நாலு பேரு சொல்றத கேளுங்க!
நான்கு என்ற சொல்லுக்கு
ஒரு தனிச் சிறப்பு உண்டு.
பல விசயங்கள் இந்த நான்கில் அமைவதைக் காணலாம்.
திசைகள் நான்கு.
வேதங்கள் நான்கு.
பிரமனுக்கு முகங்கள் நான்கு.
மாதா, பிதா, குரு, தெய்வம் நான்கு.
சமயக் குரவர்கள் நால்வர்.
சந்தான குரவர்கள் நால்வர்.
தனு, கரண, புவன, போகங்கள் நான்கு.
கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என யுகங்கள் நான்கு.
தாச மார்க்கம், சற்புத்திர மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம் என மார்க்கங்கள் நான்கு.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என சைவ நெறிகள் நான்கு.
சாலோகம், சாரூபம், சாமீபம், சாயுச்சியம் என முத்தி நிலைகள் நான்கு.
சனகர், சனந்தர், சனாதனர், சனற்குமாரர் என இறைவனிடம் உபதேசம் கேட்டவர்கள் நால்வர்.
இப்படி பல விடயங்கள் இந்த நாலில் அடக்கம்.
நாலு பேர் போன வழியிலே
போ என்பார்கள்.
நாலு பேரு சொல்றத கேளுங்க
என்பார்கள்.
இது வழக்கமாக எப்பவுமே கேட்குற மாதிரி இருக்கும்.
அந்த காலத்துல இதைத்தான் சொல்லுவாங்க.
யாருப்பா அந்த நாலு
பேருன்னு நமக்கு
நினைக்க தோணும்.
பக்கத்து வீட்டுக்காரன்,
எதிர்த்த வீட்டுக்காரன் அப்படி,இப்படினு
நாலு பேரா இருக்குமோனு நினைக்கிறோம்.
ஏற்கனவே பக்கத்து வீட்டுக்காரங்களை பார்த்து தான் நாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்.
எங்க ? நாம நம்ம
வாழ்க்கையை வாழ்கிறோம்?
அது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.
இங்க நாம சொல்ல வர்ற
நாலு பேரு யாருன்னு கேட்டா?
இவங்க இல்லன்னா சிவம் இல்லை ன்னு சொல்ற அளவுக்கு பக்தி நெறி
மட்டும் காட்டாம முக்தி நெறி காட்டுனவங்க தான் இவங்க.
இப்போது புரியும்னு நினைக்கின்றோம்.
அந்த நாலு பேரு வேறு
யாரும் அல்ல.
சம்பந்தர், அப்பர் (திருநாவுக்கரசர்), சுந்தரர், மாணிக்கவாசகர்.
இவங்கள கெட்டியா பிடிச்சுக்குவோம்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா சிவ புண்ணியம் செய்தவங்க.
இவர்களோட அடியொற்றி நாமும் இனிமே நமது கடமைகளை செய்ய முயற்சி செய்யணும்.
சரி, அடுத்ததாக நால்வர் துதியோடு பதிவினை தொடர்ந்து படிப்போமா?
பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!
ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி!
வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!
ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!
(உமாபதி சிவாச்சாரியார்)
இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும்.
சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.
1.பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்),
வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் ( சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.
2.ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி :
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்.
"கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமச்சிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.
3.வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி :
திரு நாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா !) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.
4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி :
உலகம், உய்ய, தம்,
அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.
இந்த பதிவின் நிறைவாக
நால்வர் காட்டிய வழியை
பற்றி தெரிந்து கொள்வோம்
தில்லையில் நான்கு திசைகளின் வாசல் வழியாக நால்வர் பெருமக்கள் வந்ததாக தல வரலாறு கூறுகிறது.
திருஞானசம்பந்தர் - தெற்கு வாசல்
திருநாவுக்கரசர் - மேற்கு வாசல்.
சுந்தரர் - வடக்கு வாசல்.
மாணிக்கவாசகர் - கிழக்கு வாசல்.
ஏன் நான்கு வழிகளில் வந்தார்கள்?
ஒரே வழியிலேயே வந்திருக்கலாமே?
இதுவும் திருவருளே!
பிற்காலத்தில் நாம் அறிய அன்றே தில்லை கூத்தன் செய்த செயலே அது எனலாம்.
பேரின்பமான திருச்சிற்றம்பலத்தின் திருவடியை நாம் அடைய வேண்டுமானால் நான்கு வழிகள் (மார்க்கம்) உள்ளன.
திருஞானசம்பந்தர்
சற்புத்திரமார்க்கம்: (அப்பா மகன்)
திருநாவுக்கரசர்
தாச மார்க்கம் (முதலாளி - பணியாள்)
சுந்தரர்
சக மார்க்கம் (தோழன்)
மாணிக்கவாசகர்
சன் மார்க்கம் (தலைவன் - தலைவி)
இந்த நான்கு மார்க்கங்களில் ஏதேனும் ஒன்றை சிக்கனப்பிடித்து தில்லை கூத்தனின் திருவடி அடைய முயற்சிப்போமாக...!
~மகிழா.