18 ஆம் பெருக்கும் பக்கத்துல இருக்குற ஊத்தும் - சிறுகதை

18-perukkum-pakkathula-irukkura-uthum-short-story
18 ஆம் பெருக்கும் பக்கத்துல இருக்குற ஊத்தும் - சிறுகதை

அன்னிக்கி ஆடி பதிநெட்டு பதினெட்டாம் பெருக்குன்னு ஊருல இருக்குற கருப்பு கோயில்கள்ல எல்லாம் கொண்டாட்டமா இருக்குது அழகர் கோயில்ல 18 படிகருப்புக்கு அன்னிக்கிவிசேசம் அதுனால அழகர் மலையில இருக்குற ராக்காச்சி அம்மன் தீர்த்தம்( நூபுரகங்கைத் தீர்த்தம் ) அதுல போய் குளிச்சிட்டு வாரது விசேசம்

காவேரிக்கரையில இருக்குறவங்க அதுலயும் தாமிரபரணிக்கரையில இருக்குறவங்க அந்த ஆத்துலயும் அன்னிக்கிக் குளிப்பாங்க

ஆனா இந்த வைகைக் கரையில இருக்குறவங்களுக்கு பெரும்பாலும் அந்த பழக்கம் இல்ல அதுக்குப்பதிலாத்தான் அழகர்கோயில்தீர்த்தம்

நாமதான் போய் அதுல குளிப்போமேன்னு யோசனை அதுக்குப்பதிலா நாகமலைப்புதுக்கோட்டைக்கிப்பக்கத்துல புல்லூத்துல குளிக்கலாம்னு ஒரு யோசனை, சரி மொதல்ல வைகையப்போய்ப்பாப்போம்னு போனோம்

மேலக்கால்னு ஒரு ஊரு சோழவந்தான் பக்கத்துல இக்கரையில இருக்கு அங்க ஒரு செக்டாமிருக்கு, அதுல குளிக்கலாம்னு திட்டம் போட்டு கெளம்புனா அப்பத்தான் பாத்து மழைச்சாரல் அடிக்குது நனைஞ்சிக்கிட்டேபோய் குளிக்கனுமான்னு ஒரு யோசனை வந்துச்சு கொஞ்சநேரம் பொறுத்துத்தான் பாக்கலாமேன்னு காத்திருந்தோம் 

சொன்னமாதிரி மழை கொறஞ்சிச்சி , ஒடனே வண்டிய எடுத்துக்கிட்டு நாகமலைப் புதுக்கோட்டை போய் அப்புடியே பைபாசில ஏறிப் போனோம்

சரியா மேலக்கால் விளக்கு வந்ததும் திரும்புனவுடனே இருந்துச்சு புல்லூத்துக்குப் போறவழி,ஒரு சின்ன சலனம் எதுக்கு அளஞ்சிக்கிட்டு பேசாம புல்லூத்துக்கே போய் குளிச்சிரலாம்னு யோசனை  வந்ததும் சம்சாரம்கிட்ட சொன்னேன்  அதுக்கு என் மேல பாஞ்சா ஆத்துல குளிக்கலாம்னு கெளம்பிட்டு நடுவில என்ன  புதுயோசனை பேசாமக் கெளம்புங்க இங்க இருந்து 6 கி.மீ தூரம்னு போர்டு போட்டிருந்துச்சு

மொதல்ல வந்தது கீழமாத்தூர் அதைத் தாண்டி மேலமாத்தூர் போகும் போதே வைகை ஆத்தப்பாத்தா வெள்ளம் கரைபுரண்டு ஓடுறது தெரிஞ்சது

பாக்க ஆசையா இருந்துச்சு. அம்புட்டுத்தண்ணி , ஆனா எறங்கிக்குளிக்க வழியில்ல. ஒரே கருவேலமுள்ளுக்காடா இருந்துச்சு ஓரமெல்லாம் அதைத்தாண்டி மேலமாத்தூர் அப்புறம் கொடிமங்கலம், தாண்டிப் போனா  ஒரு அணைக்கட்டு அது பூராம் தண்ணி ரொம்பி வழியிது அதைத்தாண்டுனதும்  திருவேடகம் போற பாலம் அதுல போய் மேல நின்னு பாத்தா கீழ வைகை ஆர்ப்பரிச்சி ஓடுது  அங்க எங்கயும் எறங்கிக் குளிக்க வசதியில்ல. அதுனால திட்டம் போட்டபடி மேலக்கால் செக் டேம் போகலாம்னு வண்டியத்திருப்பிப்போனோம்

ஒருவழியா மேலக்கால் வந்துருச்சு அதைத்தாண்டித்தான் அந்த செக் டேம் இருக்கு, அங்குனக்குள்ள விசாரிச்சப்பச் சொன்னாக அதுக்குப்போற வழி இதுதான்னு காமிச்சாக , அந்த வழியாப்போனா ஆத்துக்குள்ள எறங்குற எடத்துல சுடுகாடு அதை ஒட்டி ஒரே குப்பமேடு அதுக்கப்புறம் எல்லாம் தண்ணில முங்கிக்கெடக்குது அங்க இருந்த ஒருத்தர்கிட்டக் கேட்டோம்அவர் சொன்னாரு அங்க எல்லாமிப்பப் போகமுடியாது ஒரே வெள்ளகாடாக்கெடக்கு பேசாம இங்க ஒரு கொழா இருக்கு அதுல குளிச்சிட்டுக்கெளம்புங்கன்னாரு

அதைக்கேட்டதும் சம்சாரம் ஒரு மொறை மொறைச்சா பாருங்க  என்ன பண்ணுறது , சரி வா திரும்பிப்போகலாம், போற வழியில நாகர் தீர்த்தம் இருக்கு அதுல போய் குளிக்கலாம்னு சமாதானம்சொல்லிக்கூப்புட்டுப் போனேன், கோஞ்சதூரத்துல நாகர் தீர்த்தம் 2.0 கி.மீ நு வலது கைப்பக்கமாப் போட்டிருந்துச்சு பக்கத்துலயே மீனாட்சி அம்மன் சொக்கநாதர் கோவிலுக்குப்போகும் வழின்னு போட்டிருந்துச்சு

சரி அப்புடியே குளிச்சிட்டு ரெண்டையும் பாத்துட்டு வரலாமுன்னு அந்தப்பாதையில திரும்பிப்போனோம் 

அப்ப திரும்ப மழை ஊத்த ஆரம்பிச்சது சமாளிச்சிக்கிட்டே போனோம் , அப்பத்தான் தெரிஞ்சது நாங்க எடுத்தது தப்பான முடிவுன்னு ஏன்னு கேக்குறீங்களா அங்க போறவ்ழியில ஒருகம்மாக் கரை அதுபூராம் களிமண்ணு அது மழையில கரைஞ்சு வந்து ரோடுபூரம் கெடந்துச்சு , அதுல மனுசங்களே நடக்கமுடியல வண்டி போனா சகதில வீல் சுத்துது

அப்ப எதிர வந்த பொம்பளைங்க சொன்னாங்க வண்டில போகாதீங்க வாரி விட்டுரும் வார வழில ரெண்டுபேர் வழுக்கி விழுந்து  அடிபட்டுக் கெடக்காங்கன்னு, அப்ப வண்டில வந்த ஒருத்தர் சொன்னாரு ஒங்க சம்சாரத்த எறங்கி ஓரமா நடக்கச்சொல்லிட்டு நீங்களும் இந்த ஓரமா வண்டில வாங்க கொஞ்சதூரம்தான் அப்புறம் பிரச்சனை இல்லன்னு சொன்னாரு

அதைக்கேட்டு எடுத்தமுடிவு திரும்பவும் தப்பாப்போச்சு ஏன்னா வண்டிய விட்டுக்கீழ எறங்கி நாலடி நடக்குறதுக்குள்ள சம்சாரம் வழுக்கி விட்டு க் கீழ தொபீல்ன்னு விழுந்தாங்க 

சேலை கைகால் எல்லாம் சேறாகிப்போச்சு அப்பத் திரும்பிப்பாத்து ஒரு மொறை மொறைச்சாலே பாருங்க ஆயிசுக்கும் மறக்கமுடியாது பரவாயில்ல கொஞ்சதூரம்தான் சமாளிச்சி வந்துரு நாகர் தீர்த்தம்ல போய் எல்லாத்தையும் கழுவிட்டுக் குளிச்சிரலாம்னு சொன்னேன்அவளும் அதைகேட்டுட்டு மொனங்கிக்கிட்டே நடந்து வந்தா கொஞ்சதூரம் தான் அதுக்கப்புறம் ரோடு நல்லாயிருச்சு அப்புறம் ஒரு கி.மீ.தான்  நாகர் தீர்த்தம் வந்துருச்சு

அங்க இருந்து எதிரே வந்துக்கிட்டு இருந்தவங்ககிட்டக் கேட்டேன் ஏங்க அங்க தண்ணி நல்லா வருதா குளிக்கலாமான்னு அவரும் சொன்னாரு ஓ தாராளமா  குளிக்கலாம் ஆரும் ஒன்னும்சொல்ல மாட்டாங்க  போங்கன் னாரு, நாங்களும் போனோம்  ஒரு வழியா நாகர் தீர்த்தம் தெரிஞ்சது 
நாகமலையடிவாரத்துல ஒரு கோயில் தெரிஞ்சது அதுக்கு முன்னாடி நாகர் தீர்த்தம் போகும் வழின்னு போட்டிருந்துச்சு. அங்கயும் விசாரிச்சேன்  குளிக்கலாமான்னு அங்க இருந்தவர் சொன்னாரு ஓ தாரளமா குளிங்கன்னு

அங்க தூரத்துல எழுதியிருந்துச்சு நாகர் தீர்த்தம்னு நாங்களும் குளிக்க எல்லா துணிமணிய எடுத்துக்கிட்டுப் பக்கத்துல போனா அங்க எங்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது அரும்பாடு பட்டு விழுந்து எந்திரிச்சி வந்தது இதுக்குத்தானான்னு  வருத்தமாப்போச்சு

அங்க சின்ன வீட்டுக்கொழாயில வாரமாதிரி தண்ணீர் வழிஞ்சிக்கிட்டு இருந்துச்சு. அங்க இருந்தவர் சொன்னாரு இதுல நீங்க தாராளமாக் குளிக்கலாம் நானிதுலதான் குளிச்சேன்னு சொன்னாரு 

அங்க பக்கத்துல நாளைஞ்சு பொம்பளைங்க பொங்கல் வைச்சிக்கிட்டு இருந்தாங்க  எங்களுக்குச் சப்புன்னு போச்சு இருந்தாலுமிம்புட்டுத் தூரம் வந்துட்டமே நு சொல்லிட்டு தீர்த்தத்தைத் தலையில தெளிச்சிக்கிட்டு சாமியையும் கும்புட்டுட்டு கெளம்புனோம். ரொம்ப ஏமாத்தமாப் போச்சு
சம்சாரம் அப்ப சொன்னா நாம கெளம்பும் போதே எதுக்க அந்தப் பொம்பளை  வந்துச்சு  அது மூஞ்சில முழிச்சாலே போற காரியம் வெளங்காது  பல தடவ இப்புடி ஆயிருக்கு  என்னத்தச்சொல்ல நேரம் சரியில்லன்னு முக்குனா

இப்ப நான் சொன்னேன் சரி வா நமக்குக் குடுத்து வைச்சது அவ்வளவுதான் பேசாமத்திரும்பிப்போவோம்னு , அதுக்கு அவ சொன்னா சரி வாங்க வீட்டுல போய் கொழாயில குளிக்க வேண்டியதுதான்னு 

ரெண்டு பேரும் மனசுஒடைஞ்சு திரும்பி வீட்டுக்குக் கெளம்பினோம்.  திரும்ப கொடிமங்கலம் மேலமாத்தூர் தாண்டி கீழமாத்தூர்வந்து பைப்பாசில திரும்ப ஏறுறதுக்கு முன்னாடி மறுபடியும் அந்தப் பலகை கண்ணுல பட்டுச்சு புல்லூத்துபோகும்வழி(2.0 கி.மீ)னு

இப்ப நான் சம்சார்த்தைப்பார்த்தேன் அப்ப மழை வேற திரும்பத்தூறிச்சி. 

இப்ப நான் சொன்னேன் வா அங்கபோகலாம் நு ஆனா சம்சாரம் சொல்லிச்சி ஏற்கனவே வழுக்கி விழுந்தது போதாதா ஒழுங்கா வீட்டுக்குப்போகலம் வாங்கன்னா
ஆனா நான் சொன்னேன் வா வந்தது வந்துட்டோம் இதையும் போய்ப் பாத்துடலாம் வா போகலாம்னு அதுக்கு அவ அரை மனசாக் கெழம்புனா

நல்ல வேளை இந்தப்பாதை நல்லாவே இருந்துச்சு. சேறு இல்ல நல்ல தார் ரோடு அதுல போனா ஒன்னரைக் கி.மீ தாண்டுனவன்ன மண்ரோடு வந்துச்சு நல்லவேலை அதுலயும் சேறு இல்ல

கிட்டத்தட்ட புல்லூத்து நெருங்கிட்டோம் அங்கயும் ஒரு அதிர்ச்சி காத்திருந்துச்சு. போற வழில இருந்த கேட் மூடிருந்துச்சு. அதைப்பாத்ததும் என்ன சம்சாரம் நெத்திக்கண் இருந்தா எரிச்சிருப்பா, நல்ல வேல அது இல்ல ஆனா அத வார்த்தையில காட்டுனா நான் வழிஞ்சேன் மன்னிச்சிரு தாயி தப்புத்தான்னு கன்னத்தில போடாத கொறை

அப்பத்தான் அந்த அதிசயம் நடந்துச்சு, 

எதுத்தாப்புல ஒரு சாமியார் மாதிரி ஒருத்தர் வந்தார் வேகமா வந்தவர் எங்களைப்பாத்துட்டு கொஞ்சம் நின்னார் என்னா குளிக்க வந்தீங்களான்னு கேட்டார், நாங்க ஆமாம் சாமினு தலையசைக்கவும் சொன்னார் அந்த கேட்டுக்குப் பக்கத்துல போய் பாருங்க வழி இருக்கு அதுதான் புல்லூத்துக்குப்போறவழி அதுல போங்க கொஞ்சதூரத்துலயே புல்லூத்து வந்திரும் நல்லாக்குளிச்சிட்டு அங்க ஒரு கோயிலிருக்கும் அதுல கும்புட்டுட்டுப்போங்க அதுதான் இங்க காவல் தெய்வம்னு சொல்லிட்டு வேகமாப்போய்ட்டார்

நாங்களும் கேட்டுக்குப்பக்கத்துல போய் பாத்தா ஒத்தையடிப்பாதை ஒன்னு போச்சு அது வழியாப்போனா அங்க ஒரு மரத்தடில சாமிக செலைகள் இருந்துச்சு அதுக்குப்பின்னாடி பாத்தா எங்களுக்கு ஆச்சர்யம் அழகா ஒரு கல்லுல தொட்டி அதுல ஒரு தண்ணி வார வழி அதுல தண்ணி கொட்டிக்கிட்டு இருந்துச்சு. ஒரே சந்தோசம். எறங்கி ஒவ்வொருத்தாராக் குளிச்சோம். ஆனந்தமா இருந்துச்சு. 

அந்த சுனைநீரோட சுவை அடாடா அப்புடி ஒரு இனிப்பு , நல்லா ஆசை தீர மாத்தி மாத்திக் குளிச்சோம்காலையில இருந்து அலை அலைனு அலைஞ்சாலும் கடைசில இப்புடி ஒரு கொடுப்பினை கெடைக்கும்னு நெனைச்சிப்பாக்கவே இல்ல குளிச்சிட்டு அந்தக்காவல் தெய்வத்தைக் கும்புட்டோம். 
அப்ப தூரத்துல எங்கயோ ரேடியோ பாடுற சத்தம் கேட்டது அதுல "இருக்குமிடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானதங்கமே அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமேன்"னு பாடுனார்

அப்ப நான் சொன்னேன் இது பாரு பக்கத்துல அழகா இருந்துருக்கு இதை விட்டுட்டு எங்க எங்கயோ அலைஞ்சிருக்கோம்  

நமக்குத்தேவையானது பக்கத்துலயே இருக்கும் ஆனா அதைப்பாக்காம வேற எங்கயோ தேடுவது நமக்கு வழக்கமாப்போச்சுன்னு சொன்னேன்.

அதுக்கு சம்சாரம் சொன்னா ஆமா வெட்டியா அளைஞ்சிருக்கோம்  காஸ்மீர்ல போய் பூந்தோட்டங்களைப்பாத்தப்ப அங்க இருந்த ஒருத்தர் ஒங்க ஊரில ஊட்டில இல்லாத பூ இங்க ஒன்னுமில்ல அதுக்கு முன்னாடி இதெல்லாம் பெருசில்ல அதைப்போய்ப் பாருங்கன்னு சொன்னது நெனவுக்கு வந்துச்சு

அப்ப நான் சம்சாரத்துக்கிட்டக்கேட்டேன் ஏம்மா அந்தப்பொம்பளை மூஞ்சில முழிச்சதுனாலதான் அலைச்சல்னு சொன்னீயே இப்ப என்ன சொல்றன்னு அதுக்கு அவசொன்னா அசராம அதுமூஞ்சில முழிக்கலைன்னா நேரடியா இங்க வந்திருப்போம் அலைச்சல் இல்லாமன்னு, ஒங்களுக்கு ஏதாவது புரிஞ்சதா, புரிஞ்சிருக்கும் நீங்களும் கல்யாணம் ஆனவங்கதான....

அ.முத்துவிஜயன்