியம் என்ற ஸ்டாலினின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. திமுக தொடக்கம் முதலே தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறையக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. அரசியலில் நிரந்தரமான நண்பன், எதிரி என்று யாரும் கிடையாது. தமிழ்நாட்டிற்கு எது நல்லதோ, எங்கிருந்து வந்தாலும் அதனை ஆமோதிப்போம். அதிக தொகுதிகளை பெறுவதில் திமுக உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார். இதனால் பாஜக உடன் திமுக நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், அப்படியா.. இப்ப உண்மை வெளியே வருது. ஏன் நேற்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்திற்கு் வரவில்லை என்பது என்று பதிவிட்டிருந்தார். இதற்கு திமுக எம்பி கனிமொழி சோமு பதிலடி கொடுத்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் தவெகவுக்கும் பதிலடியாக அமைந்துள்ளது.
அதில், ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.. உங்கள் #sofamodel முதலாளி பேப்பரைக்கூட படிக்காமல் சட்டமன்றத்தில் எங்கள் இளந்தலைவரிடம் கொட்டு வாங்கியதைப்போல, யார் மக்களவை, மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார்கள், யார் யார் பங்கேற்பார்கள் என்ற அடிப்படை அறிவு துளியும் இல்லாமல் திமுகழகத்தின் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த ஊருக்கு முன்பு கதறிக் கொண்டிருக்கிறீர்கள். திமுக கூட்டணிக்குள் எம்.பி. ஆகி வசதிக்கு எஸ்கேப் ஆன திருவாளர் மாணிக்கம் தாகூர்.
சார் முதலில் நீங்களும் பேப்பரை படிக்க start பண்ணுங்க! என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சட்டசபையில் பேப்பரை படியுங்கள் என்று கூறிய முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார். அதனை வைத்தே காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவரை திமுக எம்பி கனிமொழி சோமு விளாசி இருப்பது திமுகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.